கடற்கரையில் குவிந்து கிடக்கும் நெகிழிப் பொருள்கள் கடற்கரையில் குவிந்து கிடக்கும் நெகிழிப் பொருள்கள் 

பூமியில் புதுமை: நெகிழி மாசுபாட்டைக் குறைக்க எளியவழி

பெருங்கடல்களில் குவிந்திருக்கும் நெகிழி குப்பைகளில் ஏறத்தாழ எண்பது விழுக்காடு, கடும் வறுமை நிலவும் வளரும் நாடுகளிலிருந்து கொட்டப்பட்டவை என்று, IBM நிறுவனம் கண்டுபிடித்துள்ளது

மேரி தெரேசா - வத்திக்கான்

ஒரு காலத்தில் “கழிப்பறை கிண்ணம்”என்ற புனைப்பெயருடன் அழைக்கப்பட்ட, பிலிப்பீன்ஸ் நாட்டின் மனிலா வளைகுடா கடற்கரை, அதுதானா என வியக்கும் அளவுக்கு தற்போது அவ்வளவு சுத்தமாக இருக்கிறதாம். இந்த மாற்றத்தைப் பார்த்து அப்பகுதி மக்களே ஆனந்தக் கண்ணீர் வடிக்கின்றார்களாம். இவ்வாண்டு சனவரி 27ம் தேதி, ஐந்தாயிரம் தன்னார்வலர்கள் இணைந்து அந்தக் கடற்கரையில் குவிந்திருந்த குப்பைகளை அகற்றும் பணிகளைத் தொடங்கினர். தற்போது அந்தக் கடற்கரையில் 45 டன்களுக்கு அதிகமான குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. இதற்கு முதல் காரணம், 2018ம் ஆண்டு டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில், புரூக்ளினை மையமாகக் கொண்ட Bounties என்ற வலைத்தள அமைப்பு, மனிலா வளைகுடா பகுதியின் ஒரு சிறு குழுவினருக்கு, பெரும்பாலும் மீனவ மக்களுக்கு, ஒரு சிறிய டிஜிட்டல் தொகையைக் கொடுத்து, இரண்டே நாள்களில் மூன்று டன்கள் குப்பைகளை அகற்றச் செய்தது. ஒவ்வொரு குப்பைக் குழியை சுத்தம் செய்வதற்கு, டிஜிட்டல் பணம் வழங்கப்பட்டது. இந்த பணத்தை வைத்து குறிப்பிட்ட கடைகளில் மக்கள் பொருள்கள் வாங்கலாம். இந்த முறையில் ஆர்வம்கொண்ட பிலிப்பீன்ஸ் மீனவர்கள், டிஜிட்டல் முறையில் சிறிய தொகையைப் பெற்றுக்கொண்டு, மனிலா வளைகுடா கடற்கரையைச் சுத்தம் செய்துள்ளனர். இந்த வலைத்தள அமைப்பினர், இந்த முறையின் வழியாக, பெருங்கடல் மாசுபாட்டைக் குறைப்பதற்கு முயற்சித்து வருகின்றனர். அதேபோல், 2018ம் ஆண்டு செப்டம்பரில், வான்கூவர் நகரை மையமாக வைத்து செயல்படும் Blockchain என்ற நிறுவனம், பிலிப்பீன்ஸ் நாட்டின், லுசோன் பெரிய தீவின் தென்பகுதியிலுள்ள Naga நகரில், டிஜிட்டல் பணம் கொடுத்து, மறுசுழற்சி செய்யும் பொருள்களை வர்த்தகம் செய்ய உதவியுள்ளது. இதற்கிடையே பெருங்கடல்களில் குவிந்திருக்கும் நெகிழி குப்பைகளில் ஏறத்தாழ எண்பது விழுக்காடு, கடும் வறுமை நிலவும் வளரும் நாடுகளிலிருந்து கொட்டப்பட்டவை என்று, IBM நிறுவனம் கண்டுபிடித்துள்ளது என பிபிசி ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 June 2019, 14:21