சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக, வகுப்புக்களைப் புறக்கணித்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவ, மாணவியர் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக, வகுப்புக்களைப் புறக்கணித்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவ, மாணவியர் 

பூமியில் புதுமை – உலகைக் காக்கப் போராடிவரும் இளையோர்

பருவநிலை மாற்றம் குறித்து, இளையோரும், வளர் இளம் பருவத்தினரும் உணர்ந்துள்ள அளவுக்கு, அரசியல் தலைவர்கள் உணராமல் இருப்பது, வேதனை தரும் உண்மை!

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

மார்ச் 15, வெள்ளியன்று, உலகின் 125 நாடுகளில், பள்ளி, மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் தங்கள் வகுப்புக்களைப் புறக்கணித்து, சாலைகளுக்கு வந்தனர். 2000த்திற்கும் அதிகமான நகரங்களில் ஊர்வலங்களும்,  கூட்டங்களும் நடத்தினர். அவர்களது ஒரே அறைகூவல் - பூமிக்கோளத்தைக் காப்பாற்றுங்கள்! மார்ச் 15ம் தேதியைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமைகளில் இளையோரின் போராட்டங்கள் தொடர்ந்தவண்ணம் உள்ளன. ஏப்ரல் 12, கடந்த வெள்ளியன்று, இங்கிலாந்தின் 50 நகரங்களில், இளையோரின் போராட்டம் தொடர்ந்தது.

உலகை இன்று அச்சுறுத்திவரும் பெரும் ஆபத்து, பருவநிலை மாற்றம். இதைக் குறித்து பல ஆண்டுகளுக்கு முன்பே எச்சரித்தவரும், ‘புவி வெப்பமாதல்‘ (global warming) என்ற சொற்றொடரை அறிமுகப்படுத்தியவருமான முன்னோடி அறிவியலாளர், வாலஸ் ஸ்மித் புரோக்கர் (Wallace Smith Broecker) அவர்கள், இவ்வாண்டு, பிப்ரவரி 18ம் தேதி, தன் 87வது வயதில், காலமானார். அவரைக் குறித்து, ஆதி வள்ளியப்பன் அவர்கள், 'தி இந்து' நாளிதழில் பகிர்ந்துகொண்ட கருத்துக்களின் சுருக்கம் இதோ:

அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்துவந்த புரோக்கர் அவர்கள், வளிமண்டலத்தில் அதிகரிக்கும் கரியமில வாயு, புவியை வெப்பப்படுத்தும் என்பதை, 1975ம் ஆண்டிலேயே சரியாகக் கணித்து, ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டார். கரியமில வாயு போன்றவை, வளிமண்டலத்தில் கூடிவருவதைத் தடுக்க, உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், பருவநிலை அமைப்பு, ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு எதிர்பாராதவிதமாகத் தாவி, பயங்கர அழிவை ஏற்படுத்தக்கூடும் என்று, அமெரிக்க நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்களிடம், புரோக்கர் அவர்கள் விளக்கமளித்தார். பெட்ரோல், டீசல் போன்ற, புதைப்படிவ எரிபொருள்களை பேரளவு எரிப்பதன் விளைவாக, நம் வளிமண்டலத்தில் கரியமில வாயுவை அதிகரிப்பது, ஆபத்தான பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று புரோக்கர் அவர்கள் எச்சரித்தார். (தி இந்து)

அண்மையில் இளையோர் மேற்கொண்ட போராட்டங்களில் வெளியான ஒரு முக்கிய எச்சரிக்கை, புதைப்படிவ எரிபொருள்களின் பயன்பாட்டைக் குறையுங்கள் என்பது! பருவநிலை மாற்றம் குறித்து, இளையோரும், வளர் இளம் பருவத்தினரும் உணர்ந்துள்ள அளவுக்கு, அரசியல் தலைவர்கள் உணராமல் இருப்பது, வேதனை தரும் உண்மை!

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 April 2019, 14:26