தேடுதல்

லடாக் SECMOL பள்ளி லடாக் SECMOL பள்ளி 

பூமியில் புதுமை : மலைகளின் நடுவே சூழலியல் பள்ளி

லடாக் சூழலியல் பள்ளியில் சேரப்போகும் மாணவர்கள், "இங்குப் படிப்பது சம்பாதிப்பதற்காக அல்ல, வாழ்வதற்காக" எனச் சொல்கின்றனர். இப்பள்ளி, ஒவ்வொருவருக்கும் தேவையான படிப்பை மட்டுமன்றி, சுற்றுச்சூழலைக் காப்பதன் அவசியத்தையும் கற்றுக்கொடுக்கிறது

மேரி தெரேசா- வத்திக்கான்

இந்தியாவின் லடாக்கின், லேய் (Leh) மாவட்டத்தில், வெவ்வேறு துறைகளில் பணியாற்றும் சில இளையோர் இணைந்து, லடாக் கல்வி அமைப்பை சீர்படுத்தும் நோக்கத்தில், 'லடாக் மாணவர் கல்வி மற்றும் கலாச்சார அமைப்பு' ஒன்றை, 1988ம் ஆண்டில் உருவாக்கினர். SECMOL எனப்படும் இந்த அரசு-சாரா சமூகநல அமைப்பு, தற்போது பள்ளியாகச் செயல்பட்டு வருகிறது. இந்துஸ் பள்ளத்தாக்கில் Phey கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள இந்த சிக்மோல் பள்ளி, ஏராளமான கிராம மாணவர்களுக்கு கல்வி வழங்கி வருகிறது. இந்தப் பள்ளியில், 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் தேர்ச்சி பெற்றவர்கள், பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தியவர்கள் (வயது வரம்பு உண்டு),  மற்றும் அனைத்து தரப்பினரும் சேரலாம். மாற்றுத்திறன் இளையோர், பெற்றோர் இல்லாத மாணவர்கள், கஷ்ட சூழலால் படிப்பைக் கைவிட்ட மாணவர்கள் போன்றோருக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகின்றது. இந்தப் பள்ளியில் சேரும் மாணவர்கள், காலையில் எழுந்ததும்,. தோட்ட வேலை, கால்நடைகளைக் கவனித்தல், மரங்களைப் பராமரித்தல், உணவு சமைத்தல், பண்ணையை சுத்தம் செய்தல், வகுப்பறைகளைத் தயார் செய்தல் எனப் ஆளுக்கு ஒரு வேலையாகத் தொடங்க வேண்டும். கால்நடைகளில் இருந்து பெற்ற பாலை மதிப்புக் கூட்டுதல், சாணத்தைக் கொண்டு பயோகேஸ் தயாரிப்பு, மழைநீர் சேகரிப்பு, ஆப்பிள் மற்றும் காய்கறி தோட்ட பராமரிப்பு, விளைந்த காய்கறிகளையும், பழங்களையும் மதிப்புக்கூட்டி மாணவர்களுக்குக் கொடுத்தல், ஆங்கில பாட வகுப்பு, கலாச்சாரம் மற்றும் வாழ்க்கைமுறை வகுப்பு, பாடல் மற்றும் நடனம் வகுப்பு, பனிச்சறுக்கு பயிற்சி, சமுதாய பாடப்படிப்பு என பல்வேறு விதமான வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த வளாகத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு கிடையாது. இங்கு பயன்படுத்தும் ஒரு பொருளின் ஆயுட்காலம் முடிந்துவிட்டால் அதனை மற்றொரு காரியத்திற்கு பயன்படுத்திக் கொள்ளுதல் என, வாழ்க்கைமுறை மாற்றி போதிக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு இரண்டு மணிநேரமாவது, காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பிரச்சனைகள், மறுசுழற்சி செய்தல், சோலார் மின்சாரம் தயாரிப்பு எனப் பலவிதமான சுற்றுச்சூழல் வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. லடாக்கில், ஆண்டின் 300க்கும் அதிகமான நாள்களில் சூரிய ஒளி கிடைப்பதால், மின்சாரத் தேவைகளில் முக்கால்வாசி, சோலார் மூலமாகவே நிறைவேற்றப்படுகிறது. தண்ணீர் சூடேற்றப்படுவது, தேநீர் தயாரிப்பது போன்றவை சோலார் மூலம் நடைபெறுகின்றன. சுற்றிலும் வெறுமையாகக் காட்சியளிக்கும் அந்த இடத்தில், சிக்மோல் பள்ளியில் மட்டுமே பசுமை காணப்படுகிறது. இன்று லடாக்கில் உள்ள வீடுகள் உயரமான கட்டடங்களாக வளர்ந்து நிற்கும்போது, வெறும் மரங்களையும், மண்ணையும் கொண்டு கட்டப்பட்டிருக்கிறது, இந்தப் பள்ளி. இங்கு சிறப்பு பாடங்கள் நடத்த அமெரிக்கா மற்றும் கானடாவில் இருந்து சிறப்பு ஆசிரியர்கள் வருகை தருகின்றனர். (நன்றி - விகடன் துரை.நாகராஜன்)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 April 2019, 15:04