சுற்றுச்சூழல் அழிவின் ஒரு சில முகங்கள் சுற்றுச்சூழல் அழிவின் ஒரு சில முகங்கள் 

பூமியில் புதுமை – முன்னெப்போதும் இல்லாத அளவு அழிவு

மனிதர்களின் செயல்களால் ஏற்பட்டு வரும் சுற்றுச்சூழல் பேரழிவின் அளவு, வேகம் ஆகியவற்றின் தீவிரத்தன்மையை கோடிட்டுகாட்ட இந்த யுகத்தை சுற்றுச்சூழல் பேரழிவின் யுகம் என்று ஐ.பி.பி.ஆர். -ன் அறிக்கை எச்சரிக்கிறது.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

 

நாம் வாழும் பூமி எதிர்நோக்கும் சுற்றுச்சூழல் ஆபத்தின் தீவிரத்தை, அரசியல்வாதிகளும், அதிகாரத்தில் உள்ளவர்களும், பார்க்கத் தவறிவிட்டதாக, ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. பிரித்தானியாவில், பொதுக் கொள்கைகளை ஆய்வு செய்யும் நிறுவனமான ஐ.பி.பி.ஆர். (IPPR, the Institute for Public Policy Research - UK) வெளியிட்ட ஓர் அறிக்கையில், சுற்றுச்சூழல் மீது, மனிதர்கள் ஏற்படுத்தும் தாக்கம், சமுதாயத்தையும், பொருளாதாரத்தையும், சீர்குலைக்கும் அளவுக்கு, ஆபத்தில் உள்ளதென்று கூறப்பட்டுள்ளது.

பலவகை உயிரினங்களின் அழிவு, மண் அரிப்பு, பெருங்கடல்களில் அமிலத்தன்மை அதிகரித்தல், மற்றும், காடுகள் அழிப்பு ஆகியவை உட்பட, மனித வரலாற்றில், முன்னெப்போதும் இல்லாத அளவிலும், முன்னெப்போதும் இல்லாத வேகத்துடனும், சுற்றுச்சூழல் சீரழிவு ஏற்பட்டு வருவதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

2005ஆம் ஆண்டிலிருந்து இவ்வுலகில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பு 15 மடங்காகவும், தீவிரமான வெப்பநிலை 20 மடங்காகவும், காட்டுத்தீ விபத்துக்கள் ஏழு மடங்காகவும், அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர், அறிவியலாளர்கள். பருவநிலை மாற்றத்தை உருவாக்கும் ஒரு சில காரணங்கள் அடிக்கடி பேசப்பட்டுவரும் வேளையில், வேறு சில காரணங்கள் பெரிதும் கருத்தில் கொள்ளப்படுவதில்லை.

கருத்தில் கொள்ளப்படாத விடயங்கள் என்னென்ன?

நிலத்தில் உள்ள மண், மிக வேகமாக, அதாவது, 10 முதல், 40 மடங்கு வரை வேகமாக அழிக்கப்படுகிறது. இது, இயற்கையான முறையில் மீண்டும் உருவாக்கப்படும் அளவைக் காட்டிலும் மிக அதிகம்.

20ஆம் நூற்றாண்டின் மத்திய காலத்திலிருந்து, இந்த மண் அரிப்புகளால், 30 விழுக்காடு  நிலங்கள், வேளாண்மை செய்வதற்குத் தகுதியான நிலையை இழந்துள்ளன.

2050ஆம் ஆண்டிற்குள், பூமியில் உள்ள 95 விழுக்காடு நிலப்பகுதியின் தரம் குறைந்து விடும்.

மனிதர்களின் செயல்களால் ஏற்பட்டு வரும் சுற்றுச்சூழல் பேரழிவின் அளவு, வேகம் ஆகியவற்றின் தீவிரத்தன்மையை கோடிட்டுகாட்ட இந்த யுகத்தை சுற்றுச்சூழல் பேரழிவின் யுகம் என்று ஐபிபிஆரின் அறிக்கை எச்சரிக்கிறது. (பிபிசி)

- பிபிசி இணையதளத்தில், சுற்றுச்சூழல் ஆய்வாளர், ரோஜர் ஹர்ரபின் (Roger Harrabin) அவர்கள் எழுதிய கட்டுரையிலிருந்து...

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 April 2019, 14:03