‘Minawao முகாமை மீண்டும் பசுமையாக்கும் திட்டம் ‘Minawao முகாமை மீண்டும் பசுமையாக்கும் திட்டம் 

பூமியில் புதுமை – சோலையாகும் புலம்பெயர்ந்தோர் முகாம்

உலக லூத்தரன் சபை கூட்டமைப்பு ஆரம்பித்த, ‘Minawao முகாமை மீண்டும் பசுமையாக்குங்கள்’ என்ற திட்டத்தில், இதுவரை அறநூறு ஹெக்டேர் அளவுக்கு, ஏறக்குறைய ஐம்பதாயிரம் மரங்கள் நடப்பட்டுள்ளன

மேரி தெரேசா - வத்திக்கான்

நைஜீரிய நாட்டின் போக்கோ ஹராம் பயங்கரவாத அமைப்பு, காமரூன் நாட்டின் எல்லையிலுள்ள கிராமங்களை, கடந்த பல ஆண்டுகளாகத் தாக்கி வருகின்றது. இந்த அமைப்பின் வன்முறைகளுக்கு அஞ்சி, ஏறக்குறைய 56 ஆயிரம் நைஜீரிய மக்கள், காமரூன் நாட்டில் அடைக்கலம் தேடியுள்ளனர். நைஜீரியாவிலிருந்து முப்பது கிலோ மீட்டர் தூரத்திலுள்ள, Minawao புலம்பெயர்ந்தோர் முகாமில் இவர்கள் தங்க வைக்கப்பட்டனர். 2013ம் ஆண்டு மே மாதத்திலிருந்து இந்த முகாமுக்கு வரத்தொடங்கிய இம்மக்களில் பலர், இரண்டு அல்லது மூன்று மாதங்கள்தானே தங்கியிருக்கப்போகிறோம் என்ற எண்ணத்தில், அப்பகுதியிலிருந்த மரங்களை வெட்டி அடுப்பு எரிப்பதற்குப் பயன்படுத்தி விட்டனர். அதனால் அந்தப் பகுதியில் வெறும் மண்ணும், பாறைகளுமே காணப்பட்டன. காமரூன் நாட்டின் வடகிழக்குப் பகுதி, பாலைநிலமாக மாறி வருவதற்கு, புலம்பெயர்ந்தோரின் இச்செயலும் ஒரு காரணம். மேலும், இந்த முகாம், சஹாரா பாலைவனத்திற்கு வடக்கே அமைந்துள்ள சஹெல் பகுதியின் கடும் வெப்பத்தால் மேலும் வறட்சியடைந்துள்ளது. தற்போது அம்மக்களின் எண்ணிக்கை ஏறக்குறைய அறுபதாயிரமாக உயர்ந்துள்ளது. இந்நிலை, அப்பகுதியில் ஏற்கனவே, இயற்கை வளங்கள் அற்றுப்போய், நிலம் பாலைநிலமாக மாறிவருவதற்கு, மேலும் ஆபத்தாக அமைந்துள்ளது. புலம்பெயர்ந்தோரின் வாழ்வும் மிகவும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இதனால் Minawao முகாம் பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களை மீண்டும் பசுமையாக்குவதற்கு, உலக லூத்தரன் கிறிஸ்தவ சபை கூட்டமைப்பு (LWF), ஈராண்டுக்குமுன்னர், ‘Minawao முகாமை மீண்டும் பசுமையாக்குங்கள்’ என்ற திட்டத்தை ஆரம்பித்தது. இத்திட்டத்தில், ஐ.நா. புலம்பெயர்ந்தோர் அமைப்பின் ஆதரவுடன், அறநூறு ஹெக்டேர் அளவுக்கு, ஏறக்குறைய ஐம்பதாயிரம் மரங்கள் நடப்பட்டுள்ளன. ஒவ்வோர் ஆண்டும் மேலும் ஐந்தாயிரம் மரங்களை நடும் திட்டத்தையும்  இக்கூட்டமைப்பு கொண்டிருக்கின்றது. வேப்பமரம், கருவேலமரம், முருங்கை மரம், leucaena பூ மரம் உட்பட சிறு மரங்கள் நடப்பட்டுள்ளன. வருங்காலத்தில் பழமரங்கள் நடுவதற்கும் அந்த அமைப்பு திட்டமிட்டுள்ளது. இதன் வழியாக அப்பகுதி மக்கள் உடல்நலத்துடன் வாழ்வதோடு, உயிர் வாழவும் ஆதாரங்களைப் பெறுவார்கள், இவர்கள் முகாமிலிருந்து தங்கள் கிராமங்களுக்குத் திரும்புகையில், பசுமையான மற்றும் வளர்ச்சியடைந்த கிராமங்களைக் காண்பார்கள் என்று ஐ.நா. கூறியுள்ளது. 

மரங்களை நடுவோம், நலமுடன் வாழ்வோம்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 March 2019, 16:01