தேடுதல்

Vatican News
FlipFlopi பாய்மரப் படகு FlipFlopi பாய்மரப் படகு  

பூமியில் புதுமை : பிளாஸ்டிக் மாசுகேடு விழிப்புணர்வு

பிளாஸ்டிக் பொருள்களால் ஏற்படும் மாசுகேடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில், கென்யாவில், உலகின் முதல் அராபிய பாரம்பரிய முக்கோண பாய்மரப் படகு, மறுசுழற்சி செய்யப்பட்ட, பிளாஸ்டிக் பொருள்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

மேரி தெரேசா - வத்திக்கான்

மறுசுழற்சி செய்யப்பட்ட, பிளாஸ்டிக் பொருள்களால் மட்டும் உருவாக்கப்பட்ட, உலகின் முதல் அராபிய பாரம்பரிய முக்கோண பாய்மரப் படகு (dhow) ஒன்று, பிளாஸ்டிக் பொருள்களால் ஏற்படும் மாசுகேடு குறித்த, ஒரு விழிப்புணர்வு கடல் பயணத்தை இந்த பிப்ரவரியில் வெற்றிகரமாக முடித்துள்ளது. FlipFlopi எனப்படும் இந்த பாய்மரப் படகு, ஆப்ரிக்காவின் கென்யா நாட்டுத் தீவான Lamuவிலிருந்து, டான்சானியா நாட்டுத் தீவான ஜான்சிபார் தீவுக்கு, ஐந்நூறு கிலோ மீட்டர் தூரம் விழிப்புணர்வு பயணத்தை மேற்கொண்டது. குப்பைகளில் வீசப்பட்ட பத்து டன்கள் பிளாஸ்டிக் பொருள்களை மறுசுழற்சி செய்து, ஒன்பது மீட்டர் நீளத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படகு, பிளாஸ்டிக் மாசுகேடு குறித்த விழிப்புணர்வைத் தூண்டி வருகிறது. Ali Skanda என்ற கைவினைஞர் தலைமையில், ஒரு தன்னார்வலர் குழுவின் உதவியுடன் இந்தப் படகு உருவாக்கப்பட்டது. இந்தப் படகு, முப்பதாயிரம் flip-flop பிளாஸ்டிக் பொருள்களை மறுசுழற்சி செய்து பல வண்ணங்களில் அமைக்கப்பட்டதால், இதற்கு flip-flopi என்ற பெயரே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த படகில் பயணித்த ஆர்வலர்கள், வழியில் பல்வேறு இடங்களில் படகை நிறுத்தி, பிளாஸ்டிக் குப்பைகளிலிருந்து வெளியாகும் நச்சுக்காற்று குறித்தும், இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், உள்ளூர் மக்கள் அறியச் செய்தனர். மேலும், பெருங்கடல்களில் பிளாஸ்டிக் குப்பைகளைக் கொட்டுவதன் எதிர்விளைவுகள் குறித்து பயிற்சிப்பாசறைகளையும் இவர்கள் நடத்தினர். குப்பைகளில் வீசப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களிலிருந்து பயனுள்ள புதிய பொருள்களை எவ்வாறு செய்வது என்பது பற்றி, சிறார்க்கும் இவர்கள் கற்றுக்கொடுத்தனர். இதன் பயனாக, கென்யாவில் 22 பயணியர் மாளிகைகள் மற்றும் உணவகங்கள் உட்பட, 29 தொழில் அமைப்புகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் ஏனையவற்றைக் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளன என்று ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பு தெரிவித்துள்ளது. ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பின் (UNEP) கடல்களைச் சுத்தம் செய்யும் குழுவும், Flipflop முயற்சிக்கு உதவியுள்ளது. ஆப்ரிக்காவின் கிழக்கு கடற்கரையில் இந்த ஆண்டு சனவரி 23ம் தேதி ஆரம்பித்த இந்தப் படகுப் பயணம், பிப்ரவரி 7ம் தேதி நிறைவுற்றது. (UN news)

11 March 2019, 15:31