தேடுதல்

உடன்பாட்டு எண்ணங்கள் உடன்பாட்டு எண்ணங்கள் 

வாரம் ஓர் அலசல் - புதிய ஆண்டில் புதிய வாழ்வு

சவால்கள் நம்முடைய வாழ்க்கைக்கு சுவை சேர்க்கின்றன என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்துவிட்டால் நாம் எதற்கும் அஞ்ச வேண்டிய அவசியமில்லை

மேரி தெரேசா – வத்திக்கான் & அ.பணி ஜூலியன்

2019ம் புதிய ஆண்டு நடைபோடத் தொடங்கியுள்ளது. இந்தப்  புதிய ஆண்டில் புதிய வாழ்வுக்கு சில ஆலோசனைகளை வழங்குகிறார், அருள்பணி ஜூலியன், தஞ்சாவூர் மறைமாவட்டம்.

வத்திக்கான் வானொலி நேயர்களுக்கு அன்பு வணக்கம். புது வருடம் பொறந்திடுச்சு, 2019ம் ஆண்டுல காலடி எடுத்து வச்சிட்டோம். இந்த புது வருடம் எல்லாருக்கும் வளமையையும், செழுமையையும் கொடுக்கக்கூடிய ஆண்டாக அமையவும், அன்பு, அமைதி, மகிழ்ச்சி ஆகியவை, நமது குடும்பங்களில் பூத்துக்குலுங்கக்கூடிய ஆண்டாக அமையவும் இறைவனை வேண்டி உங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த புது வருடத்தில நாம பல மாற்றங்களை நமது வாழ்க்கையில கொண்டு வரணுமுன்னு முடிவுபண்ணி பல திட்டங்களை வச்சிருப்போம். அப்படிப்பட்ட திட்டங்கள் நமது குடும்ப ரீதியான திட்டங்களா இருக்கலாம், அலுவல் ரீதியான திட்டங்களா இருக்கலாம் அல்லது நமது சுயமுன்னேற்றத்திற்கான திட்டங்களா இருக்கலாம். எப்படிப்பட்;ட மாற்றத்திற்குரிய திட்டங்களா இருந்தாலும் நாம் முதலில் மாற்ற வேண்டியது நம்முடைய எண்ணங்களைத்தான். காரணம் நம்முடைய எண்ணங்கள் ஆரோக்கியமாய் இருக்கின்றபொழுது நம்முடைய வாழ்க்கையும் ஆரோக்கியமாக மாறும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

ஒருமுறை ஒரு தம்பதி புதுசா வீடு கட்டி அதுல குடிபோனாங்க. ரொம்ப அழகான வீடு. எல்லா வசதியும் அந்த வீட்டில் இருந்துச்சு. ஆனா கொஞ்ச நாள் ஆக ஆக அந்த வீடு அவர்களுக்கு ராசி இல்லாத வீடு அப்படின்னு நெனைச்சாங்க. காரணம் அவர்கள் திட்டமிட்ட காரியம் எதுவுமே நடக்கவில்லையாம். அதனால அவங்க வீட்டை விக்கனும் அப்படின்னு முடிவுக்கு வந்தாங்க. விற்கக்கூடிய பொறுப்பை ஒரு தரகர்ட்ட கொடுத்தாங்க. அந்த தரகர் வீட்டைப்பற்றிய ஒரு விளம்பரத்தை செய்திதாளில் இப்படி கொடுத்தாராம்:

அழகு இல்லம்… அதிசய இல்லம்

இயற்கை தென்றல் எந்நேரமும் வருடுமில்லம்

கைதேர்ந்த கலைஞர்கள் உருவாக்கிய கனவில்லம்;

இங்கு பார்க்கிங்கிற்கு பஞ்சமில்லை

பார்த்தவர் மறப்பதிற்கில்லை

இங்கு உங்கள் கனவுகள் மெய்படும்

காரியங்கள் கைகூடும்

அப்படின்னு விளம்பரம் கொடுக்கிறார். அந்த விளம்பரத்தை இந்த தம்பதியும் பார்க்குறாங்க. ‘நம்ம வீட்டுல இவ்வளவு வசதி இருக்கா? இப்படிப்பட்ட ஒரு வீட்டுல தானே நாம வாழனும்னு ஆசைப்பட்டோம். இதைப் போயா விற்கப்போறோம்? இது சரி இல்லை’ அப்படின்னு சொல்லிட்டு அவங்க அவர்கள் முடிவை மாற்றிக்கொள்கிறார்கள்.

ஆம்! உண்மையான வாழ்க்கை மாற்றம் நமது எண்ணங்களில் இருந்துதான் தொடங்க வேண்டும். நம்மிடம் இருக்கக்கூடிய மிகப்பெரிய சொத்து நம்முடைய நேர்மறை எண்ணங்கள்தான். நம்முடைய எண்ணங்களை மேம்படுத்துகிற பொழுது நம்முடைய வாழ்வு இயல்பாகவே மேம்படுகிறது.

அதே நேரத்தில் நமது வாழ்வில் எல்லாமே எப்பொழுதுமே எளிதாக அமைவதில்லை. சங்கடங்கள், சவால்களை பல நேரங்களில் நாம் சந்திக்க வேண்டியுள்ளது. அந்த நேரங்களில் நாம் எளிதாக விரக்தி அடைந்து விடுகிறோம். அந்த விரக்திக்கு காரணம் நம்முடைய எதிர்மறை எண்ணங்கள்தான். கிரேக்க தத்துவஞானி எபிக்டெத்துஸ் சொல்றாரு: நம்முடைய வாழ்வில் நம்மை அதிகமாக அச்சுறுத்துவது நாம் சந்திக்கும் மனிதர்களோ, நிகழ்வுகளோ அல்ல. மாறாக மற்றவர்களைப் பற்றி அல்லது நம்முடைய வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளைப் பற்றி நாம் கொண்டிருக்கும் எதிர்மறை எண்ணங்கள் தான் நம்மை அதிகமாக அச்சுறுத்துகின்றன.

நாம் விவிலியத்தில பார்த்தோமென்றால் இறைவாக்கினர் எலியாவுக்கு இப்படி ஒரு சவால் வருது. எலியா இறைவாக்கினர் ஈசபேல் அரசிக்கு பயந்து இப்படி செபிக்கிறார்: “ஆண்டவரே நான் வாழ்ந்தது போதும். ஏன் உயிரை எடுத்துக்கொள்ளும்” என்று இறைவனிடம் மன்றாடுகின்றார்.  ஆனால் வானதூதர் அவரைத் தட்டி எழுப்பி “எழுந்து சாப்பிடு. ஏனெனில் நீண்டதூரம் பயணம் செய்ய வேண்டும்” அப்படின்னு சொல்றாரு. (1அரசர்கள் 19:5-7). இங்கு இறைவாக்கினர் எலியாவுக்கு வெறும் உணவு மட்டும் கொடுக்கப்படவில்லை. மாறாக நெருக்கடியான சூழ்நிலையிலும் நேர்மறையான எண்ணம் கொண்டிருக்க வேண்டும் என்று வானதூதர் அவருக்கு தைரியம் கொடுக்கிறார்.

அதேபோல் திருப்பாடல் ஆசிரியரும் 23வது திருப்பாடலில் வசனம் 4ல் "சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும் இறைவா நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்" என்று பாடுகிறார். ஆழ்ந்த பொருளுள்ள வசனம் இது. காரணம் இங்கு திருப்பாடல் ஆசிரியர், ஆண்டவரே, என்னுடைய வாழ்க்கையில் இருள்சூழ் பள்ளத்தாக்குகளே – வேறு வார்த்தைகளில் சொல்வோம் என்றால் - ஆண்டவரே என்னுடைய வாழ்க்கையில் சவால்களே – துன்பங்களே வரக்கூடாது என்று அவர் செபிக்கவில்லை. மாறாக துன்பங்கள், சவால்கள் வந்தாலும் அவற்றை இறைவனின் உதவியுடன் என்னால் தைரியமாக எதிர்கொள்ள முடியும் என்ற அவருடைய நேர்மறையான எண்ணம் – அவருடைய நம்பிக்கை இங்கு வெளிப்படுகிறது.

ஒருமுறை ஒருவர் மீன் பண்ணை வைத்து மீன் வியாபாரம் செய்ய நினைக்கிறார். ஓர் அழகான குளம் வெட்டி அதிலே நிறைய சிறிய மீன்களை இடுகிறார். அவற்றிற்கு தினமும் நல்ல உணவு கொடுக்கிறார். அந்த மீன்களும் நன்றாக வளர்கின்றன. குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு நன்றாக வளர்ந்த மீன்களை பிடித்து சந்தையில் விற்பனை செய்கிறார். மக்கள் நிறைய பேர் அவருடைய மீன்களை வாங்குகிறார்கள். அவருடைய மீன்களை சமைத்து சாப்பிட்ட மக்கள் அவரிடம் நீ வளர்த்த மீன்கள் சுவையாக இல்லை  என்று கூறி அவரிடம் மீன் வாங்குவதை நிறுத்திவிட்டார்கள். இதனால் அவருக்கு ஏகப்பட்ட நஷ்டம். இதனைப்பற்றி கவலையுடன் தன் நண்பரிடம் சொல்றாரு. அவருடைய நண்பர் சொல்றாரு: ஒரு சிறிய முதலையை வாங்கி உன்னுடைய மீன் குளத்தில இடு அப்படிங்கிறாரு. ஐயோ, அது மீன்களை சாப்பிட்டிடுமே - அப்படிங்கிறது இவருடைய கவவை. இருந்தாலும் தன் நண்பர் சொன்ன மாதிரியே செஞ்சார். அடுத்த வாரமே அவர் குளத்து மீன்களை சாப்பிட்ட மக்கள், மிகவும் சுவையாக இருக்கின்றன என்று பாராட்டினார்களாம். ஏப்படி மீன்களுக்கு இந்த சுவை வந்தது? முன்பு மீன்கள் உணவை சாப்பிட்டு சோம்பேறித்தனமாக ஓய்வெடுத்துக்கொண்டிருந்தன. அதிக இயக்கம் இல்லாததால் அதன் சதைப்பகுதி இறுகவில்லை, அதனால் சுவையும் இல்லை. இப்பொழுது முதலை வடிவில் ஓர் எதிரி வந்துவிட்டதால், தங்களைக் காப்பாற்றிக் கொள்ள மீன்கள் எப்பொழுதும் விழிப்புடன் நீந்திக்கொண்டே இருந்தன. இதனால் மீன்களின் இயக்கம் அதிகமாகி, உடல் இறுகி அவற்றின் சுவை அதிகரித்தனவாம்.

அந்த முதலையைப் போன்றதுதான் நம்முடைய வாழ்வில் வரக்கூடிய சவால்களும். சவால்கள் நம்முடைய வாழ்க்கைக்கு சுவை சேர்க்கின்றன என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்துவிட்டால் நாம் எதற்கும் அஞ்சவேண்டிய அவசியமில்லை. சவால்கள் அல்லது துன்ப நேரங்களில் கடவுள் நமக்கு சிறப்பான ஆசீர்வாதத்தை கொடுக்கிறார் என்பது கூடுதல் சிறப்பு. இதைத்தான் திருப்பாடல் 91 வசனம் 15ல் படிக்கிறோம்: “அவர்கள் என்னை நோக்கி மன்றாடும் போது, அவர்களுக்குப் பதிலளிப்பேன்;, அவர்களது துன்பத்தில் அவர்களோடு இருப்பேன். ஆவர்களைத் தப்புவித்து அவர்களைப் பெருமைபடுத்துவேன்” என்று கடவுள் வாக்குறுதி கொடுக்கிறார். எனவே நேர்மறையான எண்ணங்களால் நமது வாழ்வை அலங்கரிப்போம். இப்புதிய ஆண்டில் ஆனந்தமாய் வாழ்வோம்.(அ.பணி ஜூலியன், தஞ்சாவூர் மறைமாவட்டம்).

வாரம் ஓர் அலசல் - புதிய ஆண்டில் புதிய வாழ்வு

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 January 2019, 15:16