ஹவாய் தீவுக்கருகே சூரிய உதயம் ஹவாய் தீவுக்கருகே சூரிய உதயம் 

கடந்த 22 ஆண்டுகளில், கடந்த 4 ஆண்டுகள் அதிக வெப்பம்

ஏறக்குறைய 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் முடிவுற்ற பனி யுகத்திலிருந்து புவியின் காலநிலை, ஏறக்குறைய நிலையாக இருந்துவந்துள்ளவேளை, கடந்த 22 ஆண்டுகளில் வெப்பம் அதிகரித்துள்ளது

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

சூரிய ஒளி குறைவாகக் கிடைத்தால், மனிதரின் மனநிலை மற்றும் உடல்நலம் பாதிக்கப்படுவதுடன், வைட்டமின் D பற்றாக்குறையையும் அதிகரிக்கின்றது, அதேநேரம், அதிகஅளவிலான சூரிய ஒளியும், தோல், கண்கள், மற்றும் நோய் எதிர்ப்புசக்தி அமைப்பில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது என்று, உலக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மார்ச் 23, இச்சனிக்கிழமையன்று உலக வானிலை நாள் கடைப்பிடிக்கப்பட்டதை முன்னிட்டு, இப்பூமியில் வாழ்கின்ற அனைத்து உயிரினங்கள் மற்றும் காலநிலையில் சூரிய ஒளி ஏற்படுத்தும் தாக்கம் பற்றி செய்தி வெளியிட்டுள்ள, ஐ.நா.வின் உலக வானிலை ஆய்வு மையம் (WMO),  பெருங்கடல்களில் இடம்பெறும் சுழற்சிகள் மற்றும் வானிலையில் உருவாகும் மாற்றங்கள் பற்றியும் தகவல்களை வழங்கியுள்ளது.

கடந்த 22 ஆண்டுகளில், இருபது அதிக வெப்பமான ஆண்டுகள் பதிவாகியுள்ளன என்றும், இவற்றில் அதிக வெப்பமான நான்கு ஆண்டுகள், கடந்த நான்கு ஆண்டுகள் என்றும் இந்த மையம் வெளியிட்டுள்ளதையடுத்து, காலநிலை மாற்றத்தைத் தடுக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளார், ஐ.நா. பொதுச் செயலர் அந்தோனியோ கூட்டேரெஸ். வருகிற செப்டம்பர் 23ம் தேதி, நியு யார்க்கில், காலநிலை மாற்றம் குறித்த, உலக உச்சி மாநாடு ஒன்றையும், கூட்டேரெஸ் அவர்கள் நடத்தவுள்ளார்.    

சூரியன், ஏறக்குறைய 15 கோடி மில்லியன் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது,  450 கோடி ஆண்டுகளாக, காலநிலை மற்றும் பூமியின் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்துவதில் முக்கிய காரணியாக உள்ளது, ஏறக்குறைய 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் முடிவுற்ற பனி யுகத்திலிருந்து புவியின் காலநிலை, ஏறக்குறைய நிலையாக இருந்து வந்துள்ளது என்ற தகவலையும் அந்த மையம் வெளியிட்டுள்ளது. (UN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 March 2019, 15:33