தேடுதல்

Vatican News
கங்கை நதியில் புனித நீராடும் பக்தரின்மேல் பறவை கங்கை நதியில் புனித நீராடும் பக்தரின்மேல் பறவை  (AFP or licensors)

பூமியில் புதுமை : முன்னேறும் பயணத்தில் பின்வாங்கலாமா?

எந்த நதியும், பிறக்கும்போதே பெருக்கெடுப்பதில்லை, ஓடும் பாதையில் எதிர்வருகின்ற தடைகளைக் கண்டு திரும்ப நினைப்பதில்லை

மேரி தெரேசா - வத்திக்கான்

விரிந்த நீலவானம், பரந்த நீலக்கடல், கனிதரும் மரம், வீசும் தென்றல், எரியும் நெருப்பு, ஓடும் நதி என, இயற்கையின் அனைத்து அற்புதங்களும் அன்றாடம் ஆயிரம் பாடங்களை நடத்துகின்றன. பாய்ந்தோடும் நதி புகட்டும் பாடங்கள் புருவங்களை உயர்த்த வைக்கின்றன. எந்த ஒரு நதியும் பிறக்கும்போதே பிரவாகமாகப் பெருக்கெடுப்பதில்லை. பிறந்த இடத்திலேயே அது தேங்கி நின்றுவிடுவதுமில்லை. அப்படியே நின்றுவிட்டால், அது நாற்றமடிக்கும் குட்டையே தவிர, நதி அல்ல. ஒவ்வோர் அடியாக முன்னோக்கி நகர்வதே நதி வாழ்வின் வளர்ச்சி. அதேநேரம், எந்த நதியும், தானாக வளருவதில்லை. செல்லும் வழியில், நீரோடைகளும், சுனைகளும் சேர்ந்தால்தான் நதியில் வெள்ளம் பெருகி, வேகமாக ஓடும். உயர்ந்த மலையில் பிறக்கும் நதி, அருவியாக, தாழ்ந்த நிலத்தில் பாய்ந்து, உயிர்காக்கும் உணவுக்கு ஆதாரமாகிறது. அனைத்து உயிர்களையும் வாழ வைக்கிறேன் என்ற ஆணவமின்றி, கடமையைச் செய்யும் கர்ம யோகியாக, தன் பயணத்தில் எந்த இடத்திலும் இளைப்பாறாமல், தன் போக்கில் அது தளராமல் நடக்கிறது. நதியின் பாதையில், மலைகளும், மேடுகளும், மரங்களும், பாறைகளும் தடுப்புச் சுவர்களாக எதிர்த்து நிற்கின்றன. தகர்க்க முடிந்த தடைகளைத் தகர்த்து, தகர்க்க முடியாத கடின பாறைகளை எதிர்த்து மோதி, ஆற்றலைச் சிதறவிடாமல் பணிந்து கொடுத்து, சுற்றி வளைந்து, அது தன் பயணத்தைத் தொடர்கிறது. இறுதியில், தான் வாழ்ந்த வாழ்வின் நிறைவோடு, எந்தக் குறையோ, புலம்பலோ இல்லாமல், தனது தனித்துவத்தைக் கலைத்து, அமைதியாகக் கடலில் கலந்து விடுகிறது. மேலும், ஓடும் நதியில், பழைய நீரை நாம் எந்த இடத்திலும் பார்க்க முடியாது. கரையில் நின்று நாம் பாரக்கும் நீர் வேறு. குளிக்கும்போது உடம்பை வந்து தழுவும் நீர் வேறு. குளித்துக் கரையேறியபின் காணும் நீர் வேறு. (நன்றி-தமிழருவி மணியன்). எனவே, எந்தப் பயணமும் தடையில்லாமல் நடப்பதில்லை, எந்தச் சாதனையும் சோதனையில்லாமல் சாத்தியமில்லை, முன்னேறும் பயணத்தில் பின்வாங்கக் கூடாது, இலக்கை அடையும்வரை எந்த இடத்திலும் தயங்கி நிற்கக் கூடாது, தடைகளைக் கண்டு கலங்கி நிற்காமல், அவற்றைத் தயக்கமின்றி தாண்ட வேண்டும் என்பன போன்ற வாழ்வுப் பாடங்களை நதி என்ற ஆசிரியரிடம் கற்றுக்கொள்வோம்.

17 January 2019, 14:45