தேடுதல்

Vatican News
மார்ச் 20, சிட்டுக்குருவி உலக நாள் மார்ச் 20, சிட்டுக்குருவி உலக நாள் 

பூமியில் புதுமை – மார்ச் 20, சிட்டுக்குருவிகள் உலக நாள்

'எப்போதும் இயற்கை இயக்கம்' (Nature Forever Society) என்ற ஓர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் முன்மொழிந்த பரிந்துரையின் பேரில், 2009ம் ஆண்டு, 'சிட்டுக்குருவி உலக நாள்' உருவானது.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

சீனாவின் முன்னேற்றத்தைத் துரிதப்படுத்தும் நோக்கத்துடன், அந்நாட்டு தலைவர், மாவோ-சே-துங் அவர்கள், 1958ம் ஆண்டு, அந்நாட்டிலிருந்த, எலிகள், ஈக்கள், கொசுக்கள் மற்றும் சிட்டுக்குருவிகளைக் கொல்லுமாறு ஆணையிட்டார். சிட்டுக்குருவிகள், இலட்சக்கணக்கில் கொல்லப்பட்டதால், அவை உண்டுவந்த பூச்சிகளும், புழுக்களும் பெருகவே, பயிர்கள் அழிந்தன. இதனால், 1960ம் ஆண்டு, சீனாவில் பெரும் பஞ்சம் உருவானது. எனவே, மாவோ அவர்கள் சிட்டுக்குருவிகளைக் கொல்வதை நிறுத்தும்படி கட்டளையிட்டார். சிட்டுக்குருவிகள் குறைந்தால், அழிந்தால், இயற்கையில் விபரீதங்கள் உருவாகும் என்பதற்கு, சீனாவின் பெரும் பஞ்சம் ஒரு வரலாற்று சான்று.

இன்று, நாம் வாழும் உலகில், எந்த ஓர் அரசாணையும் இன்றி, சிட்டுக்குருவிகள், தாங்களாகவே அழிந்து வருகின்றன. வயல்கள் நகரமயமாகி வருவதன் விளைவாக, பூச்சி, புழுக்களும், தானிய வகைகளும் பெருமளவு குறைந்துவருவது, சுற்றுச்சூழலில் வெளியிடப்படும் கார்பன்-டை-ஆக்ஸைடு ஆகியவை, சிட்டுக்குருவிகளின் அழிவுக்கு முக்கிய காரணங்கள்.

இந்தியாவைச் சேர்ந்த சுற்றுச்சூழலியல் பேராசிரியர், முகம்மது திலாவார் (Mohammed Dilawar) அவர்கள், சிட்டுக்குருவிகளை பாதுகாக்க மேற்கொண்ட முயற்சி, 'எப்போதும் இயற்கை இயக்கம்' (Nature Forever Society) என்ற ஓர் அமைப்பாக உருவெடுத்தது. இந்த அமைப்பினர் முன்மொழிந்த பரிந்துரையின் பேரில், 2009ம் ஆண்டு, 'சிட்டுக்குருவி உலக நாள்' (World Sparrow Day) உருவானது. 2010ம் ஆண்டு முதல், உலகெங்கும், மார்ச் 20ம் தேதி, சிட்டுக்குருவி உலக நாள் சிறப்பிக்கப்படுகிறது.

வானகத் தந்தை அனைத்து உயிர்களையும், நம்மையும் காப்பவர் என்பதை உணர்த்த, இயேசு பயன்படுத்திய ஓர் அழகிய உருவகத்தில், காசுக்கு இரண்டு சிட்டுக்குருவிகள் விற்பதில்லையா? எனினும் அவற்றுள் ஒன்று கூட உங்கள் தந்தையின் விருப்பமின்றித் தரையில் விழாது. (மத்தேயு 10:29) என்று, கூறியுள்ள சொற்கள் நம் நினைவி்ல் நிழலாடுகின்றன.

50களிலும், 60களிலும், நம்மைச் சுற்றி நெருக்கமாகப் பறந்து திரிந்த சிட்டுக்குருவிகளும், அவை எழுப்பிய, இதமான, துடிப்பான ஒலியும், இன்று கேட்பதற்கு அரிதாகி வருகின்றன. அன்று, நம்மைக் கண்விழிக்கச் செய்த ஒலிகள், கோழியின் கூவுதலும், சிட்டுக்குருவிகளின் பாடலும். இன்றோ, நம்மைத் தூக்கத்திலிருந்து எழுப்பும் ஒலிகள் அனைத்தும், இயந்திர ஒலிகள்.

மனதுக்கு இதம் தரும் இயற்கைச் சூழலை கற்பனையில் காண்பதற்கு, நாம், ஒலிவடிவில், அடிக்கடி பயன்படுத்துவது, சிட்டுக்குருவிகளின் 'மழலைக் குரல்'. மார்ச் 20ம் தேதி நாம் சிறப்பிக்கும் 'சிட்டுக்குருவி உலக நாளன்று' இந்த 'மழலைக் குரலை' நேரடியாகக் கேட்டு மகிழ, நகரச் சூழலைவிட்டு, இயற்கையைத் தேடி வாருங்கள் என்று சிட்டுக்குருவிகள் நம்மை அழைக்கின்றன.

19 March 2019, 15:07