தேடுதல்

Vatican News
ஒடிசா பழங்குடி மக்களுக்கு உதவும் இளைஞர் விகாஷ் தாஸ் ஒடிசா பழங்குடி மக்களுக்கு உதவும் இளைஞர் விகாஷ் தாஸ்  

வாரம் ஓர் அலசல் – பிரமிக்க வைக்கும் நல்ல உள்ளங்கள்

நல்ல உள்ளங்கள், எல்லாவற்றிலும், எப்போதும் தங்கள் இதயங்களையும், மனங்களையும் முழுமையாக ஈடுபடுத்துபவர்கள். அவர்களின் கண்களையும், புன்னகையையும் நோக்கினால், அவர்களின் நற்செயல்களுக்குப் பின்னால், நல்ல நோக்கம் இருக்கின்றது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்

மேரி தெரேசா - வத்திக்கான்

இளைஞர் விகாஷ் தாஸ் அவர்கள், ஒடிசா மாநிலத்தில் பிறந்தவர். இவர், பழங்குடியின மக்களிடம் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது, அந்தக் குழந்தைகளுடன் விளையாடக் கூடாது, மறந்தும் அவர்களைத் தொட்டுவிடக் கூடாது என்றெல்லாம் சொல்லி வளர்க்கப்பட்டவர். ஆனால், விகாஷ் தாஸ் அவர்களுக்கு, பழங்குடி மக்களும், நம்மைப் போல மனிதர்கள்தானே, ஏன் இந்த வேற்றுமை என்ற சிந்தனை, சிறுவயதிலேயே உதித்துள்ளது. எனினும், தனது சிந்தனைக்குச் உருவம் கொடுப்பதற்கு, அப்போது வயதும் இல்லை, வலிமையும் இல்லை. படித்து, IPM நிறுவனத்தில், மென்பொருள் பொறியாளராக வேலையில் சேர்ந்து, உயர்ந்த பதவி, கைநிறைய ஊதியம் என்று, சமுதாயத்தில், ஒரு மதிப்புமிக்க இளைஞராக விளங்கினார் விகாஷ். ஆனால் அவரது உள்மனது, இளவயது சிந்தனையை அசைபோட்டுக்கொண்டே இருந்தது. அதனால் IPM நிறுவன வேலையை விட்டுவிட்டு, பழங்குடி மக்களின் முன்னேற்றத்திற்கு உழைப்பது என முடிவு செய்து, அம்மக்களின் வாழ்விடத்தி்ற்கே சென்று வாழத் தொடங்கினார் அவர். அம்மக்களுடன் பேசிப் பழகியபோதுதான், அவர்கள் வாழ்க்கை எவ்வளவு அடிமட்டத்தில் இருக்கிறது என்பதை உணர்ந்தார் விகாஷ் தாஸ்.

இளைஞர் விகாஷ் தாஸ் அவர்கள், வேலை பார்த்து சேர்த்து வைத்திருந்த பணத்தை, பழங்குடியின மக்களுக்காகவே செலவழித்துள்ளார். இப்போது, அவர்களின் நலவாழ்வு மற்றும் கல்வியில் அக்கறை எடுத்துள்ளார். வெற்றிகரமான விவசாய முறைகளை கற்றுக் கொடுத்துள்ளார். பெண்களுக்கு வருமானம் தரக்கூடிய எளிய நெசவு போன்ற தொழிலை பழகிக் கொடுத்துள்ளார். இவர்களது உற்பத்தி பொருளுக்கு நியாயமான விலை கிடைக்கவும் ஏற்பாடு செய்துள்ளார் அவர். ஆனால் அவர்களது கலாச்சாரம், பண்பாடு, வாழ்வுமுறை, வழிபாடு என, எதையும் விட்டுக்கொடுக்காமல், அவர்கள் அவர்களாகவே வாழும்படி உதவி செய்துள்ளார். இவரால், ஏறத்தாழ 368 குடும்பங்களின் நிலை இப்போது நன்றாக மாறியிருக்கிறது. பிள்ளைகள், முதல் முறையாக படிக்கின்றனர், பெண்கள் சொந்தமாகத் தொழில் செய்து பணத்தைச் சேமிக்க கற்றுக்கொண்டுள்ளனர். நலவாழ்விலும் அக்கறை செலுத்துகி்ன்றனர். இதன் காரணமாக விகாஷ் தாஸ் அவர்களை, பழங்குடி மக்கள், தங்கள் குடும்பத்தில் ஒருவராகவும், தங்கள் இனத் தலைவராகவும் ஏற்றுக்கொண்டு விட்டனர். வளர்ச்சி என்பது, பழங்குடி மக்களை நகரிய வாழ்க்கைக்குள் கொண்டு வருவதோ அல்லது, அம்மக்களைப் பொது நீரோட்டத்துடன் கொண்டுவந்து இணைப்பதோ அல்ல. மாறாக, அம்மக்களின் வளமையான, தனித்துவமிக்க கலாச்சாரத்தைப் பாதுகாத்து பலப்படுத்துவதேயாகும். இந்த இலக்கை நோக்கி என் எஞ்சிய வாழ்வு செல்கிறது. ஒடிசா மாநிலப் பழங்குடி மக்களுக்காகப் பயணிக்க வேண்டிய, துாரம் இன்னும் தொலைவில் இருக்கிறது என்று சொல்லியுள்ளார், இந்த அற்புதமான இளைஞர் விகாஷ் தாஸ். (நன்றி-எல்.முருகராஜ் தினமலர்)

பழங்குடி மக்களுக்கு நூலகம்

ஒவ்வொரு நாளும் நாம் கேள்விப்படுகின்ற பல தகவல்கள், இந்த உலகத்தில், பிரமிக்க வைக்கும் எவ்வளவு நல்ல உள்ளங்கள் உள்ளார்கள் என்று மனதைக் குளிர வைக்கின்றன. கேரள வனத்திற்குள், தேனீர் கடைக்காரர் ஒருவர், பழங்குடியின கிராமங்களுக்கென, நூலகம் ஒன்றை அமைத்துக் கொடுத்துள்ளார் என, விகடன் இதழில் செய்தி ஒன்று பிரசுரமாகியிருந்தது.

73 வயது நிரம்பிய, பி.வி.சின்னத்தம்பி அவர்கள், கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள எடுமலைக்குடி எனும் பழங்குடி கிராமத்தில் வாழ்ந்து வரும், முத்துவான் பழங்குடியின மக்களுக்காக, நூலகம் நடத்தி வருபவர். அப்பகுதி கிராம மக்கள் பொருள்கள் வாங்குவதற்கு, இவரது கடைதான் ஒரே இடம். அதனால், இவர், 2010ம் ஆண்டில், தனது கடையிலேயே ஒரு நூலகத்தையும் நிறுவிவிட்டார். இவர் நூலகம் ஆரம்பிக்கும்போது அதை யாரும் பெரிதாக எண்ணவில்லை. நாளடைவில் கடைக்கு வருபவர்களிடம் வாசிப்புப் பழக்கத்தை இவர் தூண்ட ஆரம்பித்தார். இவரது தூண்டுதலால், முதல் மாதமே பத்துக்கும் அதிகமான உறுப்பினர்கள், அந்த நூலகத்தில் சேர்ந்தனர். அதிலிருந்து சின்னத்தம்பி அவர்களுக்கு, அந்த மக்களைப் புத்தகங்கள் வாசிக்க வைத்துவிடலாம் என்ற நம்பிக்கையும் பிறந்திருக்கிறது. இப்போது சுற்றியிருக்கும் கிராம மக்களுக்கு இதுதான் ஒரே நூலகம். இந்த இடத்தை அடைய, மூணாறு பெட்டிமுட்டியிலிருந்து 18 கி.மீ நடந்துதான் செல்லவேண்டும். இவரும், இவரது நண்பர் முரளி என்பவருமே, அனைத்துப் புத்தகங்களையும், 18 கி.மீ தூரம் சுமந்து வந்து சேர்த்திருக்கிறார்கள்.

சின்னதம்பி அவர்கள் வைத்திருக்கும் நூலகத்தின் பெயர், அக்‌ஷரா கலை மற்றும் விளையாட்டு நூலகம். இவர் வைத்திருக்கும் புத்தகங்களில், நான்கில் ஒரு பங்கு புத்தகங்கள் இந்த பழங்குடி மக்களால் வாசிக்கப்படுகின்றன மற்றும், அம்மக்கள், வாசித்து முடித்துவிட்டுத் திரும்ப ஒப்படைத்தும் விடுகின்றனர். நூலகத்திற்கு வருவோருக்குச் சர்க்கரையில்லாத, பால் கலக்காத தேனீரை இலவசமாகக் கொடுக்கிறார் சின்னத்தம்பி. சில நேரங்களில், அங்கு வருபவருக்கு ஒரு சாப்பாடுகூட இலவசமாகக் கிடைக்கின்றது. கேரளாவின் மிகவும் பின்தங்கிய பஞ்சாயத்தான எடுமலைக்குடி கிராமத்திற்கு இந்த வருடம்தான் ஒரு ஜீப் செல்லும் வகையில் மண் சாலை அமைக்கப்பட்டுள்ளது. அரசால் செய்ய முடியாத செயலை, தனிநபர் நினைத்தால் செய்யமுடியும் என, நிரூபித்திருக்கிறார் சின்னத்தம்பி (நன்றி விகடன்)

ஆதரவற்ற முதியவருக்கு உதவி

தமிழகத்தின் விருதுநகரில், போக்குவரத்துக் காவலர் ரெங்கராஜன் அவர்கள், குப்பைகளுக்கு அருகே இருந்த ஆதரவற்ற முதியவர் ஒருவரை, முடிதிருத்தம் செய்யும் கடைக்கு அழைத்துச்சென்று, முடிவெட்டிவிட்டு, புத்தாடை வாங்கிக் கொடுத்திருக்கிறார். ரெங்கராஜன் அவர்கள், அது குறித்து இவ்வாறு சொல்கிறார்.

“அந்த முதியவர், தினந்தோறும் நான் செல்லும் வழியில் குப்பையிலேயே அமர்ந்திருப்பார். அவரைப் பார்த்துக்கொண்டே செல்வேன். சாப்பாட்டுக்குப் பணம் தருவேன். அவ்வளவுதான். பல நாள்களாக இப்படியேதான் சென்றது. அவரது வெள்ளைச் சட்டைகூட அழுக்குப் பிடித்து கறுப்பாக மாறிவிட்டது. அப்போதெல்லாம் ஒன்றும் தெரியவில்லை. ஆனால், அன்று மட்டும், அவரது தலைமுடியையும், முகம் முழுவதும் இருந்த தாடியையும் வெட்ட வேண்டும் எனத் தோன்றியது. அய்யா முடிவெட்டிக்கொள்கிறீர்களா? என்று அவரிடம் கேட்டேன். அவரும் சரி என்றார். உடனே அருகே இருந்த முடிதிருத்தம் செய்யும் கடைக்கு அழைத்துச்சென்று முடிவெட்டி, முகச்சவரம் செய்ய வைத்தேன். அதற்கான பணத்தையும் கொடுத்துவிட்டு, அருகே இருந்த சுமைப்பணியாளர் ஒருவரிடம் பணம் கொடுத்து, புதுச் சட்டை, வேட்டி வாங்கி வரச் சொன்னேன். அந்த புத்தாடையை அவருக்குக் கொடுத்தேன். அப்போதுதான் எனக்கு நிம்மதியாக இருந்தது. ஆதரவற்றவர்களுக்கு தினமும் குறைந்தது பத்து ரூபாயாவது கொடுத்துவிடுவேன். வெள்ளிக்கிழமை என்றால் அதிகம் பேர் வருவார்கள். எனவே, அன்று மட்டும் கூடுதலாகப் பணம் ஒதுக்கி வைத்துக்கொள்வேன். சிலர் என்னை அடையாளம் கண்டுகொண்டு, தேடிவந்து காசு வாங்கிச்செல்வார்கள். எனக்கு அன்றையப் பொழுது நிம்மதியாக இருக்கும். கண்பார்வையற்ற நபர்கூட என் குரலைக் கேட்டு வந்துவிடுவார். இவர்களுக்கு அன்றாடம் உதவிசெய்தால்தான் அன்றையப் பொழுதே நிம்மதியாக இருக்கும். இவர்களுக்குச் செய்யாமல் வேறு யாருக்கு செய்யப்போகிறோம்'' . காவலர்களும் மனிதர்கள், அவர்களுக்கும் மனிதாபிமானம் உண்டு என்பதற்கு ரெங்கராஜன் அவர்கள் சிறந்த எடுத்துக்காட்டு.

நல்ல உள்ளங்கள்

மகிழ்வை முகத்தில் வைக்க வேண்டும். சோகத்தை முதுகில் வைக்க வேண்டும், சிந்தனையை மூளைக்குப் பின்னால் வைக்க வேண்டும், திறமையை முகத்திற்கு முன்னால் வைக்க வேண்டும், செயல்களைக் கைகளில் வைக்க வேண்டும், ஓட்டத்தைக் காலில் வைக்க வேண்டும். அன்பைப் பெரிதாக வைக்க வேண்டும். இதுதான் வாழ்க்கை (நன்றி கோபி, விகடன்). நல்ல உள்ளங்கள், எல்லாவற்றிலும், எப்போதும் தங்கள் இதயங்களையும், மனங்களையும் முழுமையாக ஈடுபடுத்துபவர்கள். அவர்களின் கண்களையும், புன்னகையையும் நோக்கினால், அவர்களின் நற்செயல்களுக்குப் பின்னால், நல்ல நோக்கம் இருக்கின்றது என்பதைப் புரியமுடியும். நீங்கள் கவலையில் இருக்கையில், புன்னகைக்க வைப்பவர்களாய், கடினமான நேரங்களில், சாய்ந்துகொள்ள தோள்கொடுப்பவர்களாய் உள்ளனர். மருத்துவர்கள், நண்பர்கள், அற்புதர்கள் என்றுகூட, நீங்கள் அவர்களை அழைக்கலாம். நீங்கள் வாழ்வில் சாதிக்கையில் மகிழ்ச்சியடைவார்கள், வாழ்வை மாறுபட்ட கோணத்தில் பார்ப்பதற்கு உதவுவார்கள். புதிய அனுபவங்களை எப்போதும் பரிந்துரைப்பார்கள். நீங்கள் நீங்களாகவே வாழ்வதற்கு முழு சுதந்திரமளிக்கும் நண்பர்களாக இருப்பார்கள். தூய்மையான எண்ணத்தோடும், தன்னலமற்றும், உங்கள் இதயங்களைத் தொடுவார்கள். ஆம், நல்ல உள்ளங்கள், கனிவு என்பதை தங்களின் சிறந்த முதலீடாகக் கொண்டிருப்பவர்கள். இத்தகைய நல்ல உள்ளங்களை, வாழ்வில் எப்போதாவது சந்திக்க நேர்ந்தால், வாழ்நாள் முழுவதும், அழகான விலைமதிப்பில்லா சொத்தாக, அவர்கள், உங்களோடு இருக்க வேண்டுமென விரும்புவீர்கள். வத்திக்கான் வானொலியின் அன்பு நெஞ்சங்களே, இத்தகைய பிரமிக்க வைக்கும் நல்ல உள்ளங்களில் நீங்களும், நாங்களும் ஒருவராய் இருந்தால் எப்படி இருக்கும்! ஏனெனில், “நாம்  சொல்வதை வேண்டுமானால், உலகம் சந்தேகப்படலாம், ஆனால் நாம் செய்வதை நம்பித்தான் ஆகவேண்டும்” (இரஷ்ய அறிஞர் லியோ டால்ஸ்டாய்).

வாரம் ஓர் அலசல் – பிரமிக்க வைக்கும் நல்ல உள்ளங்கள்
13 May 2019, 13:59