தேடுதல்

Vatican News
ஆபத்தான சூழல்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஆபத்தான சூழல்களில் பணிபுரியும் தொழிலாளர்கள்  (AFP or licensors)

ஒவ்வோர் ஆண்டும் 28 இலட்சம் பணியாளர்கள் இறப்பு

தற்போதைய நவீன தொழில்முறைகள், மக்கள்தொகை பெருக்கம், அதிகரித்துவரும் டிஜிட்டல் தொடர்புகள், பருவநிலை மாற்றம் போன்றவை, தொழிலாளர்களை அதிகம் பாதிக்கின்றன

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

மனஅழுத்தம், நீண்ட நேர வேலை, மற்றும் நோயால், ஒவ்வோர் ஆண்டும் ஏறத்தாழ 28 இலட்சம் பணியாளர்கள் இறக்கின்றனர் எனவும், வேலைகளின்போது இடம்பெறும் விபத்துக்களால், மேலும் 37 கோடியே 40 இலட்சம் பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் நோயால் தாக்கப்பட்டுள்ளனர் என, ILO எனப்படும் உலக தொழில் நிறுவனம் அறிவித்துள்ளது.     

ஐ.நா.வின் ILO உலக தொழில் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், ஊதியம் வழங்கப்படாத உழைப்பு, நலவாழ்வுக்கும், வாழ்வின் பாதுகாப்புக்கும், வாழ்வுக்குமே அச்சுறுத்தலாக உள்ளது என்றும், தொழில்துறையில் தற்போது நிலவும் பல்வேறு புதிய நெருக்கடிகள், ஆண்களைவிட பெண்களை அதிகம் பாதிக்கின்றன என்றும் கூறப்பட்டுள்ளது.

தற்போதைய நவீன தொழில்முறைகள், மக்கள்தொகை பெருக்கம், அதிகரித்துவரும் டிஜிட்டல் தொடர்புகள், பருவநிலை மாற்றம் போன்றவை, தொழிலாளர்களை அதிகம் பாதிக்கின்றன எனவும், ILO நிறுவனத்தின் அறிக்கை கூறுகின்றது.

உலகில் இடம்பெறும் வேலை தொடர்புடைய இறப்புகளில் 86 விழுக்காடு, நோய்களால் இடம்பெறுகின்றன எனவும், வேலை தொடர்புடைய நோய்களால், ஒவ்வொரு நாளும் ஏறத்தாழ 6,500 பேர் இறக்கின்றனர் எனவும், ILO நிறுவனம் கூறியுள்ளது. (UN)

23 April 2019, 13:26