தேடுதல்

‘மரங்களின் தாய்’ பத்மஸ்ரீ திம்மக்கா ‘மரங்களின் தாய்’ பத்மஸ்ரீ திம்மக்கா 

பூமியில் புதுமை : ‘மரங்களின் தாய்’ பத்மஸ்ரீ திம்மக்கா

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதிலும், பசுமை விழிப்புணர்வைப் பரப்புவதிலும், பேணுவதிலும் கவனத்தைக் குவித்து வாழ்ந்துவரும் பத்மஸ்ரீ திம்மக்கா அவர்கள், நானூறு ஆல மரங்கள் உட்பட எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களை நட்டுள்ளார்

மேரி தெரேசா - வத்திக்கான்

மார்ச் 16, இச்சனிக்கிழமையன்று டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில், பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்வில், 107 வயது நிரம்பிய மூதாட்டி சாலுமரத திம்மக்கா அவர்களுக்கு (Saalumarada Thimmakka), குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த அவர்கள், பத்ம ஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தார். கர்நாடக மாநிலம், ஹுலிகல் கிராமத்தைச் சேர்ந்த திம்மக்கா அவர்கள், கடந்த 65 ஆண்டுகளாக மரம் வளர்க்கும் பணியைச் செய்து வருகிறார். இதுவரையில் எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களை நட்டுள்ளார். பதினாறாவது வயதில் இவருக்குத் திருமணம் நடந்தது. ஆனால் குழந்தை பாக்கியம் இல்லை. இதனால் ஊர் மக்களின் குத்தல் பேச்சுக்களால் மனம்நொந்து, ஒருநாள் தற்கொலை செய்துகொள்ள குளத்தில் குதித்தார் திம்மக்கா. உயிர் பிழைத்துவிட்ட திம்மக்கா அவர்களை, அவரது கணவர் சிக்கையா அவர்கள், பெயர் சொல்ல வாரிசு இல்லையென்று துக்கப்படுவதைவிட, பெயர் சொல்லும்படியான சமூகப் பணிகளை நாம் செய்வோம் என்று உற்சாகப்படுத்தினார். அதன்பயனாக, பொட்டல் காடாகக் கிடந்த, அவர்கள் கிராமத்தை இணைக்கும் சாலையை சோலைவனமாக்கிப் பார்க்க விரும்பினார், திம்மக்கா. அந்தச் சாலையில், 1948ம் ஆண்டில் கணவரின் உதவியுடன் முதலில் ஓர் ஆலங்கன்றை நட்டார் திம்மக்கா. அது நன்றாக வளர ஆரம்பித்ததைப் பார்த்த மகிழ்ச்சியில், ஆலங்கன்றுகளைத் தேடி வாங்கிவந்து, அவர்கள் நட ஆரம்பித்தார்கள். குழந்தைகள் இல்லாததால், நட்ட மரக்கன்றுகளையே குழந்தைகளைப் போன்று பாவித்து வளர்த்தனர். வியர்வை சிந்த தினமும் குடத்தில் தண்ணீரைச் சுமந்து மரக்கன்றுகளை நீர் ஊற்றி வளர்த்தார் திம்மக்கா. இவர், மரங்களுக்கு தண்ணீர் ஊற்ற, சில நேரங்களில், நான்கு கிலோமீட்டர் தூரம்கூட நடந்து செல்வாராம். இத்தம்பதியர், ஏறக்குறைய நான்கு கி.மீ. தூரம் சாலையின் இருபுறமும் மரங்களை வளர்த்துள்ளனர். இப்போது, ஊருக்குள் நுழையுமுன் வழி நெடுக பச்சைப் பந்தல் போடப்பட்டிருப்பது போன்று, இந்த மரங்கள் பரந்து விரிந்து நிற்கின்றன. திம்மக்கா அவர்களுக்கு 105 வயது நடக்கையில், அவரது கணவர் இறந்துவிட்டாலும், மரக்கன்றுகள் நடுவதை மட்டும் அவர் விட்டுவிடவில்லை. இந்த பசுமைப் பணியைப் பாராட்டி, மத்திய அரசின் பத்ம ஸ்ரீ விருது உட்பட, பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார், திம்மக்கா.

திம்மக்கா அவர்களுக்கு 107 வயதானாலும், இன்றைக்கும் எங்கு புதிதாக மரக்கன்றுகள் நடலாம் என்ற சிந்தனையில், அவர் இடம் தேடி அலைகிறார். இத்தனைக்கும், திம்மக்கா அவர்கள், பள்ளி படிப்பைக்கூட முடிக்காதவர். இருந்தாலும் பசுமை குறித்த  விழிப்புணர்வைப்  பரப்ப, அதைக் காக்க அவர் வாழ்கிறார். திம்மக்கா அவர்களை, கிராம மக்கள் ‘மரங்களின் தாய்’  என்றே அழைக்கின்றனர்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 March 2019, 15:02