தேர்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் கூட்டம் தேர்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் கூட்டம் 

பூமியில் புதுமை : சுற்றுச்சூழல் மீது தேர்தல் ஆணையத்தின் அக்கறை

குப்பைகள் மறுசுழற்சி, திடக்கழிவு மேலாண்மைத் திட்டங்களை விரிவுபடுத்தல், மணல் கொள்ளை தடை உத்தரவை நடைமுறைப்படுத்தல், சீமைக் கருவேல மரங்கள் அழிப்பு, என சுற்றுச்சூழலை முன்னிறுத்தி, தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கப்படும் அளவுக்கு விழிப்புணர்வு அதிகரித்துள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இந்தியத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, மக்காத பிளாஸ்டிக் பொருட்கள் அல்லது ஒரே முறை மட்டும் பயனாகும் பிளாஸ்டிக் பொருட்கள், தீங்கு விளைவிக்கும் பொருட்கள் ஆகியவற்றை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும் என்றும், ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தும்போது, ஒலி மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும், தேர்தல் ஆணையம் வலியுறுத்தியிருந்தது.

தேர்தல் பிரச்சாரங்களின்போது, மக்காத பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டைத் தடை செய்வது தொடர்பாக முடிவெடுக்குமாறு, மார்ச் 4ம் தேதி, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது, பசுமைத் தீர்ப்பாயம். இதுபோன்ற பொருட்களின் பயன்பாட்டைத் தடைசெய்யுமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடுமாறு, பசுமைத் தீர்ப்பாயத்தில் சஞ்சய் உபாத்யாய் எனும் வழக்கறிஞர் கோரியிருந்த நிலையில், பசுமைத் தீர்ப்பாயம் அளித்த உத்தரவின்படி, தேர்தல் ஆணையம் செயல்பட்டிருக்கிறது.

2016ம் ஆண்டு, தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, சென்னை உயர் நீதிமன்றமும் இது தொடர்பாகத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. தேர்தல் காலங்களில் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் 10 டன் பிளாஸ்டிக் குப்பைகள் சேருகின்றன என்று, இவ்வழக்கின் மனுதாரர்கள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு முறை பயனாகும் பிளாஸ்டிக் பொருட்களை, 2022ம் ஆண்டுக்குள் முற்றிலும் ஒழிக்கும் நோக்கம் நிறைவேற, பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதை உணர முடிகிறது.

சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு எவ்வளவு தூரம் பெருகியுள்ளது என்றால், ஒரு கட்சியின் தேர்தல் அறிக்கையிலேயே இதனைக் காண முடிகிறது. திருப்பூர் சாயக்கழிவு நீர் மறுசுழற்சித் திட்டங்களைச் செயல்படுத்த உதவி, குப்பைகள் மறுசுழற்சி, திடக்கழிவு மேலாண்மைத் திட்டங்களை விரிவுபடுத்தல், மணல் கொள்ளை தடை உத்தரவை நடைமுறைப்படுத்தல், சீமைக் கருவேல மரங்கள் அழிப்பு, என, சுற்றுச்சூழலை முன்னிறுத்தி, தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருப்பது, மகிழ்ச்சியான செய்தி.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 April 2019, 15:33