தேடுதல்

Paanal பண்ணை Paanal பண்ணை 

பூமியில் புதுமை : இயற்கை விவசாயம் தந்த நம்பிக்கை

விவசாயத்தை வெளியில் இருந்து பார்க்கையில் எளிதாகத் தெரிந்தாலும், உள்ளே வந்த பிறகுதான் அதில் இருக்கின்ற நுணுக்கங்கள் தெரிகின்றன. பயிற்சியில் கற்றுக்கொண்டதைவிட அனுபவத்தில்தான் நிறைய விடயங்களைக் கற்றுக்கொள்ள முடிகிறது

மேரி தெரேசா - வத்திக்கான்

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியிலிருந்து மாதர்பாக்கம் செல்லும் சாலையில் இருக்கின்ற, ‘பனல் ஃபார்ம்ஸ் (Paanal Farms)’ என்ற மாந்தோப்பில், புஷ்பராஜ், பாலாஜி, அப்துல் ஆகிய மூன்று இளம் நண்பர்கள், இயற்கை விவசாயம் செய்து வருகின்றனர். ஐ.டி துறையில் வேலை செய்த இந்த இளைஞர்கள், இயற்கை விவசாயத்திற்கு மாறியுள்ளனர். இது பற்றி ஊடகத்திடம் பகிர்ந்துகொண்ட அந்த மூவரும் இவ்வாறு சொல்கின்றனர் - ஐ.டி துறையில் கைநிறையச் சம்பளம் கிடைத்தாலும், வேலைப்பளு காரணமாக, அது ஒரு மனஉளைச்சல் தரும் வேலையாக இருந்தது. இந்த வேலைப்பளுவில், நண்பர் பாலாஜிக்கு, புற்றுநோயால் தாக்கப்பட்டிருந்த தன்னுடைய அப்பாவைச் சரியாகக் கவனிக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் அப்பாவும் இறந்துவிட்டார். அப்போதுதான் ஏதாவது நிம்மதியான தொழிலைச் செய்ய வேண்டுமென்ற எண்ணம் எங்களுக்குத் தோன்றியது. அதோடு, அதிகச் சம்பளம் இருந்தாலும், தனியார் நிறுவனங்களில் நிலையான வேலைவாய்ப்பும் இருப்பதில்லை. அந்தக் காரணங்களால், வேறு தொழிலுக்கு மாறலாம் என முடிவுசெய்து, விவசாயத்தின் மீதிருந்த விருப்பத்தால், இதில் இறங்கினோம். சொந்த நிலம் வாங்கித்தான் விவசாயத்தை ஆரம்பிக்க வேண்டும் என முடிவு பண்ணி 2014ம் ஆண்டிலிருந்து நிலம் தேட ஆரம்பித்தோம். அதேநேரம், நாங்கள் மூவரும், சில இயற்கை விவசாய ஆர்வலர்களிடம் பயிற்சிகளையும் எடுத்துக்கொண்டோம். பயிற்சி எடுத்த உடனேயே விவசாயம் செய்வதில் ஆசை அதிகமானதும், ஊத்துக்கோட்டையில் மூன்று ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்குப் பிடித்து தொழிலைத் தொடங்கினோம். அதில் பாரம்பரிய நெல் இரகங்களைச் சாகுபடி செய்ததில் ஓரளவுக்குத் திருப்தியான மகசூல் கிடைத்தது. அதனால், தொடர்ந்து விவசாயம் செய்துகொண்டிருக்கிறோம். இதற்கிடையில், ஈராண்டுக்குமுன்னர், இந்த மாந்தோப்பையும் குத்தகைக்கு எடுத்துக்கொண்டோம். இது மொத்தம் 14 ஏக்கர். அதில் 250 பங்கனபள்ளி ரக மரங்கள், 170 பெங்களூரா ரக மரங்கள், 10 செந்தூரா ரக மரங்கள், 10 ருமானி ரக மரங்கள் என  மொத்தம் 440 மரங்கள் இருக்கின்றன. அதில் ஊடுபயிராக எள் சாகுபடி செய்திருக்கின்றோம். விவசாயத்தை ஆரம்பித்த சமயத்தில், நல்ல சம்பளம் வாங்கிக்கொண்டிருக்கின்ற உங்களுக்கு, விவசாயம் தேவையா? என பலபேர் கேட்டனர். ஆனால், இப்போது அவர்களே அசந்துபோய் நிற்கின்றனர். இவ்வாறு தெரிவித்த அந்த மூன்று இளைஞர்கள், முழு நம்பிக்கையோடு இறங்கினால் கண்டிப்பாகச் சாதிக்க முடியும் என்று சொல்கின்றனர். (நன்றி: பசுமை விகடன்)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 March 2019, 14:51