இலங்கை குண்டு வெடிப்பில் இறந்தோருக்கு அஞ்சலி இலங்கை குண்டு வெடிப்பில் இறந்தோருக்கு அஞ்சலி 

நியூஸிலாந்து தாக்குதலின் எதிரொலி இலங்கைத் தாக்குதல்கள்

இஸ்லாமிய அரசு என்றழைக்கப்படும் ISIS அமைப்பு, இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்றுள்ளது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து, இந்திய உளவுத்துறை அளித்த எச்சரிக்கை தகவல்கள் தன்னை வந்து சேரவில்லை என்று இலங்கை அரசுத்தலைவர் மைத்ரிபால சிறிசேனா அவர்கள் கூறினார் என்று, ஆசிய செய்தி கூறுகிறது.

இந்திய உளவுத் துறை மூன்று எச்சரிக்கைகளை வழங்கியதென்றும், முதல் எச்சரிக்கை ஏப்ரல் 4ம் தேதி விடுக்கப்பட்டுள்ளது என்றும், இறுதி எச்சரிக்கை ஏப்ரல் 21ம் தேதி, தாக்குதல்கள் நடைபெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் விடுக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

தற்போதைய தகவல்களின்படி, இஸ்லாமிய அரசு என்றழைக்கப்படும் ISIS அமைப்பு, இந்தத் தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்றுள்ளதாகவும், மார்ச் மாதம் நியூஸிலாந்து நாட்டின் மசூதிகளில் நடைபெற்ற தாக்குதல்களுக்கு எதிரொலியாக, இத்தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன என்றும் தெரியவந்துள்ளன.

ISIS அமைப்பு, இலங்கையில் உள்ள Thowheed Jamath மற்றும் Jamaat-ul-Mujahideen ஆகிய இரு அமைப்புக்களுடன் இணைந்து இத்தாக்குதல்களை மேற்கொண்டதாக ஊடகங்கள் கூறுகின்றன.

கண்காணிப்பு காமிராக்களின் உதவியுடன் ஏழு தற்கொலைப்படையினரின் அடையாளங்கள்  வெளியாகியுள்ளன என்றும், இது தொடர்பாக, இதுவரை 40க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், ஆசிய செய்தி மேலும் கூறுகிறது.

இறுதியாக வெளிவந்த தகவல்களின்படி, இதுவரை, 359 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், மேலும் 500க்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்றும் ஆசிய செய்தி அறிவித்துள்ளது. (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 April 2019, 15:28