பாகிஸ்தானில் சிறார் திருமணங்களுக்கு எதிராக சிறுமிகள் பாகிஸ்தானில் சிறார் திருமணங்களுக்கு எதிராக சிறுமிகள் 

சிறார் திருமணங்கள் தடைச் சட்ட வரைவுக்கு ஒப்புதல் அளிக்க...

சிறுமிகள் இளவயதிலே திருமணம் செய்து வைக்கப்படுவதால், அவர்களின் குழந்தைப்பருவமும், கல்வியும் பாதிக்கப்படுகின்றன

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

பாகிஸ்தானில் சிறார் திருமணங்களுக்கு எதிரான சட்டத்திற்கு, எவ்வளவு விரைவில் அனுமதி அளிக்க முடியுமோ, அவ்வளவு விரைவில் அளிக்கப்படுமாறு, அந்நாட்டு மனித உரிமைகள் குழு ஒன்று, அரசை வலியுறுத்தியுள்ளது.

பாகிஸ்தான் அரசை இவ்வாறு வலியுறுத்தியுள்ள, HRFP எனப்படும் பாகிஸ்தான் மனித உரிமைகள் அமைப்பு, சிறுமிகள் இளவயதிலே திருமணம் செய்து வைக்கப்படுவதால், அவர்களின் குழந்தைப்பருவமும், கல்வியும் பாதிக்கப்படுகின்றன என்று கூறியுள்ளது.

செனட் அவையில் அங்கீகரிக்கப்பட்ட, சிறார் திருமணங்களுக்கு எதிரான சட்ட வரைவுக்கு, மக்களவையின் சில உறுப்பினர்கள் மற்றும், சில அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதை முன்னிட்டு, அந்த சட்ட வரைவு, கீழ்சபையின் ஒப்புதல் பெறாமல் உள்ளது. இந்த சட்ட வரைவு, ஷாரியா சட்டத்தை மீறுகின்றது மற்றும், இஸ்லாம் பண்புக்கு முரணாக உள்ளது என, அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் கூறியுள்ளனர்.

பாகிஸ்தானில், சிறார் திருமணங்கள் தடைசெய்யப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ள சட்ட வரைவு, திருமண வயதை சட்டமுறைப்படி 18 ஆக நிர்ணயிக்க வலியுறுத்தியுள்ளது.

அத்துடன், இஸ்லாம் மதத்தைச் சேராத பெண்களையும், சிறுமிகளையும் கடத்தி, அவர்கள் விருப்பத்திற்கு மாறாக, இஸ்லாமுக்கு மதம் மாற்றி, அவர்களைவிட வயதில் அதிகம் மூத்த ஆண்களுக்குக் கட்டாயத் திருமணம் செய்து வைப்பவர்களுக்கு கடும் தண்டனைகளும், அபராதமும் விதிக்கப்பட வேண்டும் எனவும், அந்த சட்டவரைவு பரிந்துரைத்துள்ளது. 

இதற்கிடையே, பாகிஸ்தானில் கொண்டுவரப்பட்ட இந்த சட்டவரைவு, உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளவேளை, அந்நாட்டு மக்களவையில் கிடப்பில் உள்ளது.

பாகிஸ்தானில், ஏறத்தாழ 21 விழுக்காட்டுச் சிறுமிகள், 18 வயதை எட்டுவதற்கு முன்னரும், 3 விழுக்காட்டுச் சிறுமிகள், 15 வயதை எட்டுவதற்கு முன்னரும், திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர். உலகில், சிறுமிகள் திருமணங்களை அதிகமாகக் கொண்டுள்ள நாடுகள் வரிசையில், பாகிஸ்தான் ஆறாவது இடத்தில் உள்ளது. (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 May 2019, 14:31