பிரேசில் காடு பிரேசில் காடு 

பூமியில் புதுமை : அழிந்துபோன வனத்தை மீட்டெடுத்துள்ள தம்பதியர்

பிரேசில் நாட்டவரான, 75 வயதுடைய Sebastião Salgado அவர்கள், புகைப்பட பத்திரிகையாளர் மற்றும் சமுதாய ஆவணப்பட புகைப்படக்காரர். உலகின் முக்கியமான விருதுகளைப் பெற்றுள்ள, இயற்கை ஆர்வலரான இவர், பிரேசிலில் அழிந்துபோன காடுகளை மீள்உருவாக்கம் செய்துள்ளார்

மேரி தெரேசா - வத்திக்கான்

உலகப் புகழ்பெற்ற, 75 வயது நிரம்பிய  பிரேசில் நாட்டு ஒளிப்படக் கலைஞரான Sebastião Salgado (பிறப்பு, 8 பிப்.1944) அவர்கள், ஆப்ரிக்க நாடான ருவாண்டாவில்,1994ம் ஆண்டு ஏப்ரல் 7ம் தேதியிலிருந்து, ஜூலை பாதிவரை நடைபெற்ற இனப்படுகொலையை ஆவணப்படுத்திக் கொண்டிருந்தார். அச்சமயத்தில் எங்குத் திரும்பினாலும் பிணங்களை மட்டும்தான் கண்டார் அவர். எனவே, மனதளவிலும் உடலளவிலும் மிகவும் பாதிக்கப்பட்டு, அதே ஆண்டு பிரேசிலுக்குத் திரும்பினார் அவர். அந்நாட்டின் Minas Gerais மாநிலத்தில் இவர் பிறந்த Aimorés நகருக்கு அருகிலுள்ள அவரது குடும்ப கால்நடை பண்ணையில், ஓய்வுக்காக, வெகு காலத்திற்குப் பின்னர் சென்றார். காடுகளும் மரங்களும் நிறைந்த அந்தப் பகுதியில், ஏறக்குறைய 0.5விழுக்காடு நிலத்தில் மட்டுமே மரங்கள் இருந்ததையும், நிலமும் தன்னைப்போல் நோயாளியாக இருந்ததையும் அவர் கண்டார். அப்போது அவரது மனைவி Lélia Deluiz Wanick Salgado அவர்கள், காட்டினை மீட்டுருவாக்கம் செய்வதற்குச் சொன்ன ஆலோசனையின்படி, ஆரம்பத்தில் அவர்கள், இருபது, முப்பது வேலையாட்களை வைத்துக்கொண்டு மரங்களை நடத் தொடங்கினர். இதன் பயனாக, 1998ம் ஆண்டில் அழிந்துபோயிருந்த 1,740 ஏக்கர் மலைக்காடுகள் நிரம்பிய நிலத்தில், 1,502 ஏக்கர் மலைக்காடுகளை மறு உருவாக்கம் செய்துள்ளனர். இதற்காக இவர்கள், தனியார் பாரம்பர்ய இயற்கைப் பாதுகாப்பு மையம் (Private Natural Heritage Reserve) என்ற பெயரைப் பெற்றுள்ளனர். இதற்கிடையில் 1998ம் ஆண்டில் இவ்விருவரும் பூமி அமைப்பை (Instituto Terra) ஆரம்பித்தனர். காடுகளை மீட்டெடுப்பதற்கும் பாதுகாப்பதற்கும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வைக் கொடுப்பதற்கும் இந்த அமைப்பு பயன்பட்டது. இதுவரை அவர்கள், 20 இலட்சம் மரங்களுக்குமேல் நட்டுள்ளனர். அங்கு, 290க்கும் மேற்பட்ட உயிரின வகைகள் வாழ்கின்றன. பறவைகளில் 172 இனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. காடுகளை மீட்டுருவாக்கம் செய்யும்போது மரங்களை வளர்ப்பதில்கூட மண்ணுக்கேற்ற மரங்களை வளர்ப்பதில் கவனமாக Salgado தம்பதியர் இருக்கின்றனர். 2015ம் ஆண்டு பாரிஸ் காலநிலை உலக மாநாட்டில் Salgado அவர்கள் பேசும்போது, ``மரங்கள் மட்டுமே, கார்பன் டை ஆக்ஸைடை ஆக்சிஜனாக மாற்றக்கூடியது. நாம் காடுகளை மீண்டும் வளர்க்க வேண்டும். அந்தந்தப் பகுதிகளுக்கு உரிய மண்வள மரங்களைக்கொண்டு காடுகள் அமைய வேண்டும். அவைதான் இயற்கைச் சூழலுக்கானவை. மேலும், அந்தந்த மண்ணின் மாந்தர்களின் வார்த்தைகளைக் காதுகொடுத்துக் கேட்க வேண்டும். நாம் இயற்கைக்கும் பூமிக்கும் எதையாவது திருப்பி அளிக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார். Salgado தம்பதியர், காடு இருக்கும் பகுதியை இப்போதுவரை உரிமை கொண்டாடவில்லை என்பது எல்லாரையும் வியக்க வைக்கிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 April 2019, 15:48