தூக்கியெறியப்படும் நெகிழிப் பொருள்களால் நம் கடற்கரையின் நிலை தூக்கியெறியப்படும் நெகிழிப் பொருள்களால் நம் கடற்கரையின் நிலை 

பூமியில் புதுமை - தேவை... சிறு மனமாற்றமே

நம்ம ஊர் தெருமுனை தேநீர்க் கடைகளில், கண்ணாடி குவளைகளைத் துறந்து, சுத்தம், வேகம், எளிது என்ற பெயரில், நெகிழி சார்ந்த பொருட்களுக்கு வேகமாக நகர்ந்துவிட்டோம்.

ஜெரோம் லூயிஸ் – வத்திக்கான்

‘நெகிழி’ என்றழைக்கப்படும் ‘பிளாஸ்டிக்’ பொருள்களின் பயன்பாடு, தமிழக அரசால் தடைசெய்யப்பட்டதிலிருந்து, நெகிழிப் பொருள்களின் பயன்பாட்டைத் தவிர்ப்பதற்கு, பல கருத்துக்கள், நம் ஊடகங்களில் வெளியாகி வருகின்றன. அவற்றில், ‘துணிப்பை பிரசாரகர்’ என்ற புனைப்பெயருடன், ‘தி இந்து’ நாளிதழில், கிருஷ்ணன் சுப்ரமணியன் என்பவர் எழுதிய ஒரு கட்டுரையிலிருந்து சில எண்ணங்கள் இதோ...

நம்ம ஊர் தெருமுனை தேநீர்க் கடைகளில், கண்ணாடி குவளைகளைத் துறந்து, சுத்தம், வேகம், எளிது என்ற பெயரில், நெகிழி சார்ந்த பொருட்களுக்கு வேகமாக நகர்ந்துவிட்டோம். நெகிழியில் சூடான பொருட்களை ஊற்றும்போது அதிலிருந்து கசியும் வேதிப்பொருள் உடலுக்குப் பேராபத்து ஏற்படுத்துவது ஒருபுறம். மற்றொருபுறம், நெகிழிக் குவளைகள் மக்காதது போலவே, காகிதக் குவளைகளில் பூசப்பட்டிருக்கும் நெகிழியை (coating), தனியே பிரித்து மறுசுழற்சி செய்ய முடியாது. இவை இரண்டுமே, மாநகராட்சிகளுக்கும் பஞ்சாயத்துகளுக்கும் குப்பையைக் கையாள்வதில் பெரும் சவாலாகவே இருந்து வருகின்றன.

நம் நாட்டில் எத்தனை குவளைகள் தூக்கி எறியப்படுகின்றன என்பதற்கு கணக்கு எதுவும் இல்லை. பேருந்து நிறுத்தங்களில், நெடுஞ்சாலை ஓரம் உள்ள ஹோட்டல்களில், இரயில் தண்டவாளங்களில் காகிதக் குவளைகள் கணக்கற்று இன்றும் சிதறிக் கிடக்கின்றன. (தி இந்து)

இந்த நிலையை மாற்ற, நாம் மீண்டும் நெகிழியற்ற பொருள்களைப் பயன்படுத்தும் மனமாற்றத்தைப் பெறவேண்டும் என்று, கிருஷ்ணன் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார். நம்மிடம் உருவாகவேண்டிய மாற்றங்கள், எவ்வளவு எளிதானவை என்பதைச் சுட்டிக்காட்ட, இக்கட்டுரை ஆசிரியர், தன் நண்பர்கள் சிலர் தற்போது பின்பற்றும் ஒரு பழக்கத்தைக் குறிப்பிடுகிறார்.

என்னுடைய நண்பர்கள் சிலர் அதிகமாகப் பயணம் செல்லக் கூடியவர்கள். தங்களுடைய கைப்பைகளில் எப்போதுமே ஒரு எவர்சில்வர் குவளை, தட்டு, தேக்கரண்டி, வைத்திருப்பார்கள். பேருந்து நிறுத்தங்களில், இரயில்களில், உணவு பரிமாற பயன்படுத்தப்பட்டு, பின்னர் தூக்கி எறியப்படும் குவளைகள், தட்டுகளைத் தவிர்க்க, இவர்களின் கைப்பையில் எடுத்துச்செல்லும் எவர்சில்வர் பாத்திரங்களிலே உணவை வாங்கிக்கொள்கின்றனர். பயணங்களில் பாத்திரங்களைக் கழுவுவதற்கு தண்ணீர் கிடைக்கிறதா என்று கேட்டால், “கை கழுவும் தண்ணீரில் சிறிது மிச்சம் செய்தால் பாத்திரத்தையும் கழுவிவிடலாம்” என்று, அதில் அடங்கியுள்ள எளிமையைப் புரிய வைக்கிறார்கள். (தி இந்து)

இத்தகைய சின்ன, சின்ன மாற்றங்களை நாம் ஒவ்வொருவரும் கொணர்ந்தால், நம்மை வாழவைக்கும் இந்தப் பூமியை, நாம் வாழவைப்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 February 2019, 14:23