தேடுதல்

Vatican News
பசியாயிருக்கும் பறவைகள் பசியாயிருக்கும் பறவைகள்  (ANSA)

பூமியில் புதுமை – ஆப்ரிக்காவில் காலநிலை மாற்றத்தின் தாக்கம்

நலமற்ற வாழ்வுமுறைக்கும், சிறுவயது இறப்புகளுக்கும் இடையேயுள்ள தொடர்பை வலியுறுத்தும் நோக்கத்தில், “நலமான வாழ்வுமுறை ஆயுளை நீட்டிக்கிறது” என்ற தலைப்பில், 2019ம் ஆண்டின் ஆப்ரிக்க நாள் (மே 25) சிறப்பிக்கப்படுகின்றது

மேரி தெரேசா - வத்திக்கான்

ஆப்ரிக்கா, பரப்பளவிலும், மக்கள் தொகையிலும், ஆசியாவுக்கு அடுத்த நிலையில்,  உலகின் இரண்டாவது பெரிய கண்டமாக அமைந்துள்ளது. இக்கண்டம், முழுவதும் இறையாண்மை கொண்ட 54 நாடுகள், சுதந்திர நாடுகளாக அறிவித்துக் கொண்டவை இரண்டு மற்றும் ஒன்பது பகுதிகளை உள்ளடக்கியது. ஆப்ரிக்காவில், ஏறத்தாழ எழுபது இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னரே, மனிதர் வாழ்ந்துள்ளனர் என ஆய்வுகள் உறுதிசெய்கின்றன. பல்வேறு அரிய உயிரினங்கள், பெரிய மனித இனங்கள், கலாச்சாரங்கள் மற்றும் மொழிகளைக் கொண்டிருக்கும் இக்கண்டத்தின் ஏறத்தாழ அனைத்துப் பகுதிகளும், 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், ஐரோப்பாவின் காலனிகளாக இருந்து, இரண்டாம் உலகப் போருக்குப்பின், 1945க்கும், 1965ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் விடுதலை அடைந்தன. முதலில் விடுதலை அடைந்த கானா நாடு, (மார்ச்,6,1957), 1958ம் ஆண்டு, ஏப்ரல் 15ம் தேதி, ஆப்ரிக்க சுதந்திர நாடுகளுக்கென முதல் கருத்தரங்கை நடத்தியது. பின்னர், 1963ம் ஆண்டு மே 25ம் தேதி, கானாவில் நடைபெற்ற இரண்டாவது கருத்தரங்கில், ஆப்ரிக்க ஒன்றிய நிறுவனம் (OAU) என்ற அமைப்பு, எத்தியோப்பிய தலைநகர் Addis Ababaவைத் தலைமை இடமாக அமைத்து, உருவாக்கப்பட்டது. ஆப்ரிக்காவில் காலனி பேராதிக்கத்தைப் புறக்கணிப்பதை உறுதி செய்யும் வகையில், இக்கருத்தரங்கில், முதல் ஆப்ரிக்க சுதந்திர நாள் சிறப்பிக்கப்பட்டது. பின்னாளில், இந்த நாள், ஆப்ரிக்க நாளாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. நலமற்ற வாழ்வுமுறைக்கும், சிறுவயது இறப்புகளுக்கும் இடையேயுள்ள தொடர்பை வலியுறுத்தும் நோக்கத்தில், “நலமான வாழ்வுமுறை ஆயுளை நீட்டிக்கிறது” என்ற தலைப்பில், இவ்வாண்டு, ஆப்ரிக்க நாள் சிறப்பிக்கப்படுகின்றது. இந்த நாள், ஆப்ரிக்காவிலும், உலகிலும், ஒவ்வோர் ஆண்டும், பெரும்பாலும் மே 25ம் தேதி சிறப்பிக்கப்படுகின்றது. வத்திக்கான் வானொலியில் இந்நாள், மே 23 இவ்வியாழனன்று சிறப்பிக்கப்பட்டது.

ஆப்ரிக்கா, பல்வேறு வகையான விலங்குகள், பறவைகள், தாவரங்கள், பன்முகத்தன்மை கொண்ட உயிரினங்கள் போன்றவற்றை வளமையாகக் கொண்டிருக்கும் கண்டம். தற்போதைய காலநிலை மாற்றத்தால், ஆப்ரிக்கப் பறவைகள் மற்றும் பாலூட்டி இனங்களில் பாதிக்கும்மேலும், ஏரிகளிலுள்ள, தாவரங்கள் மற்றும், விலங்குகளில்  இருபது முதல் முப்பது விழுக்காடும் அழிந்துவிட்டன. இதனால், ஆப்ரிக்காவில்  மக்களின் வாழ்வாதாரங்கள், நீர் விநியோகம், உணவுப் பாதுகாப்பு போன்றவை பாதிக்கப்பட்டுள்ளன என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

23 May 2019, 14:26