நிலத்தில் வளர்ந்திருக்கும் தாவரங்கள் நிலத்தில் வளர்ந்திருக்கும் தாவரங்கள் 

பூமியில் புதுமை : அழிந்துபோன 571 தாவர இனங்கள்

தாவரங்களே நமக்கு ஆக்சிஜனைக் கொடுக்கின்றன, உணவைத் தருகின்றன, பூமியின் சுற்றுச்சூழலுக்கு முதுகெலும்பாகவும் இருக்கின்றன.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

ஒரு குறிப்பிட்ட விலங்கினம் முற்றிலுமாக அழிந்துவிட்டது அல்லது அழியும் நிலையில் இருக்கிறது என்ற செய்தி, அவ்வப்போது வெளியாவது வழக்கம். ஒரு பக்கம் விலங்குகளின் அழிவு இருக்க, மறுபுறம், உலகம் கவனிக்க மறந்த ஒன்றாக இருக்கிறது, தாவரங்கள் அழிந்து வரும் விடயம்.

இராயல் பொட்டானிக்கல் கார்டன், மற்றும், ஸ்டாக்கோம் பல்கலைக்கழகத்தைச் (Stockholm University) சேர்ந்த ஆய்வாளர்கள், ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில், 18ம் நூற்றாண்டின் மத்தியில் துவங்கி, தற்போது வரை, அதாவது, கடந்த 250 ஆண்டுகளில், அழிவுக்கு உள்ளாகியிருக்கும் தாவர இனங்களின் எண்ணிக்கை, 571 என்ற அதிர்ச்சியான தகவலை குறிப்பிட்டிருக்கிறார்கள்.

``தாவரங்கள்தான் இந்த உலகில் உயிர்கள் வாழ்வதற்குப் பேருதவியாக இருந்து வருகின்றன. தாவரங்களே, நாம் சுவாசிப்பதற்குத் தேவையான ஆக்சிஜனைக் கொடுக்கின்றன, நமக்குத் தேவையான உணவைத் தருகின்றன, இந்த பூமியின் சுற்றுச்சூழலுக்கு முதுகெலும்பாகவும் இருந்து வருகின்றன. எனவே இந்த அழிவு, நிச்சயமாகக் கவலைப்படக்கூடிய ஒன்றுதான்", என்கிறார். ஆய்வாளர்களில் ஒருவரான முனைவர் எய்மர் நிக் லுகாதா (Dr Eimear Nic Lughadha). பூமியிலிருந்து காணாமல் போன விலங்குகள், பாலூட்டிகள், மற்றும் நீர் வாழ் உயிரினங்களை விட, இரு மடங்கு அதிகமான எண்ணிக்கையில், தாவரங்கள் அழிந்துள்ளன என்ற தகவலையும் இவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இது நிச்சயமாக உலகம் முழுவதும் மிகப் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். காரணம், உலகில் பலரின் உணவுத் தேவையைத் தீர்த்து வைப்பது தாவரங்கள்தான். இவ்வாறு பாதிக்கப்படும் உயிரினங்களின் பட்டியலில் மனிதரும் அடங்கியிருக்கிறார்கள். மனிதரை நம்பி இயற்கை இல்லை, இயற்கையை நம்பித்தான் மனிதர் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டிய காலம் இது. (நன்றி : விகடன்)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 June 2019, 15:43