ஞெகிழிப்பொருள்களின் பயன்பாட்டுக்கு எதிராகப் போராட்டம் ஞெகிழிப்பொருள்களின் பயன்பாட்டுக்கு எதிராகப் போராட்டம் 

பூமியில் புதுமை – அரசுத்தடைகள் மட்டும் புவியைக் காப்பாற்றாது

பி.வி.சி. எனும் ஞெகிழியை, அறிவியலாளர்கள், ‘நச்சு ஞெகிழி’ என்றே குறிப்பிடுகின்றனர். காரணம், மற்ற ஞெகிழிகளைவிட, இதை எரிக்கும்போதுதான் ‘டையாக்சின்’ என்ற நச்சு வாயு மிக அதிகமாக வெளிவருகிறது.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

ஏப்ரல் 11, இவ்வியாழன் முதல், மே மாதம் 19ம் தேதி முடிய, இந்தியாவில், பாராளுமன்றத் தேர்தல், 7 கட்டமாக நடைபெற உள்ளது. இத்தேர்தல் அட்டவணையை, மார்ச் 13ம் தேதி அறிவித்த தேர்தல் ஆணையம், தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் பின்பற்றக் கூடிய இரு பரிந்துரைகளை வழங்கியது.

1. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி, தூக்கியெறியப்படும் மக்காதப் பொருள்களைத் தவிர்க்கவேண்டும். 2. ஒலிப்பெருக்கிகள் வழியே உருவாகக்கூடிய ஒலி மாசுக்கேட்டை தவிர்க்கவேண்டும் என்பன, தேர்தல் ஆணையம் தந்த பரிந்துரைகள்.

அவ்விரு பரிந்துரைகளில், தேர்தல் நாளையொட்டி, ஒலி மாசுக்கேடு நின்று போகும். ஆனால், மக்காதப் பொருள்கள் கொண்டு உருவாக்கப்பட்ட தேர்தல் விளம்பரங்கள் அடுத்தத் தலைமுறையினரின் வாழ்வை சீர்குலைக்கும் விளைவுகளை உருவாக்கும். பிரச்சாரத்தில் பயன்படுத்தப்படும் ஃபிளெக்ஸ் பதாகைகள் குறித்து, ‘துணிப்பை பிரசாரகர்’ என்ற புனைப்பெயருடன் எழுதிவரும், கிருஷ்ணன் சுப்ரமணியன் அவர்கள், ‘தி இந்து’ நாளிதழில், சில நாள்களுக்கு முன் வெளியிட்ட கருத்துக்களில் ஒரு சில இதோ:

எந்த ஒரு பொருளையும் தயாரிக்கும்போதும், பயன்படுத்தும்போதும், தூக்கி எறியும் போதும், அவை, என்னென்ன சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதைப் பொருத்தே நமது குழந்தைகளுக்கு எப்படிப்பட்ட உலகத்தை விட்டுச் செல்லப்போகிறோம் என்பது முடிவாகிறது. தேர்தலுக்கென பி.வி.சி. (Polyvinyl Chloride - PVC), எனும் ஞெகிழியால் உருவாக்கப்பட்ட ‘ஃபிளெக்ஸ்’ பதாகைகள், நம் சுற்றுச்சூழல் பாதுகாப்பை, கேலிக்கூத்தாக்கும் ஒரு பொருளாகவே உள்ளது.

பி.வி.சி. எனும் ஞெகிழியை, அறிவியலாளர்கள், ‘நச்சு ஞெகிழி’ என்றே குறிப்பிடுகின்றனர். காரணம், மற்ற ஞெகிழிகளைவிட, இதை எரிக்கும்போதுதான் ‘டையாக்சின்’ என்ற நச்சு வாயு மிக அதிகமாக வெளிவருகிறது. டையாக்சின், உணவுச் சங்கிலிக்குள் புகுந்து, புற்றுநோயைத் தூண்டும் தன்மை கொண்டது.

அரசியல்வாதிகள் மட்டும் இந்த பி.வி.சி. நச்சுப்பொருளைப் பரப்புவதற்குக் காரணம் அல்ல, நாம் ஒவ்வொருவரும், இந்த நச்சுப்பொருளை ஒவ்வொருநாளும் சுமந்து திரிகிறோம் என்பதை, கட்டுரை ஆசிரியர் விளக்குகிறார்:

உலக நாடுகள் பல, பி.வி.சி.யால் செய்யப்படும் பொம்மைகளையும், பால் புட்டிகளையும் தடை செய்துள்ளன. நாமோ, குழந்தையின் காதணி விழாவுக்கு ஃபிளெக்ஸ் பதாகை அடித்து, அந்தப் பதாகையை குப்பைக் கிடங்கில் எரித்து, அதில் உருவாகும் நச்சு வாயு வழியே, குழந்தைகளின் வாழ்வில் நஞ்சைக் கலக்கிறோம்.

நம் வாரிசுகள் நலமுடன் வாழ, இந்தப் புவியை, தகுந்த சூழலுடன் விட்டுச்செல்ல வேண்டிய கடமை, நமக்கு உள்ளது. அரசு விதிக்கும் தடைகளால் மட்டுமே, புவியைக் காப்பாற்றிவிட முடியாது. (தி இந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 April 2019, 14:39