தேடுதல்

சுந்தரவனக் காடுகள் சுந்தரவனக் காடுகள்  

பூமியில் புதுமை : சுந்தரவனக் காடுகள் பாதுகாப்பு

சுந்தரவனக் காடுகள், 1997ம் ஆண்டில், யுனெஸ்கோவின் பாரம்பரியச் சின்னமாக மாறின. இக்காடுகள், கி.பி.200க்கும், 300க்கும் இடைப்பட்ட காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டன

மேரி தெரேசா - வத்திக்கான்

இந்தியாவிற்கும் பங்களாதேஷிக்கும் இடையில் உள்ள மிகப்பெரிய மாங்குரோவ் (Mangrove) சதுப்பு நிலப்பகுதிதான் சுந்தரவனக் காடுகள் என்று அழைக்கப்படுகிறது. இதன் பெரும்பாலான பகுதிகள் பங்களாதேஷ் நாட்டிற்குள் இருந்தாலும், இந்திய எல்லையில் வரும் மூன்றில் ஒரு பகுதி, சுற்றுலாப் பயணிகள் எளிதில் சென்று வரவும், மிகவும் ஏற்ற சுற்றுலாத் தலமாகவும் உள்ளது. இந்தக் காடுகள், உலகில், உவர்த்தன்மையுள்ள மாங்குரோவ்  சதுப்புநிலக் காடுகளில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இக்காடுகளில் சுந்தரி என்ற மரங்கள், பெருமெண்ணிக்கையில் காணப்படுவதால் இப்பெயர் அவற்றுக்கு வழங்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. இங்கு கோல்பாடா வகை மரங்களும் அதிகளவில் உள்ளன. ஏறக்குறைய பத்தாயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள இக்காடுகளில், 54 சிறிய தீவுகள் உள்ளன. இவற்றில் 44 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர். இக்காடுகளில், வங்காளப் புலிகள், எண்ணற்ற பறவைகள், புள்ளி மான்கள், முதலைகள், ரீசஸ் குரங்குகள், இராஜ நாகம் உள்ளிட்ட விஷப் பாம்புகள் போன்றவை உள்ளன. இந்தியப் புலிகளுக்கான காப்பகமும் இங்கு உள்ளது. 1900ம் ஆண்டுகளின் தொடக்கத்தில், டேவிட் ப்ரெய்ன் என்ற உயிரியல் ஆய்வாளர், ஏறக்குறைய 330 உயிரினங்கள், இங்கே இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். மாங்குரோவ் காடுகள், சதுப்புநிலக் கோரைகள், கடலில் மிதக்கும் தாவரங்கள், சங்கு போன்ற கடல்வாழ் உயிரினங்கள், கரியமில வாயுவைக் கிரகிக்கும் ஆற்றல் பெற்றவை. அவை சேமித்துவைக்கும் கரியுமில வாயுவுக்கு ‘நீலக் கரியமில வாயு' என்று பெயர். காற்றிலிருந்து கரியமில வாயு உள்ளிழுக்கப்படுவதால் புவிவெப்பம் தணிகிறது. ஆனால் தற்போது, சுந்தரவனக் காடுகளிலுள்ள மரங்களுக்கு, காற்றில் உள்ள கரியமில வாயுவை உறிஞ்சி, பிராணவாயுவை வெளியிடும் ஆற்றல் குறைந்து வருகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும்,  இக்காடுகளில், சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்துள்ளதால், அங்கு வாழ்கின்ற மக்களின் உடல்நலமும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது மற்றும் இந்தியாவுக்கு ஆண்டுதோறும் 1,290 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பும் ஏற்பட்டுள்ளது என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. ஆற்றில் படியும் வண்டலும், கசடும் உரிய காலத்தில் அகற்றப்படாவிட்டால் சுந்தரவனமே பாழாகிவிடும் என்று உலக வங்கி எச்சரிக்கிறது. எனவே, இந்த நிலையை மாற்ற சுந்தரவனக் காடுகள் பகுதியில் உள்ள செங்கல் சூளைகளை வேறிடங்களுக்கு மாற்ற வேண்டும். மாங்குரோவ் காடுகளை மீண்டும் அமைக்க வேண்டும். ஆற்றில் படிந்த வண்டலைப் போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும். அக்காடுகளில் அமைக்கப்பட்டுள்ள இறால் மீன் பண்ணைகளை உடனடியாக மூட வேண்டும். புலிகளின் காப்பகமாகவும் திகழும் சுந்தரவனக் காடுகளில் வெளியாட்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குரல்கொடுத்து வருகின்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 January 2019, 15:12