தேடுதல்

Vatican News
விவசாயத்தில் ஈடுபட்டிருப்போர் விவசாயத்தில் ஈடுபட்டிருப்போர்  (AFP or licensors)

பூமியில் புதுமை: பயிரின் மீதி மாட்டுக்கு, மாட்டு கழிவு பயிருக்கு

எந்த உயிருக்கும் தீங்கு செய்யாமல் நஞ்சில்லாத உணவை உற்பத்தி செய்வது திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது, என்கிறார் இயற்கை விவசாயி

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

அரியலூர் மாவட்டம், இரவங்குடி கிராமத்தில் உள்ள இயற்கை விவசாயி ஞானசேகரன் அவர்கள், அவரது பண்ணையை ஒருங்கிணைந்த பண்ணையமாக உருவாக்கியுள்ளார். பொறியியல் பட்டதாரிகளான இவரின் இரண்டு மகன்களும் தற்போது விவசாயத்தில் முழுநேரமாக ஈடுபட்டிருக்கிறார்கள்.

ஒரு முறை பூச்சிக்கொல்லிகளைப் பற்றி ஞானசேகரன் அவர்கள் படித்த தகவல் அவருக்கு இயற்கை விவசாயத்தின் மேல் ஆர்வத்தை ஏற்படுத்தியது. பயிருக்கு அடிக்கும் பூச்சிக்கொல்லிகளின் எச்சம், அந்த பயிரின் இலைகளில் பல ஆண்டுகளுக்கு இருக்குமென்றும், அந்த இலைக்கழிவுகளை, கால்நடைகளுக்கு போடும்போது அந்த நஞ்சு கால்நடைகளின் இரத்தத்தில் கலந்து, அது தரும் பாலையும் நஞ்சாக்குகிறது என்பதையும் படித்து அதிர்ச்சியடைந்தார். தன் இரு மகன்களையும் அழைத்து, இந்த வேதிய விவசாயம் இனி நமக்கு வேண்டாம், உங்களது பாட்டனார் கடைபிடித்த இயற்கை விவசாயத்தையே நீங்களும் கடைப்பிடியுங்கள் என்று எடுத்துக் கூறினார். இனி நம் பூமியில் கண்டிப்பாக வேதியப் பொருள் பயன்படுத்தக் கூடாது, நீரையும் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்தது அவர் குடும்பம். எந்த உயிருக்கும் தீங்கு செய்யாமல் நஞ்சில்லாத உணவை உற்பத்தி செய்வது திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது எனக் கூறும் அக்குடும்பம், "நமது தாத்தா, பாட்டன் பின்பற்றிய, பயிரின் கழிவு மாட்டுக்கு, மாட்டின் கழிவு பயிருக்கு என்பதை ஒவ்வொரு விவசாயியும் நினைவில் வைத்து அவரவர் பண்ணையை ஒரு முழுமையான சுயசார்பு பண்ணையாக மாற்றவேண்டும்” என்பதற்கு, முன்னுதாரணமாக நின்று சொல்லித் தருகின்றது.

24 April 2019, 14:57