தேடுதல்

Vatican News
உயிர் பன்முகத்தன்மையின் இழப்புகளில் ஒன்றாக அழிந்துவரும் சிட்டுக்குருவிகள் உயிர் பன்முகத்தன்மையின் இழப்புகளில் ஒன்றாக அழிந்துவரும் சிட்டுக்குருவிகள்  (AFP or licensors)

பூமியில் புதுமை – இயற்கையை அழிக்கும் உரிமை கிடையாது

ஆயிரமாயிரம் உயிரினங்கள், தங்கள் வாழ்வால், இறைவனுக்குப் புகழ் வழங்காமல் போவதற்கு, நாமே காரணம். நமக்கு அந்த உரிமை கிடையாது - திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதிய, 'இறைவா உமக்கே புகழ்' (Laudato Si' - On Care for Our Common Home) என்ற திருமடலின் முதல் பிரிவில், நம் பொதுவான இல்லத்திற்கு நிகழ்வதென்ன (What is Happening to our Common Home) என்ற கேள்வியை எழுப்பி, ஒரு சில விளக்கங்களை வழங்கியுள்ளார். இப்பிரிவின் மூன்றாம் பகுதியில், உயிர் பன்முகத்தன்மையின் இழப்பு (Loss of Biodiversity) என்ற தலைப்பில் திருத்தந்தை கூறியுள்ள கருத்துக்களில் ஒரு சில பகுதிகள்:

பொருளாதாரம், வணிகம் மற்றும் உற்பத்தி ஆகியவற்றின் குறுகிய கண்ணோட்ட அணுகுமுறைகளால், பூமியின் ஆதார வளங்கள் சூறையாடப்படுகின்றன. காடுகள், மற்றும் மரங்கள் அடர்ந்த பகுதிகளின் அழிவு, உணவாக மட்டுமல்ல, நோய்களுக்கு மருந்தாகவும் விளங்கும் பல்வேறு உயிரினங்களின் இழப்பை உருவாக்குகிறது.

பாலூட்டிகள், அல்லது, பறவைகளின் அழிவை நாம் கண்கூடாகக் காண்பதால், அது நம்மைக் கலக்கமுறச் செய்யலாம். ஆனால், இயற்கைக் சூழலுக்கு நன்மைகளைக் கொணர்வதற்கும், இயற்கையின் சமநிலைத் தன்மையை உறுதிசெய்வதற்கும் அவசியமான காளான்கள், கடல் பாசிகள், புழுக்கள், பூச்சிகள், எண்ணிலடங்கா நுண்ணுயிர்கள் அழிவதை நாம் காண்பதில்லை.

ஒவ்வோர் ஆண்டும், ஆயிரக்கணக்கான தாவரங்களும், விலங்குகளும் காணாமல் போகின்றன. இவற்றின் அழிவை நாம் உணர்வதில்லை, நம் குழந்தைகள் இந்த உயிரினங்களைக் காணப்போவதில்லை. உயிரினங்களின் அழிவு, மனிதர்களின் செயல்பாடுகளுடன் பெருமளவு தொடர்புடையது. ஆயிரமாயிரம் உயிரினங்கள், தங்கள் வாழ்வால், இறைவனுக்குப் புகழ் வழங்காமல் போவதற்கு, நாமே காரணம். நமக்கு அந்த உரிமை கிடையாது. (எண் – 32,33,34)

25 June 2019, 15:36