இந்திய பசுமை புரட்சியின் தந்தை, எம்.எஸ். சுவாமிநாதன் இந்திய பசுமை புரட்சியின் தந்தை, எம்.எஸ். சுவாமிநாதன் 

பூமியில் புதுமை : இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை

உலகம் முழுவதிலுமுள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களிலிருந்து எழுபது கௌரவ முனைவர் பட்டங்களைப் பெற்ற தமிழர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

1960-களில் இந்தியாவில் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடியது. அதைத் தடுக்க அரசு எடுத்த நடவடிக்கைகளுள் முக்கியமானது பசுமைப்புரட்சி. அதற்கு அடித்தளமிட்டவர், பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த வேளாண் அறிவியலாளரான பெஞ்சமின் பியாரி பால் (1906-1989). அதனைத் தொடர்ந்து, உணவு தானிய உற்பத்திப் பெருக்கத்துக்கான திட்டங்கள் இந்திரா காந்தி அவர்கள் பிரதமராக இருந்தபோது (1966) தீட்டப்பட்டன. அப்போதைய மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் சி.சுப்பிரமணியம் அவர்களும், வேளாண் அறிவியலாளர் எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களும், அத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தினர். உயர் விளைச்சல் தரும் வீரிய இரகங்கள், மேம்பட்ட உரப் பயன்பாடு, முறையான நீர்ப்பாசனம், பூச்சிக்கொல்லி மருந்து நிர்வாகம் ஆகியவற்றின் கலவையான இத்திட்டத்தால், 1970-களில் இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி, தேவையைவிட அதிகரித்தது. உணவுக்காகப் பிற நாடுகளைச் சார்ந்திருக்கும் நிலைமை அப்போது மாறியது. இத்திட்டத்தின் நாயகராக, தமிழகத்தைச் சேர்ந்த வேளாண் அறிவியலாளர் எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்கள் கருதப்படுகிறார். இந்திய பசுமைப்புரட்சியின் தந்தை என்றும் அவர் அழைக்கப்படுகிறார்.

சுவாமிநாதன் அவர்கள், 11 வயதாக இருந்தபோது அவரது தந்தை இறந்தார். அவரது குடும்பம், சுவாமிநாதன் அவர்கள், மருத்துவராக வேண்டும் என்று விரும்பியது. ஆனால், 1943ல் வங்கப் பஞ்சத்தின் கொடுமைகளை அறிந்த சுவாமிநாதன் அவர்கள், நாட்டின் உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன், விவசாய ஆராய்ச்சியை தனது துறையாகத் தேர்ந்தெடுத்தார். இந்திய குடிமைப்பணித் தேர்வு எழுதி ஐபிஎஸ் பணிக்குத் தேர்வானபோதும், அதில் அவர் சேரவில்லை. 1950ல் பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் தாவர விதைப் பெருக்க நிறுவனத்தில் முனைவர் பட்ட ஆராய்ச்சியில் ஈடுபட்டு, 1952ல் பட்டம் பெற்றார். 1966ல் பசுமைப்புரட்சிக்கான திட்டங்கள் தீட்டப்பட்டபோது எம்எஸ்.சுவாமிநாதன் அவர்கள், அதில் இடம்பெற்று, திட்டத்தின் வெற்றிக்கு வேளாண் ஆராய்ச்சியைப் பயன்படுத்தினார். அதன் விளைவாக, 1971 முதல் 1977 வரை, தேசிய வேளாண் ஆணைய உறுப்பினராகவும், 1972 முதல் 1979 வரை, இந்திய வேளாண் ஆராய்ச்சி கூட்டமைப்பின் (ICAR) தலைவராகவும், அவர் பொறுப்பு வகித்தார். மத்திய வேளாண் அமைச்சகத்தின் முதன்மைச் செயலாளராகவும், மத்திய திட்டக்குழு உறுப்பினராகவும், தேசிய உயிரித் தொழில்நுட்ப வாரியத்தின் தலைவராகவும் அவர் இருந்தார். பல்வேறு அரசுக் குழுக்களில் நிர்வாகியாகவும் பல கல்வி நிறுவனங்களின் உறுப்பினராகவும் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களுக்கு, உலகம் முழுவதிலுமுள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள் எழுபது கௌரவ முனைவர் பட்டங்களை அளித்துள்ளன.

ரமோன் மகசேசே விருது, உலக உணவு பரிசு, யுனெஸ்கோ மகாத்மா காந்தி விருது, இந்திரா காந்தி தேசிய ஒருமைப்பாட்டு விருது, இந்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண் உள்ளிட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட விருதுகளையும், கௌரவங்களையும் எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்கள் பெற்றுள்ளார். சென்னையில் அவர் நிறுவிய எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை நிறுவனம், நீடித்த வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சிக்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. (தினமணி)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 January 2019, 15:18