தேடுதல்

இந்தியாவின் பாரம்பரிய நெல் வகைகளில் சில... இந்தியாவின் பாரம்பரிய நெல் வகைகளில் சில... 

பூமியில் புதுமை – பாரம்பரிய நெல் வகைகளைப் பாதுகாப்போம்

பழமையும், பெருமையும் மிகுந்த பாரம்பரிய நெல்லைக் குறித்து சில விவரங்களை, கட்டற்ற கலைக்களஞ்சியமான ‘விக்கிப்பீடியா’வின் உதவியோடு அறிந்துகொள்ள முயல்வோம்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

ஜூன் 8,9 ஆகிய இரு நாள்கள், திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டிக்கருகே, ஆதிரெங்கம் கிராமத்தில், 13வது தேசிய நெல் திருவிழா நடைபெற்றது. இந்திய மண்ணுக்கே உரிய பாரம்பரிய நெல் விதைகளைச் சேகரித்து, உழவர்களுக்கு மீண்டும் அறிமுகம் செய்து, பாரம்பரிய வேளாண்மையை வளர்ப்பதற்கு அயராது உழைத்த நெல் ஜெயராமன் அவர்கள், தான் பிறந்து, வளர்ந்த ஆதிரெங்கம் கிராமத்தில், 2006ம் ஆண்டிலிருந்து, நெல் திருவிழாவை நடத்திவந்தார். கடந்த 12 ஆண்டுகளாக, நெல் திருவிழாவை நடத்திவந்த நெல் ஜெயராமன் அவர்கள், சென்ற ஆண்டு டிசம்பர் 6ம் தேதி காலமானதையடுத்து, அவர் இல்லாமல், முதல் முறையாக, இந்த நெல் திருவிழா நடத்தப்பட்டது.

இத்திருவிழாவையொட்டி, பழமையும், பெருமையும் மிகுந்த பாரம்பரிய நெல்லைக் குறித்து சில விவரங்களை, கட்டற்ற கலைக்களஞ்சியமான ‘விக்கிப்பீடியா’வின் உதவியோடு அறிந்துகொள்ள முயல்வோம்.

இந்தியாவில், பல்லாயிரம் பாரம்பரிய நெல் வகைகள் இருந்ததெனச் சொல்லப்படுகிறது. பசுமைப்புரட்சியின் விளைவாக, இந்தியாவில், பாரம்பரிய நெல் வகைகள் அழிந்துவிட்டன. தற்போது, மீண்டும், இந்தியாவெங்கும், பாரம்பரிய நெல் வகைகளைப் பாதுகாக்கும் முயற்சிகள், மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

‘கிரியேட்’ என்கிற அரசு சாரா அமைப்பு, ‘நமது நெல்லைக் காப்போம்’ என்ற திட்டத்தின் வழியே, பாரம்பரிய நெல் வகைகளைக் காக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இவ்வமைப்பினர் ஒவ்வோர் ஆண்டும் நெல் திருவிழாவை முன்னின்று நடத்துகின்றனர். தமிழ்நாடு முழுவதும் இதுவரை 18,000 விவசாயிகளுக்குப் பாரம்பரிய விதை நெல் வகைகளை இவ்வமைப்பினர் வழங்கியுள்ளனர்.

உளுந்தூர்பேட்டை, ஸ்ரீசாரதா ஆசிரமம், பாரம்பரிய நெல் வகைகளில் 150 வகைகளை சேகரித்து, விழுப்புரம் மாவட்டத்து விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கி, பயிரிட ஊக்குவிக்கிறது. இவ்வழியாக, பாரம்பரிய நெல் விதைகளைப் பாதுகாத்து வருகின்றது. பாரம்பரிய நெற்பயிரை 120 கிராமங்களைச் சேர்ந்த 1,500 பெண்விவசாயிகள் பயிரிட்டு பலனடைந்துள்ளனர்.

பாரம்பரிய நெல் வகைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மருத்துவக் குணம் கொண்டவையாகவும், பொதுவாக அனைத்துமே எளிதில் சீரணமாகக்கூடியவையாகவும், மலச்சிக்கலை நீக்கும் தன்மை, மற்றும், நரம்புகளை பலப்படுத்தும் தன்மை கொண்டவையாகவும் கருதப்படுகின்றன.

பாரம்பரிய நெல் வகைகள் நீளமாக வளரக்கூடியவை. மாட்டுக்கு வைக்கோல், மண்ணுக்குத் தழைச்சத்து, விவசாயிக்கு நெல் என பன்னோக்கில் பயன் தரக்கூடியவையாக பாரம்பரிய நெல் வகைகள் அமைகின்றன.

நவீன வகை நெற்பயிரின் வைக்கோலில் சத்து இல்லாததால் அந்த வைக்கோலை உண்ணும் பசுக்களுக்கு, பால் அதிகம் சுரப்பதில்லை. இந்தக் குறைபாடுகள், பாரம்பரிய நெற்பயிரின் வைக்கோலில் ஏற்படாது.

அன்னமிளகி, அறுபதாங்குறுவை, பூங்கார், மைசூர்மல்லி, குடவாழை, காட்டுப்பொன்னி, மஞ்சள் பொன்னி, கருப்புச் சீரகச்சம்பா, கட்டிச்சம்பா, குதிரைவால் சம்பா, சிவப்புக் கவுணி, மிளகுச்சம்பா என்று, 162 பாரம்பரிய நெல் வகைகளை ‘விக்கிப்பீடியா’ பட்டியலிட்டுள்ளது. முன்னொரு காலத்தில், இந்திய மண்ணில் வளர்ந்த இந்த நெல் வகைகளின் பெயர்களை ஒருமுறையாகிலும் முற்றிலும் படித்து, வாயாரச் சொல்லி மகிழ்வோம். (ஆதாரம் - ‘விக்கிப்பீடியா’)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 June 2019, 15:51