Akash Chaurasia : Progressive Farmer from Sagar, Bundelkhand Akash Chaurasia : Progressive Farmer from Sagar, Bundelkhand  

பூமியில் புதுமை : 'அடுக்கு விவசாயத்தில்' அசத்தும் இளைஞர்!

அடுக்குமுறை விவசாயத்தில், ஒரு செடிக்கு பாய்ச்சும் தண்ணீரின் ஈரப்பதமே, அடுத்த செடியைக் காப்பாற்ற வாய்ப்புண்டு. இந்த விவசாயம் ஒரு தோட்டம் மாதிரியான அமைப்பாக இல்லாமல், பல்லுயிர்ச் சூழல் மண்டலமாக மாறிவிடுகிறது

மேரி தெரேசா - வத்திக்கான்

மத்தியப் பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் உள்ள டில்லி கிராமத்தில், விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர், ஆகாஷ் செளராஷ்யா (Akash Chourasiya). தனது கிராம மக்கள் பீடி சுற்றுவதை முழுநேரத் தொழிலாகச் செய்துவந்தவேளை, மருத்துவம் படித்து மக்களுக்கு உதவ வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டார் ஆகாஷ். எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைப்பது கஷ்டம் என்று உணர்ந்த அவர், மக்களின் உடல்நிலையை விவசாயியாலும் காப்பாற்ற முடியுமே எனத் தோன்றவே, தந்தையின் நிலத்தில் விவசாயம் செய்ய ஆரம்பித்தார் (ஜூன் 01,2011). இருபது வயதேயான இளைஞர் ஆகாஷ் அவர்களின் இந்த முயற்சியை, அவரது குடும்பமோ, நண்பர்களோ உற்சாகப்படுத்தவில்லை. இதைக் கண்டு சிறிதும் பின்வாங்காமல், வேதிய உரங்களைப் பயன்படுத்தாத விவசாயத்தைத் தொடங்கினார் ஆகாஷ். அதேநேரம், விவசாயத்தில் புதுமையான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவும் நினைத்தார் அவர். முதல் முயற்சியாகத் தக்காளியை பயிரிட்டார். ஆனால், அதில் ஆறு மாதங்களாகியும் எதிர்பார்த்த மகசூல் கிடைக்கவில்லை. அதற்குப் பின்னர், இவர் பயிரிட்ட தக்காளி 15 அடி உயரத்துக்கு வளர்ந்து, ஒரு செடியில் இருந்து, ஒரு நாளைக்கு 10 முதல் 12 கிலோ வரை மகசூல் கிடைத்தது. பழத்தின் அளவு, சுவை மற்றும் தரம் ஆகியவை, பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், மாணவர்கள் என, அனைவரின் கவனம் ஈர்த்தன. முதன்முதலில் இரண்டு பயிர்களை அடுக்கு முறையில் பயிரிட்டு வெற்றி கண்டார் ஆகாஷ். இந்த விவசாயம் கைகொடுக்க ஆரம்பித்ததால், அடுத்தடுத்த ஆண்டுகளில் அடுக்கு விவசாயத்தைப் பின்பற்ற ஆரம்பித்தார். அதன் பலனாக இன்று 2.5 ஏக்கரில் ஐந்து அடுக்குகள் கொண்ட பண்ணையை அமைத்திருக்கிறார் அவர். வயலைச் சுற்றிலும் மூங்கில் மரங்கள் ஓர் அடுக்காகவும், இரண்டாம் அடுக்காக இஞ்சி, மூன்றாம் அடுக்காக காய்கறிகள், நான்காம் அடுக்காக கீரை வகைகள் மற்றும், ஐந்தாம் அடுக்காக, பந்தல் காய்கறிகளைப் பயிரிட்டிருக்கிறார். இதன்மூலம் களைச்செடிகள் வருவதும், அதற்கான செலவும் குறைகின்றது, தண்ணீரும் அதிகமாகச் செலவாவதில்லை என்று சொல்கிறார் ஆகாஷ். மண்புழு உரமும் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இடுபொருள்களாக மண்புழு உரமும், பூச்சிகளுக்கு வேப்பெண்ணெய், இஞ்சி பூண்டு கரைசல் ஆகியவற்றைப் பயன்படுத்தி வருகிறார். இதுதவிர, தனது பண்ணைக்கு விரும்பி வரும் விவசாயிகளுக்கு யுக்திகளைச் சொல்லிக்கொடுத்தும் வருகிறார் ஆகாஷ் செளராஷ்யா. (நன்றி- துரை.நாகராஜன் விகடன்)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 May 2019, 14:00