தேடுதல்

Vatican News
அங்காடிகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் காய்களும், கனிகளும் அங்காடிகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் காய்களும், கனிகளும் 

பூமியில் புதுமை – உணவு வழியே ஊட்டப்படும் நஞ்சுகள்

விளைநிலத்தில் ஆரம்பித்து, அங்காடிகளில், விற்பனைக்கு வைக்கப்படுவது வரை, நம் உணவுப்பொருள்களில், படிப்படியாக சேர்க்கப்படும் நஞ்சுகள் என்னென்ன என்பதை அறிந்துகொள்வது அவசியம்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

நிலத்தில் துவங்கி, நமது தட்டுக்கு வந்துசேரும் வரையில் நம் உணவில் சேர்க்கப்படும் நஞ்சான வேதிப்பொருள்களின் எச்சங்கள் பற்றி நமக்கு தெரிந்தது எவ்வளவு? மிக, மிகக் குறைவே என்றும், அந்த நஞ்சை எவ்விதம் தவிர்க்கமுடியும் என்பதையும் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வழியே பகிர்ந்துகொள்கிறார், இயற்கை வேளாண் செயல்பாட்டாளரும், பாதுகாப்பான உணவுச் சந்தைகளை உருவாக்கிவருபவருமான திருவாளர் அனந்து. அவர் கூறியுள்ள கருத்துக்களின் சுருக்கம்:

நாம் வாங்கும் காய்கறி வகைகளில் உள்ள வேதிப்பொருள்களை சிறப்பான ஒரு தண்ணீர் கருவியைக் கொண்டு கழுவினால், வேதிப்பொருள்கள் நீங்கிவிடும் என்று ஒரு விளம்பரம் கூறுவதை நம்பும் அளவுக்கு மட்டுமே நாம் இந்தப் பிரச்சனையைக் குறித்து அறிந்திருக்கிறோம் என்பது, வேதனையான உண்மை.

விளைநிலத்தில் ஆரம்பித்து, அங்காடிகளில், விற்பனைக்கு வைக்கப்படுவது வரை, நம் உணவுப்பொருள்களில், படிப்படியாக சேர்க்கப்படும் நஞ்சுகள் என்னென்ன என்பதையும், சிறப்பான தண்ணீர் கருவியிலிருந்து வரும் தண்ணீர், நம் உணவுப்பொருள்களில் உள்ள வேதியியல் நஞ்சுகளை அகற்றாது, என்பதையும், அறிந்துகொள்வது அவசியம்.

உரம் என்ற பெயரில், விளைநிலங்களில் கலக்கப்படும் வேதியியல் நஞ்சுகளை ஓரளவு நாம் அறிவோம். அவற்றை ஞெகிழி பெட்டிகளில் அடைத்து, பல்பொருள் அங்காடிகளில் நீண்ட நாள்கள் வைத்து விற்பனை செய்வதற்கு, மேலும் பல ஆபத்தான வேதிப்பொருள்கள் எளிதாகச் சேர்க்கப்படுகின்றன. இவ்வாறு சேர்க்கப்படும் பதப்படுத்திகளால் உருவாகும் பக்கவிளைவுகளும், அவை நம் உடலில் தூண்டிவிடும் நோய்களும் பல்வேறு ஆய்வுக்கூடங்கள் வழியே ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

உணவுப்பொருள் விற்பனை, இலாபத்தை முதன்மைப்படுத்தும் மிகப்பெரும் வர்த்தகமாக மாறியுள்ளது. மனித நலம், சுற்றுச்சூழலின் நலம், மற்ற உயிரினங்களின் பராமரிப்பு ஆகிய அனைத்தையும் இணைக்கும் சங்கிலித் தொடருக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை. இந்த வர்த்தகத்தில் பன்னாட்டு நிறுவனங்களின் படையெடுப்பு, வளர்ந்துவரும் நாடுகளை அழிவுப்பாதையில் அழைத்துச் செல்கின்றது.

நம்மை இறுக்கமாகப் பிணைத்திருக்கும் இந்த நச்சுச் சங்கிலியை உடைத்தெறிய ஒரே வழி, 'ஆர்கானிக்' எனப்படும் இயற்கை வழி உணவு. உணவுப்பொருள்கள் உற்பத்தி முதல், அவை, அங்காடிகள் வழியே, நம்மிடம் வந்து சேரும்வரை மேற்கொள்ளப்படும் வர்த்தக முயற்சிகளைக் குறித்து, கேள்விகளை எழுப்பி, விடைதேடுவது முக்கியம். இத்தேடலில் நாம் கண்டடையும் பதில்கள் வழியே, உணவுச் சுழற்சியை, நலவாழ்வை, உணவே மருந்தென கருதப்பட்ட நம் பாரம்பரியத்தை அறிவதற்கு, முயற்சிகள் எடுக்கவேண்டும். (இந்து தமிழ் திசை)

14 May 2019, 14:40