தேடுதல்

2018ம் ஆண்டு மே 22ம் தேதி, 'ஸ்டெர்லைட்' தாமிர உருக்காலைக்கு எதிராக, மக்களின் போராட்டம் 2018ம் ஆண்டு மே 22ம் தேதி, 'ஸ்டெர்லைட்' தாமிர உருக்காலைக்கு எதிராக, மக்களின் போராட்டம் 

பூமியில் புதுமை – 'ஸ்டெர்லைட்' படுகொலையின் முதல் ஆண்டு

2018ம் ஆண்டு மே 22ம் தேதி, தூத்துக்குடியில், தங்கள் சுற்றுச்சூழலைக் காப்பதற்காக போராடி, உயிர் துறந்த தியாக உள்ளங்களை, இன்று நன்றியோடு எண்ணி, நம் வணக்கங்களைச் செலுத்துவோம்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

மே 22, இப்புதனன்று, World Biodiversity Day, அதாவது, உயிர்களின் பன்முகத்தன்மை உலக நாள் சிறப்பிக்கப்படுகிறது. முன்னேற்றம் என்ற பெயரில், சுற்றுச்சூழலையும், உயிரினங்களையும் அழிக்கும்வண்ணம் நடைபெற்றுவரும் முயற்சிகளுக்கு ஓர் எச்சரிக்கையாக, 2012ம் ஆண்டு நடைபெற்ற, Rio+20 உலக உச்சி மாநாட்டின் இறுதியில், "The World We Want: A Future for All" அதாவது, "நாம் விழையும் உலகம்: அனைத்திற்கும் ஓர் எதிர்காலம்" என்ற தலைப்பில் ஓர் அறிக்கை வெளியானது. ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும் ‘All’ என்ற சொல், 'அனைவருக்கும்' என்றும், 'அனைத்திற்கும்' என்றும், இருவகை பொருள் தரும். அச்சொல்லை, இவ்வறிக்கையில் பயன்படுத்தியதன் வழியே, எதிர்காலம், அனைத்து உயிரினங்களின் உரிமை என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.

உயிர்களின் பன்முகத்தன்மை உலக நாளை சிறப்பிக்கும்வேளையில், மனித உயிர்களுக்கே ஆபத்தாக அமையும் பல்வேறு தொழிற்சாலைகளையும், அவை, சுற்றுச்சழலுக்கும், மனிதர்களுக்கும் விளைவிக்கும் எதிர்மறைத் தாக்கங்களையும், நாம் எண்ணிப்பார்க்கிறோம். இவ்வுலக நாளை சிறப்பிக்கும் மே 22ம் தேதி, நம் எண்ணங்கள் தமிழகத்தின் தூத்துக்குடி நகரை நோக்கிச் செல்கிறது.

1998ம் ஆண்டு, தூத்துக்குடியில் செயல்படத் துவங்கிய 'ஸ்டெர்லைட்' தாமிர உருக்காலைக்கு எதிராக, 1999ம் ஆண்டு முதல் போராட்டங்கள் ஆரம்பமாயின. தூத்துக்குடியின் நிலம், நீர், காற்று அனைத்திலும் நச்சுப்பொருள்களைக் கலந்து வந்த அந்த ஆலையை மூடவேண்டும் என்று மக்கள் போராடி வந்தனர். பல்வேறு போராட்டங்களின் சிகரமாக, 2018ம் ஆண்டு மே 22ம் தேதி, பல்லாயிரம் மக்கள், போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது நடத்தப்பட்ட வெறித்தனமான துப்பாக்கிச் சூட்டில், 13 பேர் கொல்லப்பட்டனர், இன்னும் பலர் காயமடைந்தனர். ஆயுதம் ஏந்தாமல், அறவழிப் போராட்டம் மேற்கொண்ட மக்கள் மீது, திட்டமிட்டு நடத்தப்பட்ட வன்முறை இது என்று, விசாரணைகள் பலவற்றில் கூறப்பட்டுள்ளது.

2018ம் ஆண்டு மே 22ம் தேதி, தூத்துக்குடியில், தங்கள் சுற்றுச்சூழலைக் காப்பதற்காக போராடி, உயிர் துறந்த தியாக உள்ளங்களை, இன்று நன்றியோடு எண்ணி, நம் வணக்கங்களைச் செலுத்துவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 May 2019, 14:54