தேடுதல்

தாமிரபரணி ஆற்றில் சங்கு மண்டபம் தாமிரபரணி ஆற்றில் சங்கு மண்டபம் 

பூமியில் புதுமை – முன்னோர்களின் நீர் மேலாண்மை அறிவியல்

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, சங்கு கல் மண்டபத்துக்குள் குறிப்பிட்ட அளவுக்குமேல் நீர்மட்டம் உயர்ந்தால், மண்டபத்தின் உச்சியிலுள்ள சங்கு, மிகுந்த சப்தத்துடன் ஒலிக்கும்

மேரி தெரேசா - வத்திக்கான்

தண்பொருநை என்றழைக்கப்படும் தாமிரபரணி ஆற்றங்கரை மக்களின், வெள்ளநீர் மேலாண்மை, பாரம்பரியம் மிக்கது. இதற்குக் காரணம், 1810, 1827,1869, 1874, 1877, 1895 ஆகிய ஆண்டுகளில் தாமிரபரணியில் பொங்கிய வெள்ளம், ஆழ்வார் திருநகரி, ஸ்ரீவைகுண்டம், கொங்கராயன்குறிச்சி ஆகிய ஊர்களை அழித்தது. ஏராளமான மக்கள் உயிரிழந்தனர். இதில் பாடம் கற்றுக்கொண்ட மக்கள், நதிக்கரை எங்கும் வெள்ள நீர் வடிகால்களைக் கட்டினார்கள், கால்வாய்களை வெட்டினார்கள். குடியிருப்புகளையும் ஆற்றின் இயல்புக்கேற்ப அமைத்தார்கள். மேலும், வெள்ள அபாயங்களை அறிவியல்பூர்வமாக அறிந்துகொண்ட மக்கள், ஆழ்வார் திருநகரி தாமிரபரணி ஆற்றின் நடுவே கல்மண்டபம் ஒன்றை அமைத்தார்கள். இது, சங்கு மண்டபம் எனவும் அழைக்கப்படுகிறது. மூன்று பக்கம் திறந்தவெளியுடனும், தண்ணீர் வரும் எதிர்பக்கம் மட்டும், கல்சுவராலும் கட்டப்பட்டுள்ளது. இதன் பின்பக்க கல்சுவரின் வெளிப்புற உச்சியில் சங்கு போன்ற அமைப்பு உள்ளது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, இந்த மண்டபத்துக்குள் குறிப்பிட்ட அளவுக்குமேல் நீர்மட்டம் உயர்ந்தால், வெள்ளத்தின் இரைச்சலால் காற்று உந்தப்பட்டு, அந்தச் சங்கு, மிகுந்த சத்தத்துடன் ஒலிக்கும். இந்த ஒலியை வெள்ள அபாய அறிவிப்பாக மக்கள் அறிந்துகொண்டு மேடான பகுதிக்கு இடம்பெயர்ந்துவிடுவார்கள். தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகமானால் சங்கின் ஒலி நின்றுவிடும். அப்படி நின்றுவிட்டால் சங்குமட்டத்துக்கு நீர் வந்துவிட்டது என்றும், கரைகடந்து ஊருக்குள் வெள்ளம் நுழைந்துவிட்டது என்றும், மக்கள் அறிந்துகொள்வார்கள். நீர்மட்டம் குறைய குறைய, சங்கின் ஒலி, சிறிது சிறிதாகக் குறைந்து அடங்கிவிடும். அப்போது, அபாய நிலையில் இருந்து மீண்டு விட்டோம், வெள்ளம் வடியத் தொடங்குகிறது என்று அறிந்துகொண்டு மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவார்கள். இந்தளவுக்கு நம் முன்னோர்கள், இயற்கையையும் தொழில்நுட்பத்தையும் இணைத்து வாழ்ந்துள்ளனர். (நன்றி - இந்து தமிழ் திசை, விகடன்)

கடந்த ஒரு நூற்றாண்டாக அந்த அளவுக்கு தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் வந்ததில்லை என்பதால், தற்போது அந்த மண்டபத்தின் சங்கு, இன்னும் இயங்கும் நிலையில் இருக்கிறதா என்பது தெரியவில்லை என்று, செய்திகள் கூறுகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 June 2019, 15:44