தேடுதல்

இந்திய மலர் பண்ணை இந்திய மலர் பண்ணை 

பூமியில் புதுமை : இயற்கை விவசாய மாநிலம்

இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்பட்ட விளைபொருட்களை வெளி மாநிலங்களுக்கும் விற்பனை செய்யும் அளவிற்கு சிக்கிம் மாநிலம் வளர்ந்துள்ளது. Future Policy 2018 விருதுக்கு 25 நாடுகளிலிருந்து 51 பேர் பரிந்துரைக்கப்பட்டனர்

மேரி தெரேசா - வத்திக்கான்

இந்தியாவின் பசுமை மாநிலமான சிக்கிம், தேவதாரு மரக் காடுகளால், பசுமைக் கம்பளம் விரித்தாற்போல் காட்சியளிக்கின்றது. இக்காடுகள், ஆண்டின் பெரும்பகுதி மேகங்களால் சூழப்பட்டு, காட்டு ஆர்க்கிட் மலர்களால் அழகாகக் காட்சியளிக்கின்றன. ஆயினும், கடந்த பத்து ஆண்டுகளில் சிக்கிம் காடுகளில் நாற்பது விழுக்காடு அழிந்துவிட்டதாக, விண்கோள் படங்கள் அறிவிக்கின்றன. எனினும், சிக்கிம் மாநிலம், இந்தியாவிலேயே ஏன், உலகிலேயே, முற்றிலும் இயற்கை வேளாண்மைக்கு மாறிய பெருமையைப் பெற்றிருக்கிறது. இதனால், ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு, ‘Future Policy Award 2018’ என்ற விருதை வழங்கி கவுரவித்துள்ளது. இம்மாநில மக்கள் வேதிய உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் இல்லாமல் விவசாயம் செய்து வருகின்றனர். அம்மாநில முதல்வர் பவன் சாம்லிங் அவர்கள் முயற்சியால், நவீன முறை விவசாயத்திற்கு மாற்றாக, பாரம்பரிய விவசாய முறையை கடைப்பிடித்து வருகின்றனர். இங்கு, 76,393 ஹெக்டேர் பரப்பளவில் இயற்கை விவசாயம் நடந்து வருகிறது. மிளகு, ஏலக்காய், இஞ்சி, மஞ்சள், கோதுமை, பழ வகைகள் அங்கு பயிரிடப்பட்டு வருகின்றன. இதனால் சிக்கிம் முழுமையான இயற்கை விவசாயம் செய்யும் மாநிலமாக உருவெடுத்துள்ளது. மக்கள் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளும் காய்கறிகளை அதிக அளவில் இயற்கை முறையில் பயிரிட்டு வருகின்றனர். இதன் பயனாக கடந்த நிதியாண்டில் எண்பதாயிரம் மெட்ரிக் டன்கள் அளவிற்கு இயற்கையான முறையில் காய்கறிகள் அம்மாநிலத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. நிலத்தின் பெரும்பகுதி தானியங்களும், ஓரளவு காய்கறிகளும் சாகுபடி செய்யப்படுகின்றன. கூடுதல் காய்கறி சாகுபடி செய்ய போதுமான நிலம் இல்லாததால், வீட்டுத் தோட்டங்களில் காய்கறி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. வீடுகளில் காய்கறி சாகுபடி செய்ய தேவையான இடுபொருட்கள் வீட்டுதோட்டங்களுக்கும் வழங்கப்படுகின்றன. இதற்காக மாநிலம் முழுவதும் உள்ள 14 கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்கப்படுகிறது. சிக்கிம் அரசின் முயற்சியால் 66 ஆயிரம் விவசாயிகள் பயன் பெற்றுள்ளதுடன், சுற்றுலாவும் விரிவடைந்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 February 2019, 14:41