ஆட்டோவில், தென்னங்கீற்று மேற்கூரை ஆட்டோவில், தென்னங்கீற்று மேற்கூரை  

பூமியில் புதுமை : தென்னங்கீற்றால் குளிர்சாதன ஆட்டோ

இவ்வாண்டு கோடை வெயில் ஆரம்பமாவதற்கு முன்பாகவே, திருச்சியில் வெயிலின் தாக்கம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. அதனால், வெயில் தாக்கத்தைச் சமாளிப்பதற்காக, ஆட்டோவில், தென்னங்கீற்று மேல்கூரை அமைத்துள்ளார், திருச்சி சைமன் ராஜ்

மேரி தெரேசா - வத்திக்கான்

தமிழகத்தில் அக்கினி நட்சத்திர வெயிலில், மக்கள், பகல் நேரங்களில் வெளியில் செல்லவே அஞ்சுகிறார்கள். எந்த வாகத்தில் ஏறினாலும், வெயிலின் அனல் உள்ளே தகிக்கிறது. ஆனால், கந்தகப் பூமி எனப்படும் திருச்சியில், ஒரு ஆட்டோவில் மட்டும், கத்தரி வெயிலால் தாக்கப்படாதவர்கள் போன்று, பயணிகள் உற்சாகமாக பயணம் செய்து வருகிறார்கள். பயணிகள் மட்டுமல்ல, ஏனைய ஆட்டோ ஓட்டுநர்களும், சவாரி கிடைக்காத நேரங்களில் அந்த ஆட்டோவில் ஓய்வெடுக்கின்றனர். திருச்சி கே.சாத்தனூரைச் சேர்ந்த, சைமன் ராஜ் என்பவரின் ஆட்டோவில்தான், பயணிகள் வெயிலின் கடும் வெம்மையை உணராமல் செல்கின்றனர். காரணம், சைமன் ராஜ் அவர்கள், தனது ஆட்டோவில், உச்சிவெயில் உள்ளே இறங்காதபடிக்கு, ஆட்டோவின் கூரையைத் தென்னங்கீற்றால் வடிவமைத்திருக்கிறார். சிறுவயதிலேயே தந்தையை இழந்த இவர், வீட்டுக்கு ஒரே மகன் என்பதால், அவரை நன்றாகப் படிக்க வைக்க ஆசைப்பட்டார், அவரது அம்மா. ஆனால், படிப்பில் ஆர்வமில்லாத சைமன் ராஜ் அவர்கள், எட்டாம் வகுப்பு படிப்பை பாதியிலே நிறுத்திட்டு, எலக்ட்ரிக்கல் வேலையைக் கற்றுக்கொண்டார். கடந்த இருபது வருடங்களாக, அந்த வேலையைச் செய்துவந்த அவர், அவ்வேலை மிகவும் சிரமமாக இருந்ததால், அதனை விட்டுவிட்டு,  ஒரு வருடத்துக்கு முன்பு, வட்டிக்கு கடன் பெற்று, அதில் ஆட்டோ வாங்கி ஓட்டி வருகிறார். இப்படியிருக்க, இந்த ஆண்டு கோடை வெயில் ஆரம்பமாவதற்கு முன்பாகவே, திருச்சியில் வெயிலின் தாக்கம் கொஞ்சம் கூடுதலாகவே இருந்தது. வெயிலின் தாக்கத்தைச் சமாளித்து ஆட்டோ ஓட்டுவது சிரமமாக இருந்தது. அது குறித்து சிந்தித்த அவர், ஆட்டோவில், தென்னங்கீற்று மேற்கூரை போடலாம் என முடிவெடுத்தார். தென்னங்கீற்று வாங்கி, கூரை வேய்வதைப் போல், ஆட்டோவின் மேலே அமைத்து, வழக்கமான ஆட்டோவில் உள்ளதுபோல் இருக்கையைப் பொருத்தியிருக்கிறார் அவர். தனது இந்த புது முயற்சி குறித்துச் சொல்லும் சைமன் ராஜ் அவர்கள், ஆட்டோவை ஓலா நிறுவனத்தில் இணைத்திருக்கிறேன், அதனால், சவாரி பதிவானதும், ஆட்டோவில் வைத்திருக்கும், ஸ்ப்ரே பாட்டில் மூலம் தண்ணீரைத் தென்னங்கீற்றில் தெளித்து விடுவேன், இதனால் பயணிகள் ஆட்டோவில் ஏறும்போது வழக்கத்தைவிடக் குளுகுளுவென உள்ளது, ஏற்கெனவே எனக்குக் தென்னங்கீற்று பின்னத்தெரியும் என்பதால், கீற்றுக்கு மட்டும் 200 ரூபாய் செலவாகியுள்ளது என்று சொல்லியுள்ளார் (நன்றி விகடன்)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 May 2019, 13:50