குன்னூர் ஆற்றில் குவிந்துள்ள 800 டன் கழிவுகளைச் சுத்தப்படுத்தும் மக்கள் குன்னூர் ஆற்றில் குவிந்துள்ள 800 டன் கழிவுகளைச் சுத்தப்படுத்தும் மக்கள்  

பூமியில் புதுமை:குப்பைகளை அகற்ற களமிறங்கிய உள்ளூர் மக்கள்

குன்னூர் ஆறு, வனப்பகுதியில் ஊற்றெடுத்து, தெளிந்த நீராக குன்னூர் நகரை வந்தடைந்து, நகரின் ஒட்டுமொத்த கழிவையும் சுமந்து, கறுப்பு நிறத்தில் சாக்கடை நீராக மாறி, மீண்டும் வனப்பகுதியில் பயணித்து பவானி ஆற்றில் கலக்கிறது

மேரி தெரேசா - வத்திக்கான்

தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில், ஓடுகின்ற குன்னூர் ஆறு, வனப்பகுதியில் ஊற்றெடுத்து, தெளிந்த நீராக குன்னூர் நகரை வந்தடைந்து, நகரின் மையப்பகுதியில் பயணித்து, ஒட்டுமொத்த கழிவையும் சுமந்து கறுப்பு நிறத்தில் சாக்கடை நீராக மாறி, மீண்டும் வனப்பகுதியில் பயணித்து பவானி ஆற்றில் கலக்கிறது. இந்த ஆறு அந்த மாவட்டத்தில் அதிகம் மாசடைந்த ஆறுகளில் ஒன்றாக உள்ளது. கழிவுகளால் நீர் தேங்கி நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்த நீரைப் பருகும் யானைகள், காட்டு மாடுகள் உள்ளிட்ட விலங்குகளும் பாதிக்கப்படும் நிலை நீடிக்கிறது. இந்த ஆறு, குன்னூரின் மையப் பகுதியில், ஏறத்தாழ ஒரு கிலோமீட்டர் அளவுக்கு ஓடுவதால், அந்நகரிலுள்ள ஏறத்தாழ ஒரு இலட்சம் மக்கள், தங்கள் வீடுகளின் கழிவுகளையும் குப்பைகைகளையும், பெரும்பாலும் அந்த ஆற்றிலே கொட்டுகின்றனர் எனவும், அந்நகரிலுள்ள கடைகள், உணவகங்கள், இறைச்சிக் கடைகள், நெகிழிகள் என, எல்லா இடங்களின் கழிவுகளும், குப்பைகளும் இந்த ஆற்றிலே கொட்டப்படுகின்றன எனவும் சொல்லப்படுகின்றது. எனவே, ஒரு காலத்தில் குன்னூரின் அடையாளமாக இருந்த இந்த ஆறு, இன்றைக்கு அவமானமாகவே மாற்றப்பட்டுவிட்டது என்று சொல்லி, `சுத்தமான குன்னூர்’என்ற பெயரில், நகர மக்கள் மற்றும் தன்னார்வலர்கள், ஆற்றைத் தூய்மைப்படுத்த முடிவுசெய்து களத்தில் இறங்கியுள்ளனர். பல ஆண்டுகளாகத் தொடர்ந்து கழிவுகள் கொட்டப்படுவதாலும், தூர் வாரப்படாததாலும் ஆற்றில் இரண்டு அடி ஆழத்துக்குமேல் கழிவுகள் குவிந்துள்ளன. இதனால் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் ஏறத்தாழ 800 டன் கழிவுகள் இருக்கலாம் எனக் கணக்கிட்டு, ஐம்பதுக்கும் அதிகமான மக்கள்,  கடந்த இருபது நாள்களாக, இந்த துப்புரவுப் பணியைச் செய்து வருகின்றனர்.  பொக்லைன் இயந்திரம் கொண்டும் ஆற்றைத் தூய்மைப்படுத்தி வருகின்றனர். ஆற்றில் குப்பை கொட்டினால் அபராதம் என்ற விளம்பரத் தட்டியையும், அவர்கள் வைத்துள்ளனர். (நன்றி - ரா.சதீஸ்குமார், கே.அருண், விகடன்)

வாழ்விடங்கள், பணியிடங்களை மட்டுமன்றி, இயற்கை அன்னையைப் பாதுகாத்து, தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 June 2019, 14:34