தேடுதல்

Vatican News
வெண்பனி தூவிய பின்னணியில் காய்ந்து நிற்கும் மரங்கள் வெண்பனி தூவிய பின்னணியில் காய்ந்து நிற்கும் மரங்கள்  (AFP or licensors)

பூமியில் புதுமை : இயற்கையாகவா, இயற்கையாலா அழிகிறோம்?

காடுகளை அழித்தல், பருவநிலை மாற்றத்தை அனுமதித்தல், அதிகளவில் மீன்பிடித்தல், நீரை மாசாக்குதல், உணவை வீணாக்குதல், விளைநிலங்களை அழித்தல் என்பவை அழிவின் பாதைகள்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இயற்கைப் பாதுகாப்பு குறித்து ஐ.நா.அவை வெளியிட்டுள்ள 1800 பக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ள சில முக்கிய கூறுகளை நினைவில் கொள்ள முயல்வோம்.

பிளாஸ்டிக் கழிவுகளால், பல உயிரினங்கள், அழிவின் விளிம்புக்கு தள்ளப்பட்டுள்ளன. மனிதர்கள் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளால் 10 இலட்சம் விலங்குகள், மற்றும், மரங்கள், அழியும் நிலையில் உள்ளன.

ஒவ்வோர் ஆண்டும், 80 கோடி கிலோ உலோகங்கள், நச்சுக் கழிவுகள் உள்ளிட்டவை, கடல், ஆறு போன்ற நீர்நிலைகளில் கலக்கின்றன.

தற்போதையச் சூழலில், வெயில் 1 டிகிரி உயர்ந்தால் கூட, கடல்பாசிகள் மற்றும் பவளப் பாறைகள் 90 விழுக்காடு பாதிக்கப்படும் நிலை ஏற்படும்.

உலகில் உள்ள கடல்களின், 55 விழுக்காட்டுப் பகுதிகளில், மீன்பிடி கப்பல்கள் இயங்கி வருவதாகவும், இதுவரை, மீன்கள், மற்றும், சுறாக்கள், மூன்றில் ஒரு பகுதி அழிக்கப்பட்டுள்ளதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

காடுகளை அழித்தல், பருவநிலை மாற்றத்தை அனுமதித்தல், அதிகளவில் மீன்பிடித்தல், நிலப்பரப்பையும் நீரையும் மாசாக்குவது ஆகியவை, சுற்றுச்சூழல் அழிவு நிலையை நோக்கி செல்வதற்கான முக்கியக் காரணிகளாக ஐ.நா.அவை சுட்டிக்காட்டியுள்ளது.

உணவு வீணாவதை தடுத்தல், தற்போதைய அவசரமான  அவசியம் என்று கூறியுள்ள ஐ.நா.அவை, சாலை விரிவாக்கம் செய்வதால், விளைநிலங்கள் பாதிக்கப்படுவதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

10 May 2019, 15:25