தேடுதல்

ஏப்ரல் 22 - பூமிக்கோள நாள் - இளையோரின் ஈடுபாட்டை உணர்த்தும் ஓர் அடையாளப்படம் ஏப்ரல் 22 - பூமிக்கோள நாள் - இளையோரின் ஈடுபாட்டை உணர்த்தும் ஓர் அடையாளப்படம் 

பூமியில் புதுமை – பூமிக்கோள நாளும், இளையோரும்

பூமியின் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் சீரழிவு ஆகியவற்றைக் குறித்து அக்கறையற்று, அரசியல் தலைவர்கள் நடந்துகொள்வதை வெளிச்சமிட்டுக் காட்டும் இளையோர், பூமிக்கோளத்தைக் காப்பாற்றுவார்கள் என்று நம்புவோம்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

1970ம் ஆண்டு, ஏப்ரல் 22ம் தேதி, அமெரிக்க ஐக்கிய நாட்டின் பல நகரங்களில் நடத்தப்பட்ட போராட்ட ஊர்வலங்களில், 2 கோடிக்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டனர். இவர்களில் பெரும்பாலானோர், இளையோர். உலகம் தொழில்மயமாக்கப்பட்டபின், 150 ஆண்டுகளாக, பூமிக்கோளத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் நிகழ்ந்துவரும் சீரழிவுகளை எதிர்த்து இந்தப் போராட்டங்கள் நடைபெற்றன. இந்தப் போராட்டங்களை நினைவுகூரும்வண்ணம், ஒவ்வோர் ஆண்டும், ஏப்ரல் 22ம் தேதி, ‘பூமிக்கோள நாள்’ (Earth Day) சிறப்பிக்கப்படுகிறது.

2019ம் ஆண்டு ஏப்ரல் 22, இத்திங்களன்று கடைப்பிடிக்கப்பட்ட பூமிக்கோள நாளுக்கு, "நமது உயிரினங்களைக் காப்பாற்றுக" (Protect Our Species) என்ற மையக்கருத்து தெரிவு செய்யப்பட்டிருந்தது. 2018ம் ஆண்டு, "ஞெகிழி மாசுக்கேட்டை முடிவுக்குக் கொணர்க" (End Plastic Pollution) என்பது பூமிக்கோள நாளின் மையக்கருத்தாக அமைந்தது. 2020ம் ஆண்டு, 'பூமிக்கோள நாள்' ஆரம்பமானதன் 50ம் ஆண்டு நிறைவைக் கொண்டாட, இளையோரை ஈடுபடுத்தும் முயற்சிகள் துவங்கப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழல் மீதும், பூமிக்கோளத்தின் மீதும் இளையோர் காட்டும் அக்கறை ஆண்மையக்காலங்களில் தெளிவாகத் தெரிகின்றது. 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், சுவீடன் நாட்டைச் சேர்ந்த, 15 வயது நிறைந்த இளம்பெண் கிரேட்டா துன்பர்க் (Greta Thunberg) அவர்கள், Skolstrejk för klimatet ('School strike for the climate') 'காலநிலைக்காக பள்ளி புறக்கணிப்பு' என்ற சொற்கள் எழுதப்பட்ட அறிவிப்பு பலகையுடன், சுவீடன் பாராளுமன்றத்திற்கு முன் அமர்ந்தார். "எங்களுடைய எதிர்காலத்தின் மீது அரசியல்வாதிகள் பெருமளவுக் கழிவுகளை வீசுகின்றனர்" என்ற கருத்தை, இளம்பெண் துன்பர்க் அவர்கள் செய்தியாளர்களிடம் ஆணித்தரமாகக் கூறினார்.

இவரைத் தொடர்ந்து, பல நாடுகளில், இலட்சக்கணக்கான மாணவ, மாணவியர், வெள்ளிக்கிழமைகளில், “Fridays for Future’’, அதாவது, "வருங்காலத்திற்காக வெள்ளிக்கிழமைகள்" என்ற விருதுவாக்குடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏப்ரல் 17, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய புதன் பொது மறைக்கல்வி உரையில் கலந்துகொள்ள, புனித பேதுரு வளாகத்திற்கு வந்திருந்த இளம்பெண் துன்பர்க் அவர்கள், மறைக்கல்வி உரைக்குப்பின் திருத்தந்தையைச் சந்தித்தபோது, "திருத்தந்தையே, சுற்றுச்சூழல் மீது நீங்கள் காட்டிவரும் அக்கறை, எங்களுக்கு நம்பிக்கை தருகிறது" என்று கூறினார். அவரிடம் திருத்தந்தை, "தொடர்ந்து போராடுங்கள்" என்று கூறினார்.

பூமிக்கோளத்தின் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் சீரழிவு ஆகியவற்றைக் குறித்து அக்கறையேதும் இல்லாமல் அரசியல் தலைவர்கள் நடந்துகொள்ளும் கேவலத்தை வெளிச்சமிட்டுக் காட்டும் இளையோர், பூமிக்கோளத்தைக் காப்பாற்றுவார்கள் என்று நம்புவோம்.

(ஆதாரம் - https://www.earthday.org/earthday/ வலைத்தளம்)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 April 2019, 13:54