விமானம் வழியாக கடத்தும்போது பிடிபட்ட ஆமைகள் விமானம் வழியாக கடத்தும்போது பிடிபட்ட ஆமைகள் 

பூமியில் புதுமை : அழிந்து வரும் ஆமைகள்

ஒருபக்கம் மலைகளை ஆக்ரமிப்பதால் வன உயிரினங்கள் ஊருக்குள் புகுகின்றன. மறுபக்கம் கடற்கரை ஓரங்களை அபகரிப்பதால் கடல்வாழ் உயிரினங்களின் பெருக்கம் தடுக்கப்படுகிறது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

கடல்சூழல் தூய்மை காவலர்களாகத் திகழ்பவை கடல் ஆமைகள். கடற்கரை ஓரங்களில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகள், காலநிலை மாறுபாடு, கடலில் கலக்கும் கழிவுகளால் ஏற்படும் சூழல்கேடு, முறையற்ற வகையிலான மீன்பிடிப்பு போன்றவற்றால் அண்மைக் காலமாக ஆமைகள் அழிவுக்கு உள்ளாகி வருகின்றன.

கருவுற்ற பெண் ஆமைகள் முட்டையிடுவதற்கு தாங்கள் பிறந்த மணற்பாங்கான கடற்கரைப் பகுதிகளையே நாடிச் செல்கின்றன. இவ்வாறு கரைக்குவரும் ஒரு ஆமை சிறு குழியினைத் தோண்டி, அதில் 100 முதல் 150 முட்டைகளை இட்டு அந்தக் குழியினை மூடிவிட்டுச் செல்கின்றன. ஏழு முதல் பத்து வாரங்களுக்குள்ளாக இந்த முட்டையில் இருந்து குஞ்சுகள் வெளிவரும். பெரும்பாலும் இரவு நேரங்களிலேயே ஆமை முட்டைகள் பொரிந்து குஞ்சுகளாக வெளியேறுவதால், இவை மற்ற விலங்குகளிடம் இருந்து தப்பித்துக் கொள்ளும்.

கடல் ஆமைகள் மாமிச உணவிற்காகவும், அதன் தோலுக்காகவும் வேட்டையாடப்படுவதாலும், முறையற்ற மீன்பிடி முறைகளாலும், கடற்கரையோரப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளினாலும் இந்திய கடலோரப் பகுதிகளுக்கு இனப்பெருக்கம் செய்யவரும் ஆமைகள் அரிதாகிவிட்டன.

கடலில் வாழும் சிறு மீன்களை உணவாகக் கொள்ளும் சொறி மீன் எனப்படும் ஜெல்லி மீன்களை, கடல் ஆமைகள் உட்கொள்கின்றன. இதனால் மீனவர்களுக்கு நல்ல விலையினை ஈட்டித்தரும் பல மீன் இனங்களின் வளர்ச்சியைப் பாதுகாப்பதுடன், கடலின் தூய்மையையும் பாதுகாக்க, கடல் ஆமைகள் பெரிதும் உதவுகின்றன. மன்னார் வளைகுடா கடல் பகுதியான தனுஷ்கோடி பகுதி, ஆமைகள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்க உகந்த பகுதியாக இருந்து வந்தது. தனுஷ்கோடிக்கு அமைக்கப்பட்ட புதிய சாலையினைப் பாதுகாப்பதற்காக இந்த மணல் பகுதியில் பெரும் பாறை கற்களைக் குவித்து தடுப்புகள் ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் கருத்தரித்த ஆமைகள் கரைக்கு வந்து முட்டையிட முடியாத சூழல் எழுந்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 March 2019, 14:58