தேடுதல்

Vatican News
வயலில் பணிபுரியும் இளையோர் வயலில் பணிபுரியும் இளையோர்  (ANSA)

பூமியில் புதுமை : ஆர்வமுடன் விவசாயத்தில் பள்ளி மாணவர்கள்

விவசாய கல்லூரிக்கு ஒரு நாள் பயணம் மேற்கொண்டு, இயற்கை விவசாய முறைகளைக் கற்றதுடன், சேற்றில் இறங்கி மகிழ்வாக நாற்றும் நட்டனர், அரசு பள்ளி மாணவர்கள்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

விவசாயப் படிப்பு மீதான ஆர்வம் இப்போது அதிகரித்து வருவது அனைவருக்கும் தெரிந்ததே. தேவகோட்டையில் இருக்கும் சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள், விவசாயம் கற்க, ஒரு நாள் களப்பயணமாக, விவசாய கல்லூரிக்குச் சென்றனர். கல்லூரி பேராசிரியர்கள் மற்றும், மாணவர்கள் வழிகாட்டுதலுடன் இவர்கள், காய்கறிகளைப் பயிரிடுவது,  பறிப்பது என்பது தொடர்பாக நேரில் கற்றுக்கொண்டனர்.

240 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இக்கல்லூரியில் இயற்கை விவசாயம் கடைப்பிடிக்கப்படுவது குறித்து, மாணவர்களுக்கு விரிவாக எடுத்துச் சொல்லப்பட்டது. இயற்கை வேளாண்மை முறையில், காய்கறிகள் மற்றும் கீரைகள் பயிரிடப்பட்டதும் விவரிக்கப்பட்டது. பூக்களில், முக்கியமாக மல்லிகை,  மரங்களில் மா, பலா, வாழை, மாதுளை, மேலும், சந்தனம், தேக்கு, செம்மரம் போன்ற பலன்தரும் மரக்கன்றுகள் பயிரிடபட்டுள்ளதும் மாணவர்களுக்கு நேரடியாக விளக்கப்பட்டது. இதனையடுத்து ஆடு வளர்ப்பு, மாடு வளர்ப்பு, பால் தரும் பசுக்கள், கோழி இனங்களில் கினி கோழி, வான் கோழி, நாட்டுக் கோழி, புறா, முயல், வாத்து போன்றவை ஒருங்கிணைந்த பண்ணை முறையில் வளர்க்கப்படுவதை விரிவாகவும், நேரடியாகவும் விளக்கப்பட்டது. பின்பு, மீன் பண்ணைகளைப் பார்வையிட்டு, பூச்சியியல் துறை ஆய்வகம், மண் அறிவியல் ஆய்வகங்களையும் பார்வையிட்டனர். இதனைத் தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் சேற்றில் இறங்கி மகிழ்ச்சியாக நாற்று நட்டனர். (புதிய தலைமுறை)

15 May 2019, 15:40