பூட்டான் Blood Peasant பறவைகள் பூட்டான் Blood Peasant பறவைகள் 

பூமியில் புதுமை : அழிவுக்குள்ளாகும் உயிரினங்கள்

உலகில் பல வண்ணங்கள் கொண்ட அழகிய உயிரினங்களுக்கு வாழ்நாள் கொஞ்சம் குறைவுதான் என்பது இயற்கையின் எழுதப்படாத நியதி. அதை எழுதிக்கொண்டிருக்கும் மனிதர்களில் சிலர் செய்யும் தவறுகளால் ஓர் இனமே முழுவதுமாக அழிவில் சிக்கிவிடுகின்றது

மேரி தெரேசா - வத்திக்கான்

உலகளாவிய இயற்கைப் பாதுகாப்பு அமைப்பு (IUCN) 2012ம் ஆண்டில் வெளியிட்ட அறிக்கையின்படி, உலகில் 3,079 விலங்கினங்களும், 2,655 தாவர இனங்களும் அழிவின் ஆபத்தில் உள்ளன. ‘panda கரடிகள், பெரிய தந்தங்களையுடைய ஸ்டெகோடான் யானை, சீனக் காண்டா மிருகம், கரீபிய கடற்சிங்கம், தூதுசெல்லும் புறா, நீலத் திமிங்கிலம், பனிச் சிறுத்தைகள், செங்கால் குரங்கு போன்ற பத்து உயிரினங்கள் அழியும் ஆபத்தில் உள்ளன. ஏற்கனவே உலகில் பல இடங்களில் அழிந்துவிட்ட பண்டாக் கரடிகள், இன்று சீனாவில் 1,600 மட்டுமே உள்ளன. இந்நிலையில், கரூர் மாவட்டம், வெள்ளியணை கிராம அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஆசிரியர் தனபால் அவர்கள், உயிரினப் பாதுகாப்பு ஆர்வலர்களாக, மாணவர்களை உருவாக்கி வருகிறார். காகம், மைனா, சிட்டுக்குருவி, கிளி, இரட்டை வால், கரிச்சான், மீன்கொத்தி, கொக்கு, செம்பூத்து, காடை, கவுதாரி ஆகிய அரியவகை பறவைகள், தூக்கனாங்குருவிகள் போன்ற, வெள்ளியணை சுற்றியுள்ள பகுதிகளில் வாழ்கின்ற ஆயிரத்துக்கு அதிகமான பறவைகளை நேரில் கண்டு, அதன் அமைப்பு, வாழ்விடம், உணவு முறைகள் ஆகியவற்றை ஆய்வு செய்தும், மக்களிடம் கேட்டறிந்தும் தகவல் சேகரித்துள்ளனர் மாணவர்கள். அதிலும் ஏழாம் வகுப்பு படிக்கும் விக்னேஷ் என்ற மாணவர், ஒருபடி மேலே போய், "கடந்த மூன்று மாதமாக தன் வீட்டில் சிட்டுக்குருவி கூடுகட்டி வாழ்ந்து வருவதாகவும், அக்கூட்டில் உள்ள மூன்று குருவி குஞ்சுகளுடன் தான் தினந்தோறும் பேசி வருவதாகவும் கூறியுள்ளார். இக்குருவிகள் பறந்துசெல்லத் துவங்கும்வரை பாதுகாப்பேன் என்றும் விக்னேஷ் கூறியுள்ளார். பறவைகளை எவ்வாறு நேசிக்கவும், பாதுகாக்கவும் வேண்டும் என, பாடம் சொல்லித் தந்த ஆசான் எனது ஆசிரியர் தனபால் சார்" என்றார் விக்னேஷ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 April 2019, 14:09