தேடுதல்

சுற்றுச்சூழல் ஆர்வலர் பேராசிரியர் ஹேமா ஷேன் சுற்றுச்சூழல் ஆர்வலர் பேராசிரியர் ஹேமா ஷேன்  

வாரம் ஓர் அலசல் - அவரவர் வாழ்வை வாழவிடுவோம்

உணவு, உடை, உறைவிடம், இவை மூன்றும்தானே ஒரு மனிதருக்கு முக்கியம். மின்சாரம் என்பது, இப்போது வந்ததுதானே. இது இல்லாமல்தான் பழங்காலத்தில் பல ஆயிரம் மனிதர்கள் வாழ்ந்து வந்தனர். மின்சாரத்திற்கு அடிமையாகிவிட்டால், அது தரும் சுகத்திற்கு அடிமையாகிவிட நேரிடும் - ஹேமா ஷேன்.

மேரி தெரேசா - வத்திக்கான்

இலங்கைத் தமிழ் உறவுகளுக்கு, கடந்த பத்து ஆண்டுகளாக, மே 18. வெறும் தேதி மட்டுமல்ல. பெற்றோர், உடன்பிறந்தோர், வாழ்க்கைத் துணைவர்கள்,  பிள்ளைகள், உறவினர், உயிர் நண்பர்கள் என, பல்லாயிரக்கணக்கானவர்களை இழந்த, வாழ்விலும், வரலாற்றிலும் மறக்க முடியாத நாள். இலங்கையில், ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்த, உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து, மே 18, கடந்த சனிக்கிழமையன்று, பத்தாண்டுகள் நிறைவடைந்துள்ளன. ஏறத்தாழ 26 ஆண்டுகள் நடந்த இந்த வரலாறு காணாத உள்நாட்டுப் போரினால் ஏற்பட்ட இழப்புகள் எண்ணிக்கைக்குள் அடங்காதவை. போரில், வீடுகளையும், காணிகளையும், சேர்த்து வைத்த செல்வங்களையும் இழந்து தனி மரமாய், செல்லுமிடம் தெரியாமல் திகைத்து நின்றவர்கள் எண்ணற்றவர்கள். போர் முடிந்து பத்து ஆண்டுகள் ஆகியும், போரினால் முழுமையாகப் பாதிக்கப்பட்ட பலர், இன்றும் தங்களது எதிர்காலத்தை நோக்கி சிந்தித்துக் கொண்டிருக்கின்றனர். ஆயினும், இத்தகைய துயரங்களிலும், தன்னம்பிக்கை என்ற ஒரே ஆயுதத்தைக் கொண்டு முன்னேறி, உலக அளவில் சாதித்துக் காட்டிக்கொண்டிருக்கின்றார், சாய்ராணி கிருஷ்ணதாஸ் என்ற தமிழ் உள்ளம்.

சாய்ராணி கிருஷ்ணதாஸ்

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் வாழ்கின்ற சாய்ராணி அவர்களின் கணவர், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியாகச் செயல்பட்டு, இறுதிக்கட்ட போரில், இலங்கை இராணுவத்தின் தாக்குதலில் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து, 2009ம் ஆண்டு, மே மாதம் 16ம் தேதி, தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து, இலங்கை அரசின் கட்டுப்பாட்டிற்குள் இருந்த ஒரு முகாமிற்கு, சாய்ராணி அவர்கள் சென்றார். அங்கு, தனது அம்மா மற்றும் மகனுடன் வாழ்ந்த அவர், அந்த இடத்திலேயே தனது சுயதொழிலை ஆரம்பித்தார். தன்னிடமிருந்த இரு தங்கக் கம்மல்களை ஒரு வர்த்தகரிடம் விற்று, அதில் கிடைத்த 1300 ரூபாயைக் கொண்டு, அப்பள மாவு மற்றும் மண்ணெண்ணெய் அடுப்பு ஆகியவற்றை வாங்கினார். இவற்றை வைத்து, தனது சுயதொழிலை ஆரம்பித்த சாய்ராணி அவர்கள்,  இன்று தனது உற்பத்திகளை, பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் அளவிற்கு, பத்து ஆண்டுகள் என்ற குறுகிய காலத்திற்குள் முன்னேறியுள்ளார். சாய்ராணி அவர்களின், வேதியக் கலவைகள் அற்ற இயற்கை பாரம்பரிய மூலிகை உணவு உற்பத்தி, இன்று அவரை பன்னாட்டு அளவில் புகழ்பெற வைத்துள்ளது. அவரது உற்பத்தி பொருட்கள், பல ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. அது மட்டுமன்றி, சாய்ராணி அவர்கள், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வேலைவாய்ப்புகளையும் வழங்கியுள்ளார். வேதியப் பொருள் கலக்காத, இவரது தயாரிப்புகளை வரவேற்கும் வகையில், இலங்கை அரசு, சாய்ராணி அவர்களுக்கு தேசிய விருது வழங்கியுள்ளது. வருங்காலத்தில் இவரது உற்பத்தியை ஊக்கப்படுத்த முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதற்கு, உலக வங்கியும் இசைவு தெரிவித்துள்ளது. (நன்றி பிபிசி தமிழ்).

மரங்கள் வளர்ப்பு

உரோம் நகரில், ஏன் இத்தாலி எங்குமே, இந்த ஆண்டு மே மாதத்தில் வழக்கத்துக்கு மாறாக காலநிலை மாறியுள்ளது.  அடிக்கடி மழை பெய்கிறது, சற்று குளிராகவும் இருக்கின்றது என, தமிழ்நாட்டில் உள்ள உறவுகளிடம் சொன்னபோது, நாங்கள் இங்கு வெயிலில் காய்கிறோம், அந்த மழையை இந்தப் பக்கம் அனுப்பி விடுங்கள் என்று சொன்னார்கள். தற்போது தமிழகத்தில் பாலைவனத்திற்கு நிகரான வெப்பநிலை நிலவுகிறது. ஆண்டுதோறும் அதிகரித்து வரும் வெயிலுக்கு, அதிகமான மரங்களை வெட்டுதல், நகரமயமாக்கல், மக்கள் தொகை பெருக்கம், நான்கு வழிச்சாலைகள் மற்றும் எரிபொருள்களால் வெளியேற்றப்படும் வாயுக்கள்தான் காரணம் என்பது அனைவரும் அறிந்த உண்மை. இந்தியாவில் மக்கள் தொகைக்கு இணையாக இருந்த மரங்களின் எண்ணிக்கை, கால் பங்காகி விட்டது. பல்வேறு தேவைகளுக்காக ஆண்டுக்கு, சராசரியாக ஐம்பது இலட்சம் மரங்கள் வெட்டப்படுகின்றன. ஆனால் மரங்கள் கார்பன் டை ஆக்சைடை எடுத்துக்கொண்டு, நமக்குத் தேவையான ஆக்சிஜனைத் தருகின்றன. நாம் வாழ மட்டுமின்றி பறவைகள், பூச்சிகள், விலங்களுக்கும் அடைக்கலம் கொடுக்கின்றன. மழைக்கு முக்கிய காரணங்களே மரங்கள்தான். எனவே, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலர், தாங்களாகவே முயற்சிகள் எடுத்து, மரங்களை நட்டு வளர்த்து வருகின்றனர்.

பி.பலராமன்

திண்டுக்கல் அருகேயுள்ள வடமதுரையைச் சேர்ந்த, பி.பலராமன் அவர்கள், தையல் தொழிலைச் செய்துகொண்டே, மரம் வளர்ப்பதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.  சொந்த பணத்தில், மொட்டணம்பட்டியில் வேம்பு, புங்கை, கொன்னை, வாகை, செரி, அடுக்கரளி, மலைக்கொன்னை, ஆலம், அரசு போன்ற நிழல்தரும் மரங்களையும், தென்னை, புளி போன்ற, நீண்ட காலத்திற்குப் பலன்தரும் மரங்களையும் நட்டு வளர்த்துள்ளார். மரக்கன்று நட்டதுடன் கடமை முடிந்தது எனக் கருதாமல், ஆடு, மாடுகளால் பாதிப்பு ஏற்படாத வகையில் கூண்டுகளை அமைத்து பராமரித்தும், கடும் வறட்சியிலும் தண்ணீரை விலைக்கு வாங்கியும் மரக்கன்றுகளை, அவர் காப்பாற்றி வருகிறார். இதனால் அக்கிராமம் எல்லாத் திசைகளிலும், மரங்களாக, பசுமைப் போர்வைப் போர்த்தியதுபோல் காட்சியளிக்கின்றது. எதிர்காலத்தில் இன்னும் அதிக மரங்களை வளர்க்க முயற்சிப்பேன் என்றும், பலராமன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

'திண்டிமா வனம்'

மேலும், 'திண்டிமா வனம்' அமைப்பு உறுப்பினர் இராஜாராம் அவர்கள், தினமலர் செய்தியாளர்களிடம் இவ்வாறு சொல்லியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம், மழை வளம் குறைந்த மாவட்டம். எனவே, 2016ம் ஆண்டில், திண்டிமா வனம் எனும் அமைப்பைத் துவங்கி, இதுவரை 1.20 இலட்சம் மரங்களை நட்டு பராமரித்து வருகின்றோம், தனியார் உதவியுடன் நான்கு டிராக்டர்களில், மரங்களுக்கு தினமும் தண்ணீர் ஊற்றுகிறோம். நீர் நிலைகளை மீட்க, மாவட்ட ஆணையர் மற்றும் தனியார் பங்களிப்புடன் சேர்ந்து, 150 கி.மீ., துாரம் குளங்களைத் துார்வாரியுள்ளோம். 3,500 ஏக்கரில், 55 குளங்கள், கண்மாய்களைத் துார்வாரி உள்ளோம். வேம்பு மரத்தின் பயன் அளவில்லாதது. எனவே, கன்னிவாடி அருகே ஐந்து ஏக்கரில் வேம்பு நட்டுப் பராமரிக்கிறோம். திண்டுக்கல்லை மரங்கள் நிறைந்த மாவட்டமாக மாற்றுவதே எங்கள் நோக்கம். ஆர்வமுடையர்கள் எங்கள் அமைப்பில் சேரலாம் என்றும், இராஜாராம் அவர்கள் சொல்லியுள்ளார் (நன்றி தினமலர்). எனவே, சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க, மரங்கள் நடுவதில் ஆர்வம் காட்டலாமே.

ஹேமா ஷேன்

உலகின் பல பகுதிகளில், வரலாறு காணாத வகையில் காலநிலை மாறி வருகிறது. இது, பூமி மேலும் மேலும் வெப்பமாகி வருவதை நன்கு உணர்த்துகிறது. இதற்கு மின்கருவிகள் அதிகமாகப் பயன்படுத்தப்படுவதும், ஒரு காரணமாகச் சொல்லப்படுகின்றது. மின்விசிறி அல்லது குளிர்சாதன வசதி இல்லாமல் இப்போது வாழ முடிவதில்லை. ஆனால், இந்தியாவில், ஓய்வுபெற்ற பேராசிரியர் ஒருவர், கடந்த 79 ஆண்டுகளாக, மின்சாரம் இல்லாமல் வாழ்ந்து வருகின்றார். மகராஷ்ட்ரா மாநிலம், புனே நகரின், புத்தா பெத் என்ற பகுதியில் வாழ்கின்ற ஹேமா ஷேன் (Hema Shane) அவர்கள், ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். வீட்டில் மின்சாரம் இல்லாமலே வளர்ந்துவந்த இவருக்கு, ஒரு கட்டத்தில், அரசு, மின் இணைப்பு தரமுன்வந்தபோது, வேண்டாம் என்று மறுத்துவிட்டார். இத்தனைக்கும் இவர், புனே பல்கலைக்கழகத்தில், தாவரவியல் துறையில் படித்து முனைவர் பட்டம் பெற்றவர். பின் Harvey பல்கலைக்கழகத்தில் நீண்ட காலம் பேராசிரியாரகவும் பணியாற்றியவர். சுற்றுச்சுழல் மற்றும் இயற்கையை மிகவும் அன்புகூரும் இவர், இது தொடர்பாக நிறைய நூல்கள் எழுதியுள்ளார். பணி ஒய்வுக்குப் பிறகு, பெரிய இடத்தில், மின்வசதி இல்லாத, சிறிய வீடு ஒன்றை அமைத்து, தனது எழுத்துக்களின்படியே வாழ்ந்து வருகின்றார் ஹேமா. இவரது வீட்டைச்சுற்றிலும் விதவிதமான மரங்களை வளர்த்துள்ளார். செல்லங்களாக நாய், பூனை, கீரி போன்ற பிராணிகளையும் இவர் வளர்த்து வருகிறார்.

கடும் வெப்பத்திலும், மின்வசதி இல்லாமல் எப்படி வாழ இயலும் என்ற ஆர்வக்கோளாறில், பேராசிரியர் ஹேமா ஷேன் அவர்களைச் சந்திக்கும் மனிதர்களிடம், அவர் சொல்வது இதுதான். மரங்களில் அமர்ந்து பறவைகள் பாடும் சங்கீத சத்தத்தோடு பொழுது விடிகிறது. பகல் முழுவதும் மரங்களைப் பார்ப்பதும், பறவைகள் விலங்குகளுடன் பேசுவதுமாக, வாழ்வு இனிமையாகச் செல்கிறது. இடையிடையே நூல்களை வாசிக்கிறேன், எழுதுகிறேன். உங்களுக்கு பிடித்த வாழ்வை, நீங்கள் வாழ்கிறீர்கள். எனக்குப் பிடித்த வாழ்வை நான் வாழ்கிறேன். புத்தர் சொன்னது போல, அவரவர் வாழ்வை வாழவிடுங்கள். அது போதும். உணவு, உடை, உறைவிடம், இவை மூன்றும்தானே ஒரு மனிதருக்கு முக்கியம். மின்சாரம் என்பது, இப்போது வந்ததுதானே. இது இல்லாமல்தான் பழங்காலத்தில் பல ஆயிரம் மனிதர்கள் வாழ்ந்து வந்தனர். மின்சாரத்திற்கு அடிமையாகிவிட்டால், அது தரும் சுகத்திற்கு, ஆடம்பரத்திற்கு, வியப்புகளுக்கு அடிமையாகிவிட நேரிடும். உங்கள் உலகில் மின்சாரம் இல்லாவிட்டால், வாழ்வே இருண்டுவிடும். ஆனால், எனது உலகில் மின்சாரம் வந்தால், என் வாழ்வே சுருண்டுவிடும். இந்த வீட்டை, இந்த இடத்தை நிறைய விலை கொடுப்பதாக சொல்லிக் கேட்கின்றனர். அவர்களிடம் இந்த வீட்டை கொடுத்துவிட்டால், எனது பறவைகள் எங்கே செல்லும்? எனக்குப் பிறகும், இந்த இடமும் இந்த வீடும், இங்கு வரும் பறவைகளுக்குத்தான் சொந்தம். இந்த உலகம் எல்லா உயிர்களும் வாழ்வதற்கானதுதான். நான் யாருக்கும் எவருக்கும் இடையூறு தராமல், இயற்கையோடும், பறவைகளோடும் ஆனந்தமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என்னை பைத்தியம் என்று சொல்கின்றனர். நான் பைத்தியமா? (நன்றி எல்.முருகராஜ்,தினமலர்).

ஓய்வுபெற்ற பேராசிரியர், ஹேமா ஷேன் அவர்கள், தன்னிடம் வருபவர்களிடம் கேட்பதுபோல், அவரவர் வாழ்வை வாழவிடுவோம். நல்வாழ்வு வாழ்வோரைப் புரிந்துகொண்டு போற்றுவோம். காலநிலை மாற்றத்தை உணர்ந்து, சுற்றுச்சூழல் ஆர்வலர்களாக மாறுவோம். இந்தியாவில் தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்திருக்கும் இவ்வேளையில், நாடாளும் நல்ல தலைவர்கள் கிடைக்க வேண்டுமென கடவுளைப் பிரார்த்திப்போம்.  

வாரம் ஓர் அலசல் - அவரவர் வாழ்வை வாழவிடுவோம்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 May 2019, 15:43