தேடுதல்

ஆர்டிக்கில் காய்கறிகளை உற்பத்தி செய்யும் Benjamin Vidmar ஆர்டிக்கில் காய்கறிகளை உற்பத்தி செய்யும் Benjamin Vidmar 

பூமியில் புதுமை - ஆர்டிக்கில் இயற்கை வேளாண்மை

எந்தக் கழிவுகளும் இல்லாத மற்றும், உணவை வீணாக்காத வகையில் உணவகத்தைத் திறப்பதற்குச் சிந்தித்துவரும் பெஞ்சமின் அவர்கள், தனது இந்த முயற்சி, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க, பிறருக்கும் உதவும் என்று நம்புகிறார்.

மேரி தெரேசா - வத்திக்கான்

வட துருவத்தில், மைனஸ் நாற்பது செல்சியுஸ் டிகிரியில், நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு, இயற்கை வேளாண்மை முறையில், காய்கறிகளைப் பயிர்செய்து,  பல இடங்களுக்கு அனுப்பியும் வருகிறார், அமெரிக்காவின் கிளீவ்லாண்டைச் (Cleveland) சேர்ந்த Benjamin Vidmar.  இவர், வட துருவத்திலிருந்து ஏறத்தாழ ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திலுள்ள, நார்வே நாட்டிற்குச் சொந்தமான ஸ்வல்பார்ட் (Svalbard) தீவுக்கூட்டங்களில், ஒன்றான ஸ்பிட்ஸ்பெர்கென் (Spitsbergen) தீவில், 2007ம் ஆண்டு முதல்  வாழ்ந்து வருகிறார். உலகின் பல பகுதிகளில் தலைமை சமையல்காரராக வேலை செய்துள்ள பெஞ்சமின் அவர்கள், உலகளவில் உணவுப்பொருள்கள் வீணாக்கப்படுவதைத் தவிர்ப்பது குறித்து சிந்தித்தார். அதன் பயனாக, இவர், இந்த ஆர்டிக் பகுதியில், கூடாரம் போன்று பசுமை இல்லத்தை வடிவமைத்து, இயற்கை முறையில் காய்கறிகளை உற்பத்தி செய்து வருகிறார். அவற்றை, ஸ்வல்பார்ட் தீவுக்கூட்டங்களில், மக்கள் அதிகமாக வாழ்கின்ற லாங்கிஇயர்பென் (Longyearbyen) முக்கிய நகரத்திற்கும், அப்பகுதியிலுள்ள மற்ற உணவகங்களுக்கும் அனுப்பி வருகிறார். இந்தப் பகுதியில், ஆண்டில் மூன்று மாதங்கள், 24 மணி நேரமும் இருளாகவும், நான்கு மாதங்கள் கடுங்குளிராகவும் இருக்கும். கோடை காலத்தில் 24 மணி நேரமும் சூரிய ஒளி இருக்கும். இப்பகுதிக்கு, கப்பல் அல்லது விமானம் வழியாக எடுத்துவரப்படும், உணவுப்பொருள்கள் பிளாஸ்டிக்கால் சுற்றப்பட்டு வருகின்றன. இங்குள்ள மக்கள் தூக்கி எறியும் பிளாஸ்டிக் கழிவுகள் கப்பலில் எடுத்துச் செல்லப்பட்டு அகற்றப்படுகின்றன. எனவே, எந்தக் கழிவுகளும் இல்லாத மற்றும், உணவை வீணாக்காத வகையில் உணவகத்தைத் திறப்பதற்குச் சிந்தித்துவரும் பெஞ்சமின் அவர்கள், தனது இந்த முயற்சி, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க, பிறருக்கும் உதவும் என்று நம்புகிறார். மீதப்படும் காய்கறிகளை, உரமாகவும் இவர் பயன்படுத்துகிறார்.

இதற்கிடையே, உலகில் ஒன்பது பேருக்கு ஒருவர், அதாவது 81 கோடியே 50 இலட்சம் பேர், போதுமான உணவின்றி துன்புறும்வேளை, ஒவ்வோர் ஆண்டும், ஏறத்தாழ 130 கோடி டன் உணவு வீணாக்கப்படுகின்றது (FAO).  2016-2017ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், ஜப்பான் உணவு உற்பத்தி மையங்களில், 13 இலட்சத்து 70 ஆயிரம் டன்களும், உணவகங்களில் 13 இலட்சத்து 30 ஆயிரம் டன்களும் உணவுப் பொருள்கள் வீணாக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில், ஜப்பானில், ஒவ்வோர் ஆண்டும், குறைந்தது அறுபது இலட்சம் டன் உணவுப் பொருள்கள் வீணாக்கப்படுகின்றன என்று அரசு கூறியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 May 2019, 15:38