இத்தாலியால் காப்பாற்றப்பட்ட, புகலிடம் தேடுவோர் இத்தாலியால் காப்பாற்றப்பட்ட, புகலிடம் தேடுவோர் 

2018ல் ஒரு நாளைக்கு 6 பேர் வீதம் கடலில் மரணம்

புலம்பெயர்ந்தோரை மீட்கும் தன்னார்வலர் மீட்புப் படகுகளும், அதன் உறுப்பினர்களும் பணிகளில் எதிர்நோக்கும் கட்டுப்பாடுகள் அதிகரித்து வருகின்றன

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பாவுக்குள் நுழையும் ஆபத்தான கடல் பயணத்தில், கடந்த ஆண்டில் ஒவ்வொரு நாளும் ஆறு பேர் வீதம் இறந்தனர் என்றும், 2018ம் ஆண்டு, கடலைக் கடக்க முயற்சித்த பயணத்தில் இறப்புகள் அதிகம் இடம்பெற்ற ஆண்டு என்றும் ஐ.நா.வின், UNHCR புலம்பெயர்ந்தோர் அமைப்பு கூறியுள்ளது.

UNHCR அமைப்பு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், 2018ம் ஆண்டில், மத்திய தரைக்கடலில் 2,275 பேர் நீரில் மூழ்கி இறந்துள்ளனர் மற்றும் காணாமற்போயுள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது.

கடலில் மக்களின் வாழ்வைப் பாதுகாப்பது, நாமாகத் தெரிவு செய்வதல்ல அல்லது அரசியல் சார்ந்த விவகாரமும் அல்ல, மாறாக, அது எல்லாருடைய கடமையாகும் என்று கூறிய, UNHCR அமைப்பின் தலைவர் Filippo Grandi அவர்கள், மனித வாழ்வையும் மாண்பையும் மையப்படுத்தி அமைக்கப்படும் கொள்கைகளால், இந்தக் கொடூரங்களைத் தடுத்து நிறுத்தலாம் என்று தெரிவித்துள்ளார்.

இஸ்பெயின் நாட்டிற்குச் செல்லும் புலம்பெயர்ந்தோரில் பெரும்பாலானவர்கள் மொரோக்கோ மற்றும், கினி நாடுகளைச் சார்ந்தோர் எனவும், இத்தாலிக்குச் செல்பவர்களில்  பெரும்பாலானவர்கள், டுனிசியா மற்றும் எரிட்ரியாவைச் சார்ந்தவர்கள் என்றும் UNHCR அமைப்பு கூறியுள்ளது. (UN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 February 2019, 14:55