தேடுதல்

மரம் நடுவதில் ஆர்வம் காட்டும் மாணவர்கள் மரம் நடுவதில் ஆர்வம் காட்டும் மாணவர்கள் 

பூமியில் புதுமை : நாளையத் தலைமுறை சிக்கலின்றி சுவாசிக்க...

எந்த ஊருக்குச் சென்றாலும், மரக்கன்றுகளை தவறாமல் வாங்கி, அங்குள்ள பொது இடங்களில், நட்டுவரும் கருப்பையா.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

அவருக்கு வயது 73. அவரது மகன் தன் மாதச்செலவுக்காகத் தரும் 1500 ரூபாயை சிக்கனமாக செலவு செய்து, மாதம்தோறும் ரூ.500க்கு மரக்கன்றுகளை வாங்கி, ராஜபாளையம் பகுதியில், முக்கிய இடங்களில், 2003-ம் ஆண்டு முதல், நட்டு, பராமரித்து வருகிறார், ராஜபாளையம் அருகேயுள்ள நக்கனேரி என்கிற இடத்தைச் சேர்ந்த கருப்பையா.

கன்றுகளை நடுவதோடு அல்லாமல், கோடை காலத்தில், வறட்சியான நாள்களில், மரக்கன்றுகள் பட்டுப்போகாமல் இருக்க, தண்ணீரை விலைக்கு வாங்கி, ஊற்றி வளர்த்து வருகிறார்.

ராஜபாளையம் பகுதி மட்டுமின்றி, எந்த ஊருக்குச் சென்றாலும், கருப்பையா அவர்கள், மரக்கன்றுகளை தவறாமல் வாங்கி, அங்குள்ள பொது இடங்களில், நட்டுவருகிறார். மறுமுறை அதே ஊருக்குச் செல்லும்போது தான் நட்ட மரக்கன்று எந்த நிலையில் உள்ளது எனப் பார்க்கத் தவறுவதில்லை கருப்பையா.

இது குறித்து கருப்பையா அவர்களிடம் கேட்டபோது, “”பறவைகளுக்கு மரம் புகலிடம் கொடுக்கும். மரம் மழையை வரவழைக்கும். மரத்தினால் ஆக்ஸிஜன் அதிகமாகி, எங்கும் பசுமையுடன் வெப்பத்தை தணிக்கும் என்பதால், எனக்கு சிறு வயது முதலே இதில் அதிக ஈடுபாடு இருந்தது. என் மகன் ஆசிரியராகப் பணிபுரிகிறார். அவர் எனக்கு மாதம்தோறும் செலவுக்கு கொடுக்கும் பணத்தில் பெரும் பகுதியை, மரக்கன்றுகள் வாங்கி நட பயன்படுத்துகிறேன். தற்போது வனத் துறையினர் எனக்கு மரக்கன்றுகளை அதிக அளவில் தந்து, ஊக்கமளித்து வருகின்றனர். என் போன்று ஊருக்கு ஒருவர் இந்த சேவையை ஆர்வத்துடன் மேற்கொண்டால் நாட்டில் வறட்சியே வராது. சுற்றுப்புறச்சூழல் நல்ல நிலையில் இருக்கும்” என்றார். ( தினமணி)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 February 2019, 13:49