தேடுதல்

Vatican News
இத்தாலியின் பெருநகர் ஒன்றில் சாலையோரம் வீசப்பட்டுள்ள வீட்டுக் குப்பைகள் இத்தாலியின் பெருநகர் ஒன்றில் சாலையோரம் வீசப்பட்டுள்ள வீட்டுக் குப்பைகள்  (ANSA)

பூமியில் புதுமை – குப்பையைப்பற்றிய தெளிவு தேவை

ஒவ்வொருவரும் நம் வீட்டுக் குப்பையை பொறுப்புடன் கையாண்டால், நம் தெருக்களில் சேரும் குப்பை, நான்கில் ஒரு பங்காகக் குறையும்; நம் நல வாழ்வோ, நான்கு மடங்காக உயரும்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

‘துணிப்பை பிரசாரகர்’ என்ற புனைப்பெயருடன் ‘இந்து தமிழ் திசை’ இணைய இதழில் எழுதிவரும் கிருஷ்ணன் அவர்கள், நாம் தூக்கியெறியும் குப்பையைக் குறித்து பதிவு செய்துள்ள ஒரு கட்டுரையைத் தழுவி எழுந்த சில எண்ணங்கள்...

குப்பையை எங்கே கொட்டுவது? - யாராவது ஒருவரை நிறுத்தி, இந்தக் கேள்வியைக் கேட்டால்... இதெல்லாம் ஒரு கேள்வியா, சாலையின் ஓரத்தில் எங்கு குப்பை சேர்ந்துள்ளதோ, அங்கு கொட்டலாம். குப்பைத் தொட்டியில் கொட்டலாம். வீட்டுக்குப் பக்கத்தில் ஏதாவது காலி மனையில் கொட்டலாம். குளங்களிலோ, ஆற்றிலோ கொட்டலாம். ஊருக்குள் ஓடும், அல்லது தேங்கிக்கிடக்கும் சாக்கடையில் கொட்டலாம்... என்று பல பதில்கள் எழும். நம் கையையும், வீட்டையும் விட்டு குப்பை ஒழிந்தால் போதும் என்பதே, நம்மிடையே பரவலாக காணப்படும் மனநிலை. நாம் அக்கறையின்றி எறியும் குப்பை, நாம் வாழும் சூழலுக்கே பிரச்சனையாக மாறுகிறது.

உலக அதிசயங்களில் ஒன்றாக, இந்தியாவின் பெருமையாக விளங்குவது, எவரெஸ்ட் சிகரம். அச்சிகரத்தை அடைவதற்குச் செல்லும் மனிதர்கள், வழியில் தூக்கியெறியும் குப்பைகளும், மனிதக் கழிவுகளும் இமயமலைப் பகுதியையே ஒரு பெரும் குப்பை மலையாக மாற்றிவருகிறது என்ற கவலை எழுந்துள்ளது. அண்மையில், நேபாள அரசு, இமயமலையில் மேற்கொண்ட ஒரு முயற்சியால், 12 டன் கழிவுகளும், நான்கு சடலங்களும் அகற்றப்பட்டன என்று, சென்ற வாரச் செய்திகள் கூறியுள்ளன.

நாம் தூக்கியெறியும் குப்பை, மக்கக்கூடிய குப்பையாக இருந்தால், பிரச்சனைகள் எழாது. ஆனால், நாம் தூக்கியெறியும் குப்பையில், ஞெகிழியும், நச்சு கலந்த வேதியியல் பொருள்களும் உள்ளன. எனவே, குப்பையைப்பற்றிய தெளிவு, நமக்கும், நம் சந்ததியருக்கும் பெரும் உதவியாக இருக்கும். நாம் தூக்கியெறியும் குப்பையில், கீழ்கண்ட பிரிவுகள் உள்ளன:

மக்கும்தன்மை கொண்ட குப்பை - காய்கறிக் கழிவுகள், உணவு, பழம், இலைகள்...

மறுசுழற்சி செய்யக்கூடிய குப்பை - காகிதம், கண்ணாடி, உலோகங்கள், ஒரு சில வகையான ஞெகிழிப் பொருள்கள்

நச்சுத்தன்மை கொண்ட குப்பை - மருந்துகள், வேதிப்பொருள்கள்

மக்கும்தன்மை கொண்ட குப்பையை, மண்ணுக்கு உரமாக்கலாம்; மறுசுழற்சி செய்யக்கூடியப் பொருள்களை, மீண்டும் பயன்படும் பொருள்களாக்கிவிடலாம். நச்சுத்தன்மை கொண்ட பொருள்களின் நச்சுத்தன்மையை நீக்கியபின், அவற்றை மறுசுழற்சி செய்யலாம். இவை எதிலும் சேராத ஒரு சில பொருள்களையே நாம் தூக்கியெறிய வேண்டும். ஒவ்வொருவரும் பொறுப்புடன் குப்பையை இவ்வாறு கையாண்டால், நம் தெருக்களில் சேரும் குப்பை, நான்கில் ஒரு பங்காகக் குறையும்; நம் நல வாழ்வோ, நான்கு மடங்காக உயரும். (இந்து தமிழ் திசை)

11 June 2019, 15:01