சுத்தமான காற்று வேண்டும் என்று போராடும் டில்லி மாணவியர் சுத்தமான காற்று வேண்டும் என்று போராடும் டில்லி மாணவியர் 

காற்று மாசுபாட்டில் மிக மோசமான நகரம், இந்தியாவில்

காற்று மாசுபாடு குறித்து, உலகின் 3000 நகரங்களில் மேற்கொண்ட ஆய்வின் இறுதியில், இந்தியாவின் Gurugram நகரத்தின் காற்று மாசுப்பாடு மிக மோசமான நிலையில், முதலிடம் பெற்றுள்ளது.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

காற்று மாசுபாடு பெருமளவு உள்ள நகரங்களைக் குறித்து Greenpeace மற்றும் AirVisual என்ற இரு அமைப்புக்கள் மேற்கொண்ட ஆய்வில், உலகில் காற்று மாசுபாடு கொண்ட மிக மோசமான 30 நகரங்களில் 22 நகரங்கள் இந்தியாவில் உள்ளன என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இவ்விரு அமைப்புக்களின் கணிப்பில் வெளியான தர வரிசையில், ஆபத்தான அளவு காற்று மாசுபாடு கொண்ட முதல் பத்து நகரங்களில், 7 நகரங்கள் இந்தியாவிலும், இரு நகரங்கள் பாகிஸ்தானிலும், ஒரு நகரம் சீனாவிலும் உள்ளன.

உலகின் 3000 நகரங்களில் மேற்கொண்ட இந்த ஆய்வின் இறுதியில் வரிசைப்படுத்தப்பட்டுள்ள முதல் பத்து நகரங்களில், புது டில்லியின் தென்மேற்குப் பகுதியில், Uber மற்றும்  TripAdvisor போன்ற பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் அமைந்துள்ள Gurugram நகரத்தின் காற்று மாசுப்பாடு மிக மோசமான நிலையில், முதலிடம் பெற்றுள்ளது.

இதைத் தொடர்ந்து, இந்தியாவின் Ghaziabad, Faridabad, Bhiwadi, Noida, Patna, Lucknow ஆகிய நகரங்களும், பாகிஸ்தானில் உள்ள Faisalabad, Lahore ஆகிய இரு நகரங்களும், சீனாவின் Hotan நகரமும், முதல் பத்து இடங்களில் இடம்பெற்றுள்ளன.

காற்று மாசுபாட்டினால், நம் நுரையீரல், மற்றும், இரத்தத்தில் கலந்துவிடும் நச்சுப் பொருள்களால் பல்வேறு நோய்கள் உருவாகின்றன என்று கூறும் இந்த ஆய்வில், உலகெங்கும், மூச்சுத் தொடர்பான பிரச்சனைகளால் இறக்கும் மனிதர்களின் எண்ணிக்கை 70 இலட்சம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 March 2019, 14:44