தேடுதல்

Vatican News
காடுகளை அன்புகூரும் மனிதர் காடுகளை அன்புகூரும் மனிதர்  (AFP or licensors)

பூமியில் புதுமை : காடுகளை காக்க போராடும் தமிழர்

காடுகளை அழிக்க முயலும், மரம் வெட்டும் கூட்டங்களையும் அவற்றின் பின்னணியில் செயல்படும் அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் எதிர்த்துப் போராடியத் தமிழர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

Sanctuary Asia என்ற ஆங்கில ஏடு, சுற்றுச்சூழல் மற்றும் காடுகளை காப்பாற்றப் போராடிய தனி மனிதர்களை கண்டுபிடித்து,  அவர்களுக்கு, ‘வனவாழ்வு விருதை’ வழங்கி கௌரவிக்கிறது. இதில், 2017ம் ஆண்டு, ஜெயச்சந்திரன் என்ற தமிழருக்கு இந்த விருது கிடைத்தது. இவர், நீலகிரி, மற்றும், சத்தியமங்கலம் காடுகளை காப்பாற்ற, 1990ம் ஆண்டு முதல் முயன்று வருகிறார். காடுகளை அழிக்க முயலும், மரம் வெட்டும் கூட்டங்களையும் அவற்றின் பின்னணியில் செயல்படும் அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும், தமிழ் நாடு பசுமை இயக்கத்தின் துணையுடன் எதிர்த்து போராடியவர் இவர். காடுகளை அழித்து புதிய சாலைகள் போடுவதைத் தடுத்தார். யானை நடமாடும் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, போராடி வென்றார். இதன் வழியாக, பல ஆயிரக்கணக்கான ஹெக்டேர் பழக் காடுகள் காப்பாற்றப்பட்டன. 2009 ஆண்டில் நீதிமன்ற வழக்கு வழியாக, ஸிகுர் யானை வழித்தடத்தில், சுற்றுலா விடுதி கட்டும் திட்டம், இவரால் நிறுத்தப்பட்டது. காட்டு மிருகங்களைக் கொல்லும்  வேட்டையாளர்களை, தமிழ்நாடு, கேரளா வனத்துறை அதிகாரிகளிடம் பிடித்துக் கொடுத்து உதவி செய்துள்ளார். இயற்கை ஆர்வலர் ஜெயச்சந்திரன் அவர்களின், இத்தகைய சத்தமில்லா சாதனைகளுக்காக, 2017ம் ஆண்டு அவருக்கு ‘வனவாழ்வு விருது’ வழங்கப்பட்டது. (பசுமைத் தமிழகம்)

01 February 2019, 14:44