தேடுதல்

சம நீதி கேட்டு போராட்டம் சம நீதி கேட்டு போராட்டம் 

தலித் கிறிஸ்தவர்களுக்கு சலுகைகள் வழங்கிய ஆந்திரப்பிரதேசம்

ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில், தலித் கிறிஸ்தவர்களின் சார்பாக, அம்மாநில சட்டப்பேரவையில், அண்மையில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம் குறித்து, இந்திய ஆயர் பேரவை தன் பாராட்டுக்களை வெளியிட்டுள்ளது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இந்தியாவின் ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில், தலித் கிறிஸ்தவர்களின் சார்பாக, அம்மாநில சட்டப்பேரவையில், அண்மையில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம் குறித்து, இந்திய ஆயர் பேரவை தன் பாராட்டுக்களை வெளியிட்டுள்ளது.

சமுதாயத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கென வழங்கப்படும் சலுகைகள், தலித் கிறிஸ்தவர்களுக்கும் வழங்கப்படும் என்று, கடந்த வாரம் ஆந்திரப்பிரதேச மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து, இந்திய ஆயர் பேரவையின், தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அலுவலகத்தின் செயலரான அருள்பணி தேவ சகாயராஜ் அவர்கள் UCA செய்தியிடம் தன் மகிழ்ச்சியை வெளியிட்டுப் பேசினார்.

இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் தலித் மக்களுக்கு உரிமைகள் கிடைக்கும் நோக்கம் நிறைவேறிவிடவில்லை, மாறாக, அம்மக்களின் போராட்டம் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது என்று அருள்பணி தேவ சகாயராஜ் அவர்கள் கூறினார்.

சீக்கிய, மற்றும் புத்த மதங்களைச் சேர்ந்த தலித் மக்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், கிறிஸ்தவர்களுக்கும் வழங்கப்படவேண்டும் என்பதற்காக, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு, பல்வேறு கிறிஸ்தவ அமைப்புக்கள் தங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளன.

1950ம் ஆண்டிலிருந்து, இந்து மதத்தைச் சேர்ந்த தலித் மக்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த சலுகைகள், 1956ம் ஆண்டு செய்யப்பட்ட ஒரு சட்டத் திருத்தம் வழியே, சீக்கியர்களுக்கும், 1990ம் ஆண்டு செய்யப்பட்ட ஒரு சட்டத் திருத்தம் வழியே, புத்த மதத்தினருக்கும் இந்திய அரசால் வழங்கப்பட்டு வருவது, குறிப்பிடத்தக்கது.

பீகார், தெலங்கானா, உத்திரப்பிரதேசம், பாண்டிச்சேரி மற்றும், ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மட்டும் தலித் கிறிஸ்தவர்களுக்கு, மாநில அளவில் சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 February 2019, 15:55