தேடுதல்

இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் 

பூமியில் புதுமை : குறைவான செலவு… நிறைவான லாபம்!

தான் இயற்கை விவசாயத்துக்கு வந்ததுக்கு முக்கியக் காரணம், தன் குழந்தைகளுக்கு நஞ்சற்ற உணவைக் கொடுக்கவேண்டும் என்பதே என்கிறார், விவசாயத்திற்காக தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் வேலையை உதறிய மாலினி.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

‘ஒற்றைப்பயிர் சாகுபடி மேற்கொள்ளக்கூடாது. விவசாயத்தில் கால்நடை வளர்ப்பும் இருக்க வேண்டும்’ என்பன, இயற்கை வேளாண் அறிவியலாளர், நம்மாழ்வாரின் முக்கியக் கோட்பாடுகள். இவற்றைக் கடைப்பிடித்து வெற்றிகரமாக விவசாயம் செய்கிறார், காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் அருகே உள்ள நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த மாலினி. இவர் பாரம்பரிய அமைப்பில் வீடு கட்டியும், ஒருங்கிணைந்த பண்ணை அமைத்தும், இயற்கை விவசாயம் மேற்கொண்டு வருகிறார். சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை செய்துகொண்டிருந்த இவர், 2013ம் ஆண்டு, தன் வேலையை விட்டுவிட்டு, இயற்கை விவசாயத்தில் இறங்கிவிட்டார். தான் இயற்கை விவசாயத்துக்கு வந்ததற்கு முக்கியக் காரணம், தன் குழந்தைகளுக்கு நஞ்சற்ற உணவைக் கொடுக்கவேண்டும் என்பதே என்று கூறுகிறார் இவர்.

நெல், கடலை, உளுந்து, எள் என்று பயிர் சுழற்சி முறையில்தான் விவசாயம் செய்கிறார். விவசாயத்துக்கு ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா, வேப்பெண்ணெய் என்று, இயற்கை இடுபொருள்களை மட்டுமே தான் பயன்படுத்துவதாக கூறுகிறார் மாலினி. பண்ணைக் கழிவுகளையும், பசுஞ்சாணத்தையும் பயன்படுத்தி 45 நாளைக்கு ஒருமுறை 150 கிலோ அளவுக்கு மண்புழு உரம் தயாரிக்கிறார். 9 காஞ்சி குட்டை ரக மாடுகள், 50 நாட்டுக் கோழிகளுடன், தேனீ வளர்ப்பு பெட்டிகளையும் வைத்திருக்கிறார். ஒருங்கிணைந்த பண்ணையே, முழுமையான விவசாயம். அப்போதுதான், ஒரு பயிர் கைவிட்டாலும், இன்னொரு பயிர் காப்பாற்றும், என்பதை நிரூபித்து வருகிறார் மாலினி.

“நாமே விளைய வெச்சு சாப்பிடுறப்ப கிடைக்கிற மகிழ்ச்சிக்கு அளவே இல்லை” என்கிறார், இயற்கை விவசாயத்திற்காக தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் வேலையை உதறிய மாலினி. (பசுமை தமிழகம்)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 February 2019, 15:13