உலக நல வாழ்வு அமைப்பின், தென்கிழக்கு ஆசியப் பகுதியின் இயக்குனர், டாக்டர் பூனம் கேத்ரபால் சிங் உலக நல வாழ்வு அமைப்பின், தென்கிழக்கு ஆசியப் பகுதியின் இயக்குனர், டாக்டர் பூனம் கேத்ரபால் சிங் 

பூமியில் புதுமை : தட்பவெப்ப மாற்றத்தால் மன நோய்

வறட்சியால், விவசாயிகள் கடுமையான மன உளைச்சலுக்குள்ளாவதாகவும், வறட்சியின் பாதிப்பால் குடும்ப உறவுகளில் முறிவுகள் ஏற்படுவதாகவும், இதனால் கவலை அதிகரிக்க, தற்கொலைகள் அதிகம் நடப்பதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

பூமி வெப்பமடைந்து வருவதால் ஏற்படும் தட்பவெப்ப மாற்றங்களால் மன நோய் ஏற்படுகிறது என்று உலக நல வாழ்வு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. பெருவெள்ளம், கடும் வறட்சி, இன்னும் பிற இயற்கைப் பேரழிவுகளால் பல்வேறு நோய்கள் மக்களைத் தாக்கக்கூடும், இதில் மன நோயும் ஒன்று என்று உலக நல வாழ்வு அமைப்பின், தென்கிழக்கு ஆசியப் பகுதியின் இயக்குனர், டாக்டர் பூனம் கேத்ரபால் சிங் (Dr Poonam Khetrapal Singh) அவர்கள் தெரிவித்துள்ளார். பூமி வெப்பமடைவதால் அடிக்கடி வெள்ளம் ஏற்படும் என்ற எச்சரிக்கைகளுக்குப் பிறகு, புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா, இங்கிலாந்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதி ஆகியவைகளுக்குச் சென்று ஆய்வுகள் மேற்கொண்டபோது, பாதிக்கப்பட்ட மக்களில் பலருக்கு மனஅழுத்த நோய் இருப்பது தெரிய வந்துள்ளது. அதாவது, இதுபோன்ற இயற்கை சீற்றங்கள் நடந்து முடிந்த ஓராண்டிற்குப் பிறகும், அச்சத்தால் பலருக்கு மனநோய் ஏற்படுவதாக அந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதேபோல், வறட்சியால் ஏற்படும் மன அளவிலான பாதிப்புகளும் ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக, விவசாயிகள் கடுமையான மன உளைச்சலுக்குள்ளாவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வறட்சியின் பாதிப்பால் குடும்ப உறவுகளில் முறிவுகள் ஏற்படுவதாகவும், இதனால் கவலை அதிகரிக்க, தற்கொலைகள் அதிகம் நடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வறட்சியால் பாதிக்கப்படும்போது, அதிகமான மக்கள் செய்யவேண்டிய வேலை, ஒரு சிலரால் மட்டுமே செய்யப்படுகிறது, இதனால் பணிச்சுமை அதிகரிக்கிறது. கடினமான வேலைகளில் ஈடுபட நேரிடுவதால் உடல் நலமும், மன நலமும் பாதிக்கப்படுவதாக, இந்த ஆய்வு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 February 2019, 15:09