தேடுதல்

Vatican News
இங்கிலாந்து பிரதமர் தெரேசா மே இங்கிலாந்து பிரதமர் தெரேசா மே  (ANSA)

இங்கிலாந்து அரசியல் தலைவர்களின் உயிர்ப்பு விழா செய்தி

அந்நியரை வரவேற்குமாறு இயேசு விடுத்த விண்ணப்பத்தை நினைவுகூர்வோம், ஏனெனில், இது நமக்கு விடுக்கப்பட்டுள்ள அறநெறி சார்ந்த ஆய்வுக்கான அழைப்பு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

இவ்வுலகில் கிறிஸ்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக மக்கள் அனுபவிக்கும் சித்ரவதைகள், மற்றும், புலம்பெயர்ந்தோர் அனுபவிக்கும் துன்பங்கள் குறித்து, தங்கள் உயிர்ப்பு விழா வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளனர், இங்கிலாந்து அரசியல் தலைவர்கள்.

புது வாழ்வையும் நம்பிக்கையையும் கொணரும் இந்த உயிர்ப்பு விழாவின்போது, கோவிலுக்குச் சென்று நன்றிகூறும் வேளையில், அத்தகையதொரு வழிபாட்டில் கலந்து கொள்வது மிக ஆபத்து நிரம்பியதாக, சில நாடுகளில் மாறியுள்ளது குறித்து ஆழ்ந்த கவலை கொள்கிறேன் என உயிர்ப்பு விழா வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் இங்கிலாந்து பிரதமர் தெரேசா மே.

இன்றைய உலகில் கோவில்கள் தாக்கப்படுகின்றன, கிறிஸ்தவர்கள் கொலை செய்யப்படுகிறார்கள், கிறிஸ்தவக் குடும்பங்கள் நாடுகளைவிட்டு ஓடும்படி கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் என்ற காரணங்களாலேயே, இங்கிலாந்து அரசு, கிறிஸ்தவர் மீதான சித்ரவதைகள் குறித்து, உலக அளவில், ஓர் ஆயவை துவக்கியுள்ளது எனவும், தன் செய்தியில் கூறியுள்ளார், இங்கிலாந்து பிரதமர்.

ஒவ்வொருவரின் உரிமைகளும் மதிக்கப்பட நாம் துணையாக நிற்கவேண்டும், ஒருவர் எம்மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், அதைக் கடைப்பிடித்து அமைதியில் வாழ்வதற்கு உதவவேண்டும் எனவும் விண்ணப்பித்துள்ள பிரதமர் தெரேசா மே அவர்கள், திருவிழாக்களை தங்கள் குடும்பத்துடன் கொண்டாட ஒவ்வொருவருக்கும் இருக்கும் தடைகள் அகற்றப்பட வேண்டும் எனவும் விண்ணப்பித்துள்ளார்.

இங்கிலாந்தின் எதிர்க்கட்சித் தலைவர் Jeremy Corbyn அவர்கள் வெளியிட்டுள்ள உயிர்ப்பு விழாச் செய்தியில், இன்றைய உலகில் 6 கோடியே 80 இலட்சம் பேர் புலம்பெயர்ந்தவர்களாக வாழும் நிலையில், அந்நியரை வரவேற்குமாறு இயேசு விடுத்த விண்ணப்பத்தை நினைவுகூர்வோம், ஏனெனில், இது நமக்கு விடுக்கப்பட்டுள்ள அறநெறி சார்ந்த ஆய்வுக்கான அழைப்பு எனவும் கூறியுள்ளார்.

22 April 2019, 16:02